ராமேஸ்வரம்: புனித நகரான ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ரூ.90 கோடியில் ராமநாத சுவாமி கோயில் கோபுரம், தூண்கள் போல நுழைவு வாயில் அமைத்து மத்திய அரசு சீரமைக்க உள்ளது. கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது.
தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 9000 பயணிகள் வந்திறங்குகின்றனர். விழா நாட்களில் இது பல மடங்கு அதிகரிக்கும்.தற்போதைய ரயில் நிலையத்தில் உள்ள 4 பிளாட்பாரத்தில் இரண்டில் கூரை இன்றியும், கழிப்பறை, ஓய்வறை, கார் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை.
ரூ. 90 கோடியில் மறு சீரமைப்பு
இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி ரூ. 90.20 கோடியில் ரயில் நிலையத்தை மறுசீரமைக்க உள்ளனர். இங்கிருந்து 18 கி.மீ.,ல் உள்ள தனுஷ்கோடிக்கும் ரூ.205 கோடியில் புதிய ரயில் பாதை, ரயில் நிலையம் அமைக்க மத்திய அரசு நிலம் கையகப்படுத்த சர்வே செய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையம் பல்வேறு வசதிகளுடன் ரயில் முனையமாக மாற உள்ளது.

நவீன வசதிகள்
ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் இரு புதிய ரயில் நிலைய கட்டடம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் கோபுர வடிவிலும், பயணிகள் நுழைவு பகுதி, வெளியேறும் பாதையில் இருபுறத்திலும் கோயில் பிரகாரம் மற்றும் தூண்கள் இருப்பது போல் கட்டடக் கலை நயத்துடன் அமைக்க உள்ளனர்.
கிழக்கு பகுதி கட்டடம் 7158 சதுர மீட்டரில் இரு தளத்துடன் அமைகிறது. இதில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தரை தளம் மற்றும் 6 தளங்கள் கட்டும் வகையில் உறுதியான அடித்தளம் அமைக்க உள்ளனர். இக்கட்டத்தில் இருந்து 1, 2, 3 ஆகிய நடை மேடைக்கு நேரடியாக செல்லும் வசதியும், 4 வது நடைமேடை செல்வதற்கு மட்டும் புதிதாக அமையவுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளது.

கிழக்கு பகுதி கட்டடத்தில் திறந்த வெளி வர்த்தக பயன்பாடு மாடியில் இருந்து நேரடியாக 4ம் நடைமேடை மற்றும் புதியதாக அமையும் 5ம் நடைமேடைக்கும் செல்லும் வசதியும் உள்ளது.
இக்கட்டடத்தில் பயணிகளுக்காக இரு எக்ஸ்லேட்டர்கள், 4 லிப்ட் (மின் தூக்கி) வசதிகள் அமைய உள்ளது. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வருகை மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு தனித்தனியாக இரு பாதைகள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியாக தனிப்பகுதி அமைக்கப்படுகிறது.
அலுவலகம் இடமாற்றம்

நடைமேடையில் கூட்ட நெரிசலை தவிர்க்க குழுவாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு முன் பகுதியில் காத்திருப்பு அறை வசதியும், வடக்கு பகுதியில் அமையும் புதிய ரயில் ரயில் நிலையத்தில் நிர்வாக அலுவலகங்களும் அமைகிறது. தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியுடன் கூடிய காப்பகங்கள், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறையுடன் கூடிய உப ரயில் நிலைய கட்டடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கு வீடுகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இன்றி சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டடங்கள் அமைய உள்ளது.
அடுத்த மாதம் துவக்கம்
நவீன ரயில் நிலைய கட்டுமானப் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த டியுவி இந்தியா(பி) லிட் என்ற தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் புதிய கட்டுமானப் பணியை கண்காணிக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.4.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இங்குள்ள நிலப்பரப்பு, மரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்பு, மண்ணின் காரத் தன்மை குறித்தும் மண் மாதிரி பரிசோதனை, ட்ரோன் மூலம் ரயில் நிலைய புகைப்படங்கள் சேகரித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அனைத்தும் முடிந்து அறிக்கை அளிக்கப்பட்டதால் கட்டுமானப் பணி அடுத்தமாதம் துவங்க உள்ளது.இதற்காக ஒப்பந்ததாரர் அலுவலக கட்டட பணி நிறைவு பெற உள்ளது. 11 இடங்களில் கட்டுமானப் பணி துவக்கப்படுகிறது.2024 ஜூலையில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ரயில்வேயில் 9 ரயில் நிலையங்கள்
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ராமேஸ்வரம், மதுரை, சென்னை எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, கேரளாவில் எர்ணாகுளம் ஜங்ஷன், எர்ணாகுளம் டவுன், கொல்லம் ஆகிய 9 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்