காதல் கதைகளில் சாதாரணமாக தனது பயணத்தைத் துவங்கிய விஜய், இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகியிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் நடிகர் விஜய்யின் பயணம் பல மாற்றங்களை சந்தித்தது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014-இல் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம், விஜய்யின் திரைவாழ்வில் முக்கியமான படங்களில் ஒன்று.
வில்லு, சுறா, வேலாயுதம், வேட்டைக்காரன் என தொடர்ந்து வர்த்தக ரீதியாக சுமார் படங்களைக் கொடுத்துவந்த விஜய்க்கு 2012-இல் ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் வர்த்தக ரீதியாக மெகா ஹிட் ஒன்றைக் கொடுத்திருந்தார் ஏ.ஆர். முருகதாஸ். அதனால், ‘கத்தி’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்தப் படத்தில், தண்ணீர் பிரச்னையை மையப்படுத்தி மக்களுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் நாயகனாக வந்தார் விஜய். இதற்கு முன்பாகவும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும் இப்படி ஒரு மிகப் பெரிய பிரச்னையை முன்னிறுத்தி குரல் கொடுத்தது, கவனிக்கவைத்தது.
அதுவரை ரவுடிகள், தனி வாழ்வில் குறுக்கிடும் வில்லன்களை துவம்சம் செய்துவந்த விஜய், கத்தி படத்தில் மக்களுக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்தார். விஜய்க்கு இது முற்றிலும் ஒரு புதிய அவதாரம்.
அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் விஜய்யின் ஒவ்வொரு படமும் பெரும் திட்டமிடலோடு, கவனத்துடன் வெளியாக ஆரம்பித்தன.
இந்தநிலையில் தற்போது The Greatest of All Time திரைப்படம் வெளியாகிருக்கிறது. மேலும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு, திரையுலகைவிட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது.
விஜய்யின் ஆரம்ப கால திரைப்பயணம்
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, தந்தையின் இயக்கத்தில் மட்டுமே கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து, மெல்ல மெல்ல வெற்றிகளைப் பெற்று, உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ஒருவருக்கு, திரையுலகை விட்டு விலகும் முடிவு என்பது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது.
தற்போது வெளியாகியிருக்கும் The Greatest of All Time விஜய்யின் 68வது படம். குழந்தை நட்சத்திரமாக 1984-இல் நடிக்க வந்தவர் விஜய். முந்தைய தலைமுறை நடிகர்களோடு ஒப்பிட்டால், 40 ஆண்டுகளில் 68 திரைப்படங்கள் என்பது குறைவான எண்ணிக்கைதான்.
ஆனால், 2000ங்களின் துவக்கத்தில் திரைப்படங்களுக்கு என பிரத்யேக தொலைக்காட்சிகள் வந்துவிட்ட பிறகு, எல்லா பெரிய நடிகர்களும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டனர். அதுதான் விஜய்க்கும் நடந்தது.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற இரு துருவப் போட்டியின் மூன்றாம் தலைமுறையாக வந்தவர்கள் விஜய்யும் அஜீத்தும்.
எம்.ஜி.ஆர் – சிவாஜியின் உச்சமான காலகட்டம் முடிவுக்கு வந்த நிலையில்தான், ரஜினி – கமலின் காலம் துவங்கியது. ஆனால், ரஜினியும் – கமலும் தொடர்ந்து நடித்துவரும் நிலையிலும் புதியதொரு இரு துருவப் போட்டியை விஜய்யும் அஜீத்தும் உருவாக்கினர்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் 1984-இல் விஜயகாந்த்தை வைத்து ‘வெற்றி’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய தோற்றத்தில் தன் மகன் விஜய்யையும் நடிக்க வைத்தார் அவர்.
அதற்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி ஆகிய படங்களிலும் விஜய் சிறிய பாத்திரங்களில் நடித்தார்.
வெற்றியும் தோல்வியும்
1990களின் துவக்கத்தில் கமலும் ரஜினியும் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருந்தது. இதைச் சரியான தருணமாகக் கருதிய எஸ்.ஏ. சந்திரசேகர், ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் 1992-இல் விஜய்யை நாயகனாக அறிமுகம் செய்தார். தாயைக் கொடுமைப்படுத்தும் தந்தைக்கு பாடம் கற்பிக்கும் கல்லூரி மாணவன் வேடம். இது மிகப் பெரிய வெற்றிப் படம் இல்லை என்றாலும் விஜய் கவனிக்கப்பட்டார்.
இதற்கு அடுத்த படமான செந்தூரபாண்டியில், விஜயகாந்த்துடன் இணைந்து நடித்தார் விஜய். இந்தப் படமும் வெற்றிப்படம் இல்லையென்றாலும் ‘சின்னச் சின்ன சேதி சொல்லி’, ‘செந்தூர பாண்டிக்கொரு’ பாடல்களுக்காக படம் பேசப்பட்டது.
மூன்றாவது படமான ரசிகனும் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படம்தான். இந்தப் படத்தில் விஜய்யைவிட, வெகு கவர்ச்சியாக நடித்திருந்த சங்கவியே அதிகம் கவனிக்கப்பட்டார் என்றாலும் விஜய்க்கென மெல்ல மெல்ல ஒரு இடம் உறுதியாகிவந்ததை இந்தப் படம் உணர்த்தியது.
விஜய்யின் ஐந்தாவது படம் ராஜாவின் பார்வையிலே. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக எஸ்.ஏ. சந்திரசேகர் அல்லாமல் வேறொரு இயக்குநரின் படத்தில் நடித்தார் விஜய். படத்தை இயக்கியவர் ஜானகி சௌந்தர். இந்தப் படத்தில் இரண்டு நாயகர்கள். அந்தத் தருணத்தில் வளர்ந்துவந்த அஜீத் இன்னொரு ஹீரோ. அஜீத்தும் விஜய்யும் இதுவரை இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.
இதற்கு சில படங்களுக்குப் பிறகு, மென்மையான உணர்வுகளைச் சொல்லும் இயக்குநராக அறியப்பட்டிருந்த விக்ரமன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. இது அவருக்கு ஒரு பெரிய பிரேக். அந்தப் படம் பூவே உனக்காக.
பல நகரங்களில் வெள்ளி விழா கண்டது இந்தப் படம். தந்தையின் நிழலில் இருந்து வெளிவந்திருந்த விஜய்க்கு என ஒரு தனி அடையாளத்தை உறுதிப்படுத்தியதோடு, அவருக்கு என ஒரு சந்தையையும் உருவாக்கிய திரைப்படம் இது.
இதற்குப் பிறகு வழக்கமான சில படங்களில் நடித்த விஜய், அவ்வப்போது சில வெற்றிப் படங்களைக் கொடுத்து, மேலே வந்துகொண்டிருந்தார். இந்த சமயத்தில்தான், ஃபாஸில் தனது ‘அனியாத்திப்ராவு’ படத்தை தமிழில் ரீ – மேக் செய்ய முடிவெடுத்தார்.
அந்தப் படத்தின் நாயகனாக விஜய்யை நடிக்க வைக்க முடிவெடுத்தார் பாசில். நாயகி ஷாலினி. படத்தின் பெயர் காதலுக்கு மரியாதை. படம் சூப்பர் – டூப்பர் ஹிட். சந்தேகமேயில்லாமல் விஜய்யை தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக்கிய படம் இது.
இதற்குப் பிறகு நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் விஜய்யின் கிராஃப்பை உயர்த்திக்கொண்டே போயின.
இதற்குப் பிறகு, குஷி, ப்ரியமானவளே, ஃப்ரண்ட்ஸ், பகவதி தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார் விஜய்.
‘நடிப்பில் புதுமையை முயற்சிக்காத விஜய்’
நடுநடுவே சில படங்கள் ஓடவில்லையென்றாலும்கூட, தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை நோக்கி விஜய் நகர்ந்துகொண்டிருப்பதை இந்தப் படங்கள் காட்டின.
இந்த நிலையில்தான் 2004-இல் கில்லி திரைப்படம் வெளியானது. விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிக்க தரணி இயக்கிய இந்தப் படம், விஜய்யை அசைக்க முடியாத ஒரு இடத்தில் நிறுத்தியது.
“விஜய்யைப் பொறுத்தவரை, கில்லி படத்தில் இருந்துதான் அவர் படங்களைத் தேர்வுசெய்யும் போக்கு மாறுகிறது. அதற்கு முன்பாக ஒரு கதையில் நாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருந்தவர், கில்லி படத்திற்குப் பிறகு தனக்கான கதைகளைத் தேட ஆரம்பித்தார். இவரை மையமாக வைத்து கதைகள் உருவாக்கப்பட்டன” என்கிறார் தமிழ் சினிமா போக்கு குறித்து கவனித்து வருபவரும், அது குறித்து பல நூல்களை எழுதியவருமான பேராசிரியர் அ. ராமசாமி.
ஆனால், அவர் ஒரு தனித்துவமான நடிகராக உருவெடுக்கவில்லை, அவருக்கென நடிப்பில் எவ்வித தனித்துவமும் இல்லை என்கிறார் பல வருடங்களக தமிழ் சினிமா குறித்து எழுதி வரும் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.
“எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் ஒவ்வொரு படத்திலும் சற்றாவது மாறுபட்டு நடிக்க முயற்சிக்கிறார்கள். ரஜினி, எம்.ஜி.ஆர் ஆகியோர் தங்களுக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு வந்த நடிகர்களும் ஏதோ ஒரு கட்டத்திலாவது மாறுபட்டு நடிக்க முயற்சிப்பார்கள். ஆனால், விஜய் அதற்கு முயற்சி செய்வதேயில்லை. ஆரம்ப காலப் படங்களில் என்னவிதமான உடல்மொழியை வெளிப்படுத்தினாரோ, அதையேதான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியில் ஏதாவது ஒன்றை நினைவுவைத்து திரும்பச் செய்யக்கூட ஏதும் இல்லை” என்கிறார் ராஜன் குறை.
இது போன்ற விமர்சனங்கள் இருந்தாலும் விஜய்யின் வெற்றிப் பயணத்தில் தடை ஏதும் வரவில்லை. கில்லியின் வெற்றிக்குப் பிறகு, திருப்பாச்சி, சச்சின், சிவகாசி, போக்கிரி என தொடர்ந்து மேல்நோக்கிய அவரது பயணம் தொடர்ந்தது.
அதற்காக தோல்விகளை இல்லையென அர்த்தமில்லை. 2007-இல் வெளிவந்த போக்கிரி திரைப்படத்திற்குப் பிறகு வந்த விஜய்யின் பல திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. காவலன், நண்பன் போன்ற படங்கள் கவனிக்கப்பட்டாலும், மெகா ஹிட்டாக மாறவில்லை.
‘மக்களுக்காக பேசும் படங்களாக மாறிய விஜய் படங்கள்’
இந்த நிலையில்தான் 2012-இல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் விஜய்யை மீண்டும் வெற்றிப் பாதையில் செலுத்தியது.
இதற்குப் பிறகு ஜில்லா, கத்தி, தெறி ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தக் கட்டத்தில் விஜய் வேறு ஒரு கட்டத்திற்கு நகர்ந்திருந்தார். அதாவது, தனது திரைப்படங்களை மிகத் துல்லியமாகத் திட்டமிடுவது, பெரிய அளவில் பிரமோஷன்களைச் செய்வது, கண்டிப்பாக வெற்றிபெறுவது என பயணிக்க ஆரம்பித்தார் விஜய்.
“இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்க்கு நிச்சயமாக ஒரு திருப்பு முனையாக அமைந்தார் என்று சொல்லலாம். அவரது கத்தி படத்தில் இருந்துதான் விஜய் மக்களுக்கான ஒரு நாயகனாக தன்னை முன்னிறுத்த ஆரம்பித்தார். சர்க்கார் திரைப்படத்தில் நேரடியாகவே அரசியல் பேசினார்.
இதற்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் மெல்லமெல்ல அவருடைய படங்களில், விஜய்யின் நாயகன் பாத்திரங்கள் தனக்காக பேசுவதைத் தாண்டி, மக்களுக்காக பேச ஆரம்பித்தன. ‘சிங்கப் பெண்ணே’ போன்ற பாடல்கள் அப்படி அமைந்தவைதான். இதற்கு முன்பாக எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப் படங்களில் இதைப் போலச் செய்தார்” என்கிறார் அ. ராமசாமி.
இதற்குப் பிறகு வந்த மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய படங்கள் இப்படித்தான் உருவாகின. இந்தப் பட்டியலில் பல படங்கள் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வர்த்தக ரீதியாக பெரிய தோல்விப்படம் என எந்தப் படத்தையும் சொல்ல முடியாது.
“விஜய்யின் வெற்றி என்பது, நல்ல கதைகளைத் தேர்வுசெய்வதில் இருக்கிறது. அதில் அவர் ஒழுங்காக நடித்துக்கொடுக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி விஜய்யிடம் நமக்குப் புலப்படாத ஒரு கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சி எதிலிருந்து உருவாகிறது என்பதைச் சொல்ல முடியாது. தவிர நன்றாக நடனமாடுவதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.” என்கிறார் ராஜன் குறை.
முழு நேர அரசியலில் வெற்றி பெறுவரா நடிகர் விஜய்?
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பிறகு பின்வாங்கிய ரஜினிகாந்த், தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கும் விஜய் ஆகிய மூவரின் திரைப்படங்களையும் எடுத்துக்கொண்டால், எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மட்டுமே அவரது அரசியலையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை என்கிறார் பேராசிரியர் அ. ராமசாமி.
“கத்தி படத்திற்கு முன்பாக, விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வந்தவராக, போராட்டங்கள் நடத்தியவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. ரஜினியைப் பொறுத்தவரை சினிமாவில் அவர் நாயகனாக நடிக்கத் துவங்கிய காலத்தில் அவருக்கு ஒரு நெகட்டிவ் இமேஜ்தான் இருந்தது.
வர்த்தகரீதியாக அவர் தொடர் வெற்றிகளைக் கொடுத்தாலும் சினிமாவில் வரும் தன்னுடைய பாத்திரங்களின் மூலம் தான் மக்களுக்கு தான் நல்லதுசெய்யக்கூடிய தலைவர் என்ற தோற்றத்தை அவர் உருவாக்கவில்லை.
எம்.ஜி.ஆர் மட்டும்தான் சினிமாவுக்கு வெளியில் இருந்த தனது அரசியலை சினிமாவுக்குள்ளேயும் புகுத்துவதில் கவனமாக இருந்தார். விவசாயிகள், மீனவர்கள், ரிக்ஷாக்காரர்கள் போன்ற பல்வேறு அடித்தள மக்கள் திரளுக்கு போராடுபவராக தனது அரசியல் இமேஜை முன்னெடுத்தார். இதனை பல ஆண்டுகளாக அவர் செய்தார். ஆகவே சினிமாவில் வரும் எம்.ஜி.ஆர். வேறு, அரசியலில் உள்ள எம்.ஜி.ஆர். வேறு என்ற எண்ணமே ஏற்படவில்லை. ஆனால், விஜய் தன் திரைப்பயணத்தை அப்படி அமைத்துக்கொள்ளவில்லை” என்கிறார் அ. ராமசாமி.
ஆனால், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இப்போது எதையும் கணிப்பது கடினம் என்கிறார்கள் ராஜன் குறையும் அ. ராமசாமியும்.
“பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பல விஷயங்களில் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள், ரசிகர்களையும் மற்றவர்களையும் பல்வேறு இடங்களுக்குச் சென்று சந்திப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், இவரிடம் அதுபோல எந்தச் செயல்பாடும் இல்லை. அரசியலை ரொம்ப எளிதாக எடுத்துக்கொண்டாரோ என்று தோன்றுகிறது” என்கிறார் ராஜன் குறை.
எம்.ஜி.ஆர். காலத்து அரசியலில் இருந்து தமிழ்நாடு வெகுதூரம் விலகிவந்துவிட்டது என்கிறார் அ. ராமசாமி.
“தமிழக அரசியல் ஒரு பின் நவீனத்துவ போக்கிற்கு வந்துவிட்டது. பல சிறிய சிறிய கட்சிகள் பல்வேறு மக்கள் தொகுப்புக்காக செயல்படுகின்றன. பெரிய கட்சிகள் பல்வேறு சிறிய மக்கள் திரள்களின் தொகுப்பாக மாற ஆரம்பித்துவிட்டது. இதற்கு நடுவில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
GOAT படத்திற்குப் பிறகு மேலும் ஒரு படம் நடித்துவிட்டு, திரையுலகைவிட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாகச் சொல்லியிருக்கிறார் விஜய். அரசியல் சரிவராவிட்டால் மீண்டும் நடிக்க வருவாரா? “அது குறித்து பெரிதாக விவாதிக்கத் தேவையில்லை. அவர் திரும்பவும் நடிக்க வருவதாகச் சொன்னால், யாரும் வேண்டாமெனச் சொல்ல மாட்டார்கள். எளிதாக விட்ட இடத்திலிருந்து அவரால் தொடர முடியும்” என்கிறார் ராஜன் குறை.