அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழகத்திலுள்ள கோவை நகரைக் குறிவைத்து வங்கதேச அகதிகள் ஊடுருவுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று இப்போது விவாதப் பொருளாயிருக்கிறது.
அவரது பேட்டியில், “வங்கதேசத்திலிருந்து ஊடுருவப்பார்த்த 50 பேரை நாங்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியுள்ளோம். திரிபுரா காவல் துறையினரும், எல்லை பாதுகாப்புப் படையினரும் அதேபோன்று பலரைப் பிடித்துள்ளனர். அவர்களின் முதன்மை இலக்கு கோவைதான்,” என்று கூறியிருந்தார்.
மேலும், “அவர்கள் இங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறார்கள். எனவே, கோவையில் சமீபத்தில் ஜவுளித்துறை சார்ந்த பணிகளில் சேர்ந்தவர்கள் பற்றி விசாரிக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன். சட்டவிரோதமாக ஊடுருவி வருபவர்களில் 10% பேர்தான் சிக்குகின்றனர். வங்கதேசத்திலிருந்து இந்து மக்கள்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அரசியல் அகதிகள் வரவில்லை. பொருளாதார அகதிகள்தான் வருகிறார்கள்,” என்று பொதுவெளியில் பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார் அசாம் முதல்வர்.
அவருடைய பேட்டியின் காணொளி, தமிழில் ‘சப் டைட்டில்’ உடன் ‘கோவைக்கு எச்சரிக்கை’ என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால், அங்கிருந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஓர் அசாதாரணமான சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து, அங்கிருந்து பலரும் அகதிகளாகப் புறப்பட்டு, இந்தியாவிற்குள் ஊடுருவி, தங்களுக்கு நன்கு தெரிந்த ஜவுளித்துறை சார்ந்த பணியைத் தேடிக் கொள்வதற்காக கோவையை நோக்கிச் செல்கிறார்கள் என்பதுதான் அசாம் முதல்வர் பிஸ்வா கூறியிருக்கும் கருத்தின் விளக்கமாகப் பார்க்கப்படுகிறது.
உண்மையில், கோவையில் களநிலவரம் எப்படியிருக்கிறது என்று விசாரித்துப் பார்த்தால், அச்சப்படுகிற அளவுக்கு எவ்விதமான ஊடுருவலும் இல்லை என்பதுதான் ஜவுளித்தொழில் சார்ந்தவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பகிர்கின்ற கருத்தாக உள்ளது.
என்ன நடக்கிறது கோவையில்?
80 லட்சம் தொழிலாளர்களில் 40% வடமாநிலத்தவர்கள்
ஜவுளித்தொழில் என்று பார்த்தால், கோவையில் நுாற்பாலைகளும், திருப்பூரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களுமே அதிகளவில் இருக்கின்றன. வங்கதேசத்தில் நுாற்பாலைகள் அதிகமில்லை என்பதால், அவர்களுக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பணிகள் மட்டுமே அதிகம் தெரியும், மில் வேலைகள் தெரியாது என்கிறார் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனின் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம்.
“அசாம் முதல்வர் எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னார் என்று தெரியாது. ஏதாவது உளவுத்துறை தகவல் அடிப்படையில் அப்படிச் சொல்லியிருக்கலாம். பொதுவாக, கோவை என்றால் ‘மான்செஸ்டர் ஆஃப் சவுத் இந்தியா’ என்பார்கள். அதனை வைத்து, ஜவுளித்துறை என்றாலே கோவை என்று நினைத்து, கோவைதான் அவர்களின் இலக்கு என்று அவர் சொல்லியிருக்க வேண்டுமென்று கருதுகிறேன்,” என்கிறார் அவர்.
மேலும், “நுாற்பாலைகளைப் பொருத்தவரை, ஒரு தொழிலாளரைப் பணியில் சேர்ப்பதற்கு நிறைய நடைமுறைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எங்கள் அமைப்பில் 850 மில்களில், 80 லட்சம் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். அவர்களில் 40% பேர், வடமாநிலத் தொழிலாளர்கள்தான். அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற வரிசையில் கணக்கிடப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.
இப்படிச் சேர்க்கப்படும் தொழிலாளர்களின் ஆதார் அட்டை மற்றும் ‘கே.ஒய்.சி’ எனப்படும் சுய விபரப் படிவத்தைப் பரிசீலித்து, தமிழக தொழிலாளர் நலத்துறையிடம், இத்தனை எண்ணிக்கையில் தங்களிடம் புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை முறையாகப் பதிவு செய்து, சான்று பெறுவதாகத் தெரிவிக்கிறார் அவர்.
“எங்கள் மில்களில், ஒடிஸா, உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்களே அதிகமாக பணியாற்றுகின்றனர். அதிலும் சமீபகாலமாக ஒடிஸாவிலிருந்தே அதிகளவிலான தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள்,” என்று நுாற்பாலைகளில் தொழிலாளர் சேர்க்கைக்கான நடைமுறைகளை விளக்கினார் வெங்கடாசலம்.
மேலும் பேசிய அவர், “ரஷ்யா-யுக்ரேன் போர் துவங்கியதிலிருந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நுாற்பாலைகள் பல விதமான சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு அதீதமாக மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. ஏற்கனவே இங்கு நிலைமை மோசமாக இருக்கும்போது, பெரும் எண்ணிக்கையில் புதிதாகத் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான சூழல் இல்லை. இருப்பவர்களுக்கு வேலை கொடுப்பதே சிரமமாக உள்ளது. சமீபத்திய கலவரத்தால், வங்கதேசத்தின் ஏற்றுமதி 4.5% குறைந்தது உண்மைதான். ஆனால் அங்கு சூழ்நிலை உடனடியாக சுமூகமாகி விட்டதால், வங்கதேசத்திலிருந்து இங்கு யாரும் பணிக்கு வர வாய்ப்பேயில்லை,” என்றும் அவர் பிபிசி தமிழிடம் விளக்கினார்.
கோவை, திருப்பூரில் 1.6 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக, திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேர், தொழிலாளர்களாகப் பணி செய்ததைக் கண்டறிந்து, காவல் துறையினர் அவர்களைக் கைது செய்ததாக, திருப்பூரில் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஷசாங்க் சாய் பிபிசியிடம் கூறினார்.
கோவை மாவட்டம் அன்னுார் அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் என்ற இடத்திலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது அர்சூ (26 வயது), போலாஸ் பர்மான் (28 வயது) ஆகிய இருவர், சட்டவிரோதக் குடியேற்றத்துக்காக அன்னுார் காவல்துறையினரால், கடந்த மே 2-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரத்தில் ஈரோடு மாவட்டத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை, சட்டவிரோத குடியேற்றத்துக்காகக் கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே ஆதார் அட்டையை ஆவணமாகக் கொடுத்தே பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களில் ஆதார் அட்டையைப் பெற்றது அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஷசாங்க் சாயின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதேபோல, இன்னும் ஏராளமான வங்கதேசத்தினர், போலி ஆவணங்களைக் கொடுத்து, ஆதார் அட்டைகளைப் பெற்று, இங்கு தொழிலாளர்களாகப் பணி செய்யவும் வாய்ப்புள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதைத் தடுப்பதற்குத் தொழிலாளர் நலத்துறையில் ஏதேனும் நடைமுறைகள் உள்ளனவா, புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்துத் துல்லியமான பதிவு, அல்லது கணக்கெடுப்பு உள்ளதா என்று அந்தத் துறையின் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் சில நடைமுறைகளை விளக்கினர்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், பணிக்காக தமிழகத்துக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களைப் பதிவு செய்வதற்காக ஓர் இணைய சேவை (Portal) வழங்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவுச்சான்று பெறப்படுகிறது.
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் திருப்பூர் மாவட்ட இணை இயக்குநர் சரவணன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
“திருப்பூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் மட்டும் புலம் பெயர் தொழிலாளர்கள் 90,000 பேர் வரை பணி செய்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பதிவு செய்யப்படாத, அமைப்பு சாரா தொழிலகங்கள் மற்றும் நிறுவனங்களில் இதற்கு இணையாக அல்லது அதற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்புள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவருடைய விபரங்களையும் பதிவு செய்து பதிவுச்சான்று பெற வேண்டுமென்று, முறைப்படி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தொழிலாளர் நலச்சட்டம் என்று பார்க்கும்போது, நம் மாநிலத் தொழிலாளர்களுக்கும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் எல்லாமே பொதுவானதுதான்,” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கோவை மாவட்ட இணை இயக்குநர் சீனிவாசகம் பிபிசி தமிழிடம் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில், 70,000 புலம் பெயர் தொழிலாளர்கள் பணி செய்வதாகப் பதிவு செய்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள், அமைப்பு சாரா பணிகளில் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. பதிவு செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆதார ஆவணங்களையும், நிறுவனங்களை நடத்துவோர்தான் ஆய்வு செய்து, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். நாங்கள் பரவலாக ஆய்வு நடத்தும்போது, இத்தகைய ஆவணங்களையும் ஆய்வு செய்கிறோம்,” என்று துறையின் நடைமுறையை விளக்கினார்.
அதிகாரிகள் கூறும் நடைமுறைகளின்படி பார்க்கும்போது, தொழிலகங்களால் பதிவு செய்யப்படும் புலம் பெயர் தொழிலாளர்களின் ஆதார ஆவணங்களைப் பரிசீலிக்கும் நடைமுறையோ, தொழில்நுட்பமோ, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் இல்லை என்று தெரிகிறது.
‘கோவையில் மட்டும் 3 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள்’
கோவையின் தொழிற்துறையில் வடமாநிலத் தொழிலாளர்களின் பங்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ‘கொங்கு குளோபல் ஃபோரம்’ அமைப்பின் இயக்குநர் சதீஷ்குமார், வடமாநிலத் தொழிலாளர்கள் இன்றி, கோவையில் தொழில்களே இல்லை என்கிற அளவுக்கு, அவர்களின் உழைப்பும் பங்களிப்பும் உள்ளது என்றார்.
“கோவையிலுள்ள நுாற்பாலைகளில் மட்டுமின்றி, வார்ப்படத் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், தென்னை நார் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்களிலும் பல ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பிட்டுச் சொல்வதானால், தங்க நகை தயாரிப்புத் தொழிலில் கோலோச்சி வரும் கோவையில், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்,” என்கிறார்.
மேலும், “ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கோவை மாவட்டத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான், இங்கிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. எல்லா ரயில்களுமே முழுவதுமாக நிரம்பி வழிந்து செல்கின்றன. அவர்களுக்காகவே நாங்கள் இன்னும் கூடுதலான ரயில்களை இயக்க வேண்டுமென்று ரயில்வே துறையிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார்.
திருப்பூரில் என்ன நிலைமை?
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் இப்படியாக வங்கதேசத்தினர் இங்கு தொழிலாளர்களாக பணியில் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது பற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, அவர் அதை முற்றிலும் மறுத்தார்.
“திருப்பூரில் உள்ள 2,000 யூனிட்களில், 2 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களைப் பணிக்குச் சேர்ப்பதற்குப் பல நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவர்களைக் குறித்த அனைத்து விவரங்களும் முழுமையாகச் சேகரிக்கப்படுகின்றன. ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன், தொழில் திறன் பயிற்சிக்காக அவர்களின் மாநில அரசுகளால் தரப்படும் சான்றுகளையும் வாங்கி, பல விதங்களில் அவற்றைப் பரிசீலிக்கிறோம்,” என்கிறார் அவர்.
மேலும், “இதுகுறித்து அனைத்து பனியன் நிறுவனங்களில் உள்ள மனித வளத்துறை அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது அசாம் முதல்வர் இப்படியொரு கருத்தைச் சொன்ன பிறகு, அமைப்பின் சார்பில் விழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ளோம். இதெல்லாம் ஒரு புறமிருக்க, வங்கதேசத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே பணிக்கு வரக்கூடிய சூழல் எதுவும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் அங்குள்ள ‘பிராண்டட்’ ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் விசாரித்த வரையில், அங்கு இப்போதும் தொழிலாளர்கள் வருகை 95% அளவுக்கு இருக்கிறது. அதனால் அங்கிருந்து பெருமளவில் இங்கு ஊடுருவி வந்து பணி செய்வதற்கான தேவையும், சூழலும் இல்லை என்று தெரிகிறது,” என்று தெரிவித்தார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம்.
‘இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது’
எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில், அசாம் முதல்வர் இந்தக் கருத்தைச் சொன்னதன் பின்னணியிலும், அதை சமூக ஊடகங்களில் பரப்புவதிலும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் காரணமின்றி ஒரு மாநிலத்தின் முதல்வர் எந்தக் கருத்தையும் தெரிவித்திருக்க மாட்டார் என்று அழுத்தமாகச் சொல்கிறார், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளரும், கட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினருமான எஸ்.ஆர்.சேகர்.
“வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் குழப்பத்தில் ஏராளமான வங்கதேச அகதிகளும், ரோஹிஞ்சா முஸ்லிம்களும் இந்திய எல்லையான அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டவிரோதமாக புகுவதாகத் தகவல்கள் வருகின்றன. அதை விட, அசாம் முதல்வர் சொல்லியிருப்பதுதான் கவனம் ஈர்த்துள்ளது,” என்கிறார் சேகர்.
“வங்கதேசத் தொழிலாளர்கள், ஜவுளித்துறையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், அந்தத் துறையில் பணி கிடைக்கும் கோவையைத் தேடி வந்திருப்பதாகவும், அதனால் தேசத்தின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் பிஸ்வாஷ் கூறியிருக்கிறார். அவருடைய கவலைகள் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் அவர்.
“எனவே அசாம் முதல்வரின் தகவலையே ஆதாரமாக வைத்து, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோத ஊடுருவலை தடுக்க வேண்டும். கோவையிலுள்ள தொழிலதிபர்களும், ஆலை உரிமையாளர்களும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, பணிக்குச் சேர்ப்பவர்களின் விபரங்களை முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்குச் செய்யும் கடமையாகும்,” என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.
‘கோவையில் இருப்பது அமைதியும் வளர்ச்சியும் தான்’
தி.மு.க-வைச் சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், இதை மறுக்கிறார்.
“கோவையின் அமைதியும், வளர்ச்சியும் பாரதிய ஜனதா கட்சியினரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று,” என்று அவர் கூறுகிறார்.
மேலும், “இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான். ஒரு மாநிலத்தின் முதல்வர், பொதுவெளியில் வெளிப்படையாக இப்படிப் பேசுவது இதுதான் முதல் முறை. அவருக்கு உண்மையிலேயே நாட்டின் நலனின் மீது அக்கறையிருந்தால், உள்துறைக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அப்படி இருந்தால், முதல்வர் உடனடியாகக் காவல்துறையை முடுக்கி விட்டு, அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுப்பார். அதை விடுத்து, கோவைதான் இலக்கு என்று பகிரங்கமாகக் கூறி, பீதியைக் கிளப்பியிருக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால், தேர்தல் தோல்விக்குப் பின், பாரதிய ஜனதா கட்சியினருக்குதான் கோவை முக்கிய இலக்காகவுள்ளது. அதைத்தான் அவர் கருத்து வெளிப்படுத்துகிறது,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.
காவல் துறையினர் சொல்வது என்ன?
ஆனாலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் கொடுத்த எச்சரிக்கை என்ற வகையில், அதற்கு முக்கியத்துவம் அளித்து, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஊடுருவலைத் தடுக்க தொழில் அமைப்பினரையும், வேலை வாய்ப்பு முகவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி.
திருப்பூர் மாவட்டப்பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா.
கோவையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேற்கு மண்டலத்தின் காவல்துறைத் தலைவர் டி.செந்தில்குமாரிடம் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சொன்ன கருத்து பற்றிக் கேட்டதற்கு, “அதுபற்றி உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் அச்சப்படும் அளவுக்கு, எந்தவிதமான ஊடுருவலும் இல்லை,” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “தங்க நகை தயாரிப்பு நிறுவனங்களை நடத்துவோர்க்கு, சட்டவிரோதமாகத் தொழிலாளர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஒரு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவும் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், “வங்கதேசத்தில் ஏற்பட்ட சூழ்நிலையைத் தொடர்ந்து, இங்குள்ள நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகவர்களை அழைத்து பல விதமான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம். கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு