• Sat. Sep 7th, 2024

24×7 Live News

Apdin News

“யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?” – அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி | Seeman questions DMK governments reason behind conducting Formula 4 race

Byadmin

Sep 1, 2024


சென்னை: “யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என பார்முலா 4 கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அறிக்கையின் விவரம் வருமாறு: மாநில அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் தற்காலச்சூழலில், பல கோடிகளைக் கொட்டியிறைத்து, சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 வாகனப்பந்தயம் நடத்தி, மக்களைப் பெருஞ்சிரமத்திற்கு ஆளாக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தீர்க்கப்படாத எத்தனையோ சிக்கல்களும், அத்தியாவசியப் பிரச்சினைகளும் வரிசைகட்டி நிற்கும்போது அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, வாகனப் பந்தயத்திற்கு அதீத முக்கியத்துவம் அளித்து, தேவையற்ற பொருட்செலவு செய்து, மக்கள் படும் அல்லல்களையும், பாடுகளையும் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் போக்கு மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும்.

அரசின் நிதிக்கருவூலம் காலியாகிற அளவுக்கு நிதிநெருக்கடி முதன்மைச் சிக்கலாக உருவெடுத்திருக்கும் தற்போதைய நிலையில், ஏறக்குறைய 200 கோடி ரூபாய்க்கு மேலாக வாரியிறைத்து வாகனப் பந்தயம் நடத்த வேண்டிய அவசியமென்ன?

மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது; சொத்து வரி 150 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது; பள்ளிப் பாடப் புத்தகங்களின் விலைகூட உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை அரசினால் இன்னும் ஏற்கப்படவில்லை; ஆசிரியப் பெருமக்களுக்கு நிறைவேற்றித் தரப்படுவதாகக் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுநாள்வரை நிறைவேற்றவில்லை; அரசுப்பள்ளிக் கூடங்களின் உட்கட்டுமானத்திற்கும், பராமரிப்புக்குமான செலவினங்கள் அரசுத் தரப்பிலிருந்து முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை; அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் வழங்குவதே பெருஞ்சிக்கலாகி நிற்கிறது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள்நலப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இன்று வரை முடியவில்லை. இவ்வாறு மக்கள்விரோத விலையுயர்வுக்கும், துறைகள் சார்ந்த முதன்மைச் சிக்கல்களுக்கும் ஒற்றைக் காரணமாகச் சொல்லப்படுவது மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையும், மிதமிஞ்சிய பொருளாதார நெருக்கடியும்தான்!

இப்பேர்ப்பட்ட சூழலில் மக்கள் நலனென்பது துளியாவது இருந்தாலும், ஏறக்குறைய 200 கோடியை வாகனப் பந்தயத்துக்காக விரயம் செய்வார்களா திராவிட மாடல் ஆட்சியாளர்கள்? பேரவலம்! துப்புரவுப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பெருந்தகைகள், ஆசிரியப் பெருமக்கள் என சமூகத்தின் அச்சாணியாகத் திகழும் அத்தனைத் துறையைச் சேர்ந்த மக்களும் தங்களது வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்து நாள்தோறும் போராடுகிறார்கள். இவர்களது கோரிக்கைகளை ஏற்று, சிக்கல்களைத் தீர்க்க முன்வராத திமுக அரசு, யார் கோரிக்கையை நிறைவேற்ற வாகனப் பந்தயம் நடத்துகிறது?

யாரை மகிழ்விக்க நடக்கிறது இந்த ஆடம்பர விளையாட்டு? தேர்தல் பத்திரங்கள் மூலமாக திமுகவுக்கு 105 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த பி.பி.ரெட்டிக்கு நன்றிக்கடனாக அவரது மருமகன் அகிலேஷ் ரெட்டியின் ரேசிங் ப்ரொமோஷன்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து வாகனப்பந்தயத்தை நடத்துகிறதா திமுக அரசு? வெட்கக்கேடு! இதே ரேசிங் ப்ரொமோஷன்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் வாகனப் பந்தயத்தை நடத்தி அதில் குளறுபடிகளும், பாதுகாப்பின்மையும் விளைந்து போட்டியே ரத்து செய்யப்பட்டதே, அப்பேர்ப்பட்ட நிறுவனத்தோடு இணைந்துதான் வாகனப் பந்தயத்தை நடத்துகிறது திமுக அரசு.

என்ன ஒரு நேர்த்தியான நிர்வாகம்? திமுக எனும் கட்சி பெற்ற பயனுக்குக் கைம்மாறு செய்ய ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் வளைத்து, மக்களை வாட்டி வதைப்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்த விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பாளரோ, பார்வையாளரோ எளிய மக்கள் இல்லை எனும்போது யாருக்காக நடக்கிறது இந்தப் பந்தயம்? இது யாருக்கான ஆட்சி? மக்களுக்கான ஆட்சியா? இல்லை! தனிப்பெருமுதலாளிகளுக்கான ஆட்சியா?

மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடிப்பது ஒருபுறமென்றால், மக்கள் அடர்த்தியும், போக்குவரத்துப்புழக்கமும் மிகுந்த மாநகரத்தின் மையப்பகுதிக்குள் இதனை நடத்துவது கொடுமையிலும் கொடுமை இல்லையா? நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், தொலைநோக்கற்ற நகரக்கட்டமைப்பாலும் போக்குவரத்து நெரிசலில் சென்னை மாநகரம் சிக்கித் தவிக்கிறது.

ஒவ்வொரு நாளின் மாலை வேளையிலும் நத்தை ஊர்வதைப் போல, வாகனங்கள் ஒவ்வொன்றும் நகர்கின்றன. நோயாளிகளின் உயிரைக் காக்கும் அவசர ஊர்திகூட சாலையில் செல்வதற்கு வழிவாய்ப்பற்று, போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டுவிடுகிறது. இத்தகைய நிலையில், மாநகரத்தின் மையப்பகுதியில் வாகனப்பந்தயத்தை நடத்துவதன் மூலம் மக்களைக் கொடுந்துன்பத்திற்கு ஆளாக்குவதைத் தவிர, வேறென்ன சாதித்துவிட முடியும்?” இவ்வாறு சீமான் சரமாரியாக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.



By admin