இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக ஒன்றாக அமர்ந்து பேசிய போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தினர்.
எல்லை தகராறை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகளை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இந்தியாவும் சீனாவும் பழமையான நாகரீங்களாகும், இரு நாடுகளும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும், எதிரிகளாக அல்ல என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
அதே நேரம், பிரதமர் நரேந்திர மோதி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த சந்திப்புக்கு முன்பாக, எல்லை ரோந்து குறித்த ஒப்பந்தத்தை இந்தியா அறிவித்திருந்தது. ஆனால் எல்லை தகராறு விவகாரத்தில் இரு நாடுகளாலும் ஒரு தீர்வை எட்ட முடியவில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டன. அந்த அறிக்கைகள் வெவ்வேறு கருத்துகளை கொண்டதாக இருந்தன.
இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தால் வரிக்கு வரி அப்படியே இருந்திருக்கும், ஆனால் இது கூட்டறிக்கை இல்லையே எப்படி ஒன்றாக இருக்கும் என்று ஒருபுறம் கூறப்படுகிறது.
எனினும் இரு நாட்டு அறிக்கைகளையும் பார்க்கும் போது, அவர்களின் கருத்துகளில், முன்னுரிமைகளில் உள்ள வித்தியாசங்கள் அவற்றில் வெளிப்படுகின்றன.
இந்தியாவும் சீனாவும் இதுவரை எந்த நிலைப்பாடுகளில் இருந்தார்களோ அதே இடத்தில்தான் இப்போதும் இருப்பதாக தோன்றுகிறது, அதில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
வெவ்வேறான அறிக்கைகள்
எல்லை பிரச்னைக்கு தீர்வு காணாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பாது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனா, எல்லை பிரச்னை மற்ற விவகாரங்களின் மீது தாக்கம் செலுத்தக் கூடாது என்று விரும்புகிறது.
எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டாலும் வர்த்தக உறவுகள் தொடர வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது. ஆனால் எல்லையில் அமைதி நிலவாமல் உறவுகள் மேம்பட முடியாது என்று இந்தியா கருதுகிறது.
ஒரு பிரச்னை காரணமாக மற்ற விவகாரங்களை கிடப்பில் போடக் கூடாது என்று இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக இந்த சந்திப்புக்கு பிறகு சீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகள் மற்றும் கருத்துவேறுபாடுகளை முறையாக தீர்க்க வேண்டுமென இந்தியா வலியுறுத்துகிறது. எந்தவொரு சூழலிலும் எல்லையில் அமைதி குலையக் கூடாது என்று பிரதமர் மோதி கூறினார். நிலையான, நட்பான உறவு பிற விவகாரங்களிலும் தாக்கம் செலுத்தும் என்று இந்தியா கூறுகிறது.
முன்னேற்றத்துக்கான வாய்ப்பை இரு நாடுகளும் தவற விடக்கூடாது என்றும் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்றும் சீனா வலியுறுத்தியது. இரு நாடுகளும் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர எதிரிகளாக மாறிவிடக்கூடாது என்றும் சீனா கூறியது.
பலதுருவ உலகம் Vs பலதுருவ ஆசியா
எல்லை விவகாரம் குறித்து சீனா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் விரிவாக அதைப் பற்றி பேசவில்லை. தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருநாட்டு தலைவர்களும் எல்லை தகராறில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை வரவேற்றனர் என்று சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லையில் படைகளை விலக்குவதற்கான ஒப்பந்ததை பிரதமர் மோதி வரவேற்றார் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
சீனா பலதுருவ உலகத்தை குறித்து மூன்று முறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பலதுருவ ஆசியா குறித்து பேசவில்லை.
அமெரிக்க ஆதிக்கம் கொண்ட உலகை சீனா எதிர்க்கிறது என்பது தெரிந்ததே, எனவே பலதுருவ உலகத்தைப் பற்றி பேசுகிறது. அதே நேரம் ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்துவதாக இந்தியா கருதுகிறது. எனவே இந்தியா பலதுருவ ஆசியா குறித்து பேசுகிறது.
சீனா தனது அறிக்கையில், “இரு நாடுகளும் பல துருவ உலகத்தை உருவாக்க பணியாற்ற வேண்டும். பிரதமர் மோதியும் பலதுருவ உலகத்தை ஆதரிக்கிறார்” என்று கூறியுள்ளது.
அதே நேரம் இந்தியா தனது அறிக்கையில், இந்தியாவும் சீனாவும் பலதுருவ உலகத்தையும் பல துருவ ஆசியாவையும் உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
சீனா தன்னை தென் உலகின் முக்கிய உறுப்பினர் என்று கூறிக்கொண்டது, ஆனால் இந்தியா தனது அறிக்கையில் அப்படி எதுவும் கூறவில்லை.
சீனா இந்தியா இடையிலான எல்லைப் பிரச்னையின் பின்னணி
கடந்த 1949இல் மாவோ சேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். இந்தியா, 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியன்று, அதை அங்கீகரித்து ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்தியது.
இந்த வகையில் சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
கடந்த 1954இல் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதாவது திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியரும் சீனரும் சகோதரர்கள் என்ற கோஷமும் இருந்தது.
ஜூன் 1954 மற்றும் ஜனவரி 1957க்கு இடையில், சீனாவின் முதல் பிரதமர் சோ என்லாய் இந்தியாவிற்கு நான்கு முறை விஜயம் செய்தார். 1954 அக்டோபரில் நேருவும் சீனாவுக்கு சென்றார்.
நேருவின் சீனப் பயணம் குறித்து செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், ‘சீன மக்கள் குடியரசு உருவான பிறகு, கம்யூனிஸ்ட் அல்லாத நாட்டின் பிரதமரின் முதல் சீன பயணம் இது’ என்று குறிப்பிட்டது.
மேலும், விமான நிலையத்தில் இருந்து நகரப் பகுதி வரை சுமார் 10கி.மீ தொலைவுக்கு சீன மக்கள் நேருவை வரவேற்க கைதட்டியவாறு நின்றுகொண்டிருந்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மட்டுமின்றி, சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோவையும் நேரு சந்தித்தார்.
மறுபுறம், திபெத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்தது. சீனாவின் ஆதிக்கமும் தீவிரமடைந்தது.
1950ஆம் ஆண்டில் திபெத்தின் மீது சீனா தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியது. திபெத்தின் மீதான சீன தாக்குதல் இந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மாற்றியமைத்தது.
சீன படையெடுப்புக்கு முன், திபெத் சீனாவைவிட இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, திபெத் ஒரு சுதந்திர நாடாக இல்லை.
சீனா 1950களின் மத்தியில் இந்திய நிலப்பரப்புகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 1957-ஆம் ஆண்டு அக்சாய் சின் வழியாக மேற்கு நோக்கி 179கி.மீ நீளமான சாலையை சீனா அமைத்தது.
எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே முதல் மோதல் 1959 ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்தது.
சீன ரோந்துக் குழு லோங்ஜூவில் உள்ள வடகிழக்கு ஃபிரான்டியர் ஏஜென்சி எல்லையைத் தாக்கியது. இந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி லடாக்கின் கொங்காவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 17 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சீனா கூறியது. அப்போது தனது வீரர்கள் திடீரென தாக்கப்பட்டதாக இந்தியா கூறியிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு