யுக்ரேனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 51 பேர் பலியாயினர், 15 பேரை காணவில்லை என்றும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கான அந்த இடம் எது? இதுகுறித்து ரஷ்யா என்ன சொல்கிறது?
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் போரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. முதன் முறையாக யுக்ரேன் துருப்புகள் ரஷ்யாவுக்குள் புகுந்து, அதன் கர்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன. இதன் தொடர்ச்சியாக, யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ரஷ்யா, அதற்கு அடுத்த நாளும் மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள், டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. அதன் நீட்சியாக, யுக்ரேனில் போர்க் களத்தில் இருந்து சற்று உள்பகுதியில் உள்ள பொல்ட்டாவா என்ற நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 ஏவுகணைகள் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். 2 ஏவுகணைகள் தாக்கியதாகக் கூறிய அவர், ஒன்று கல்வி நிலையத்தையும், மற்றொன்று அருகில் இருந்த மருத்துவமனையையும் தாக்கியதாக தெரிவித்தார்.
பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடைசியாக பிராந்திய அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம், ரஷ்ய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.
கல்வி நிலையமா? ராணுவப் பயிற்சி மையமா?
ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட இடம் ஒரு கல்வி நிலையம் என்று யுக்ரேன் கூறும் நிலையில், அது ராணுவப் பயிற்சி மையமாக செயல்பட்டது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குள்ளான இடம் ஒரு ராணுவப் பயிற்சி மையம் என்றும், பலியான அனைவரும் அதில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ரஷ்ய ஆதரவு டெலிகிராம் சேனல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலின் விளைவாக மதிப்பு வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் போரில் நிபுணத்துவம் வாய்ந்த வீரர்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ரைபர் என்ற டெலிகிராம் சேனல் கூறுகிறது. மிக அதிக பயிற்சி தேவைப்படும் இத்தகைய நிபுணர்களை உடனடியாக உருவாக்கிவிட முடியாது என்று அந்த சேனல் செய்தி தெரிவிக்கிறது.
ரஷ்யா குறுகிய தூர இலக்குகளை தாக்கும் இஷ்கந்தர் ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பல சேனல்கள் கூறியுள்ளன. தாக்குதலை நடத்தியதற்கு முன்பாக கண்காணிப்பு டிரோன்களைக் கொணடு வேவு பார்த்து ரஷ்யா தனது இலக்கை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், மேற்கூறிய எந்தவொரு தகவலையும் பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
மேற்கத்திய நாடுகளிடம் யுக்ரேன் கோரிக்கை
ரஷ்யாவின் உள் பகுதியை தாக்கும் ஏவுகணைகளையும், தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தருமாறு மேற்கத்திய நாடுகளிடம் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், “உலகில் வலிமை உள்ள அனைவருக்கும் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், இந்த பயங்கரவாதத்தை நிறுத்த, யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் தேவை.
“ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க நீண்ட தூரம் தாக்குதல் நடத்தும் திறன் இப்போது உடனே தேவைப்படுகிறது. அதனை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போடுவது நம் மக்களின் மரணத்தில் முடிகிறது.” என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.