கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
பல மாதங்கள் ஆகியும் இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய முடியவில்லை. இந்தப் புதிரான கொலை கனடாவிலும், சர்வதேச அளவிலும் எதிரொலிக்கிறது. நூற்றுக்கணக்கான சீக்கிய பிரிவினைவாதிகள் டொராண்டோவிலும் லண்டன், மெல்போர்ன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களிலும் ஜூலை தொடக்கத்தில், இந்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினர். இந்த அரசுதான் நிஜ்ஜாரின் கொலைக்கு காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக “நம்பகமான அம்சங்களை” கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு மறுத்துள்ளது.
45 வயதான நிஜ்ஜாரின் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு காரணமாக, இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 2% இருக்கும் மத சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என சில குழுக்கள் கோரி வருவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1980 களில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.. ஆயுதப் படைகள் இதற்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை நடத்திய பின்னர் அது நீர்த்துப் போனது. ஆனால் புலம்பெயர் சமூகத்தில் உள்ள ஆதரவாளர்கள் தனி நாடுக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது.
காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பஞ்சாப் உள்பட நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளும் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை கண்டித்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
யார் இந்த நிஜ்ஜார்?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஒரு முக்கிய சீக்கிய நிஜ்ஜார். தனி காலிஸ்தான் வேண்டும் எனக் குரல் கொடுத்தவர். அவரது செயற்பாட்டினால் கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் ஒரு பயங்கரவாதி என்றும், தீவிரவாத பிரிவினைவாதக் குழுவை வழிநடத்தினார் என்றும் இந்தியா கூறியது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று கூறுகின்றனர்.
கனடா புலனாய்வாளர்கள் நிஜ்ஜாரின் கொலைக்கான நோக்கம் என்ன என்று இன்னும் கண்டறியவில்லை. சந்தேக நபர்களையும் அடையாளம் காணவில்லை. ஆனால் இந்தக் கொலை “குறிவைக்கப்பட் சம்பவம்” என்று அவர் கூறுகின்றனர்.
ராயல் கனடியன் காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வசிப்பது கனடாவில்தான்.
பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வசிப்பது கனடாவில்தான். கடந்த ஜூலை 8 அன்று, நூற்றுக்கணக்கானோர் நிஜ்ஜாரின் கொலையைக் கண்டித்து டோராண்டோவில் இந்தியாவின் துணைத் தூதரக கட்டடத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இந்திய அரசுக்கு ஆதரவாகவும் சிறிய அளவில் போராட்டம் நடந்தது.
இரு தரப்பினரும் பல மணி நேரம் ஒருவரையொருவர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். தடுப்பை உடைக்க முயன்ற ஒரு காலிஸ்தான் சார்பு ஆர்ப்பாட்டக்காரர் கைது செய்யப்பட்டார்.
இந்தப் போராட்டத்தின் போது சில சுவரொட்டிகளில் “கில் இந்தியா” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. கனடாவில் உள்ள இந்திய தூதர்களை “கொலையாளிகள்” என்று கூறியது. இதனால் கோபமடைந்த இந்திய அரசு கனடா தூதரை வரவழைத்துக் கண்டித்தது.
கனடாவின் உலக சீக்கிய அமைப்பின் செய்தித் தொடர்பாளரான பல்ப்ரீத் சிங், காலிஸ்தான் இயக்கம் சமீபத்திய தசாப்தங்களில் செயலற்றதாகவும், அமைதியானதாகவும் இருக்கிறது என தாம் நம்புவதாகக் கூறினார். .
ஆனால் இந்த புதுவேகம் ஏற்பட்டாலும் கூட, பஞ்சாப் மக்கள் சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற எண்ணத்தில் இருந்து “நகர்ந்து விட்டனர்” என்று முன்பு நிஜ்ஜாரை பேட்டி கண்ட பத்திரிகையாளரும் வானொலி தொகுப்பாளருமான குர்ப்ரீத் சிங் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
கனடாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா.
“கனடாவில் நாம் பார்ப்பது காலிஸ்தானை ஆதரிக்கும் சீக்கிய சமூகத்தின் சிறுபான்மைக் குரல்” என்று அவர் கூறினார்.
சமீபத்திய மாதங்களில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது சீக்கியர் நிஜ்ஜார்.
பிரிட்டனில் காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கந்தா கடந்த ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார். இது “மர்மமானது” என்று கூறப்பட்டது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் மே மாதம் பயங்கரவாதியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்வார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் அமைப்பதில் ஒருமித்த கருத்தை அளவிடும் நோக்கில், உலகளாவிய தொடர் வாக்குகளின் ஒரு பகுதியாக சர்ரேயில் செப்டம்பர் மாதம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த நிஜ்ஜார் திட்டமிட்டதாக பல்பிரீத் சிங் கூறினார்.
கடந்த ஆண்டு 160,000 சீக்கியர்கள் வசிக்கும் ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு இதேபோன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் வாக்களித்த சுமார் 100,000 பேர் இந்திய அரசாங்கத்தின் கோபத்துக்கு ஆளானதாக அவர் கூறினார்.
வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம், “கனடாவில் வெறுப்புக் குற்றங்கள், மதவெறி வன்முறை, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை அதிகரித்திருக்கின்றன” என எச்சரித்தது. இருப்பினும் வாக்கெடுப்பு பற்றி அதில் குறிப்பிடவில்லை.
பட மூலாதாரம், Getty Images
காலிஸ்தான் இயக்கம் மற்றும் நிஜ்ஜார் போன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் மரணம் குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன.
சில இந்திய விமர்சகர்கள் நிஜ்ஜாரின் மரணத்திற்குக் காரணம் கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகளுக்கு இடையே உள்ள உள் போட்டிகள்தான் என்று குறிப்பிடுகின்றனர்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் “இந்திய எதிர்ப்பு” விளம்பரங்கள் மூலம் இந்து கோவில்களை சேதப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் நடந்த போராட்டத்தின் போது ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களை தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இந்திய அரசு சீக்கிய சமூகத்தையும் தனி காலிஸ்தான் ஆதரவாளர்களையும் இழிவுபடுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியா – கனடா உறவில் விரிசல்
இரு நாடுகளும் நீண்டகால ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன, இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
செப்டம்பரில் இந்தியாவுடனான ஒரு முக்கிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைத்துள்ளதாக கனடா அறிவித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான G20 கூட்டத்தில், கனடா மண்ணில் “இந்திய எதிர்ப்பு” உணர்வுகளைத் தணிக்க கனடா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி குற்றம் சாட்டினார்.