நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா உலகை உலுக்கி வருகிறது. இந்த அறிக்கை வெளியான பிறகு பெண் கலைஞர்கள் பலரும் மலையாள சினிமா உலகில் எதிர்கொண்ட சிக்கல்கள், பாலியல் தொல்லைகள் குறித்து பகிரங்கமாக பேசத் தொடங்கியுள்ளனர். சிலர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
அவ்வாறு புகார் அளிக்கும் பெண்களுக்கு பல்வேறு திரையுலகைச் சார்ந்த பெண் கலைஞர்கள், நடிகைகள் தங்களின் ஆதரவை அளித்து வருகின்றனர். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் இது குறித்து கூறியிருப்பது என்ன?
ஆதிக்க குழு ஒன்றும் இல்லை- நடிகர் மோகன்லால்
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
ஆகஸ்ட் 31ம் தேதி அன்று முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசிய அவர், “எங்கும் ஓடிவிடவில்லை,” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
“தனிப்பட்ட வாழ்விலும், திரை வாழ்விலும் சில முக்கிய விவகாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டதால் இது குறித்து பேச இயலவில்லை” என்று கூறிய அவர், அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று அனைத்தையும் தங்களின் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரக் குழு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
“மற்ற துறைகளில் நடப்பதைப் போன்றே திரைத்துறையிலும் நடக்கிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கையை நான் வரவேற்கின்றேன். அந்த கமிட்டி உறுப்பினர்கள் முன்பு ஆஜரான நான் அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினேன். மொத்த திரைத்துறையும் இந்த அறிக்கைக்கு பதில் கூற வேண்டும். ஆனால் அம்மாவையோ (கேரள நடிகர் சங்கம்) தனி நபர்களையோ நடந்த அனைத்திற்கும் காரணமாக கூறக் கூடாது. அறிக்கை வெளியான பிறகு அனைத்துவிதமான விமர்சனங்களும் நேரடியாக அம்மா மீதே வைக்கப்பட்டது. அதனால் தான் வழக்கறிஞர்களிடம் பேசி, நடிகர் சங்கத்தின் செயற்குழுவை கலைக்கும் முடிவுக்கு வந்தோம்,” என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் நடிகர் மோகன்லால்.
“அறிக்கை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் எங்களால் என்ன செய்திருக்க இயலும்? இது மலையாள திரையுலகை முழுமையாக அழித்துவிடும். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே பணியாற்றுகின்றனர். நான் மெட்ராஸில் (சென்னை) என்னுடைய திரைத்துறை பயணத்தை ஆரம்பித்த போது, எந்த விதமான வசதிகளும் இல்லை. மலையாள திரையுலகம் மிகச்சிறியது. எங்களின் கடின உழைப்பால் இதனை கட்டி எழுப்பினோம்,” என்று கூறினார்.
கமிட்டி குறித்து எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவரின் பதில், “அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்ற பதிலையே அவர் முன்வைத்தாதார்.
ஹேமா கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் – நடிகர் மம்முட்டி
மோகன்லால் இது குறித்து பேசிய பிறகு, செப்டம்பர் 1ம் தேதி என்று நடிகர் மம்முட்டி தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். ஆதிக்கம் செலுத்தும் குழுக்கள் ஏதும் மலையாள திரையுலகில் இல்லை என்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்ற அவர், அதில் குறிப்பிட்டிருக்கும் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திரைத்துறையில் இருக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் சங்கம் மற்றும் அதன் தலைவர் இது குறித்து கருத்து தெரிவித்த பிறகு, ஹேமா கமிட்டி அறிக்கைப் பற்றி பேச காத்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்த அவர், “சமூகத்தில் நடைபெறும் அனைத்து நல்லதும், கெட்டதும் திரைத்துறையிலும் பிரதிபலிக்கும். ஆனால் திரைத்துறை என்பது மக்களால் அதிகமாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. இங்கே நடைபெறும் சிறிய நிகழ்வுகளும், பெரிய நிகழ்வுகளும் பெரிய விவாதத்தை சமூகத்தில் ஏற்படுத்தும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“மோசமான நிகழ்வுகளை தடுக்கும் வகையில் திரைத்துறையினர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்,” என்று கோரிக்கை வைத்த அவர், ஹேமா கமிட்டியின் அறிக்கை தற்போது நீதித்துறையின் முன் உள்ளது என்றும் காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்திட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை சமந்தா கருத்து
மலையாளத்தில் உருவாக்கப்பட்ட பெண் கலைஞர்களுக்கான அமைப்பு (WCC) போன்றே, தெலுங்கு சினிமாவில் உருவாக்கப்பட்ட பெண்களின் குரல் (The Voice of Women) என்ற அமைப்பு, அரசாங்கத்திடம் சமர்பித்த அறிக்கையை வெளியிடுமாறு சமந்தா ஆகஸ்ட் 31ம் தேதி அன்று தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது.
அதனால் ஈர்க்கப்பட்டு, ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
‘பொய் புகார்கள் மீதும் நடவடிக்கை’ – ப்ரித்விராஜ் சுகுமாரன்
“மலையாள நடிகர் சங்கமான அம்மா, பெண் கலைஞர்கள் வைத்த பாலியல் புகார்களை தீர்க்கத் தவறிவிட்டது. அவர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார் நடிகர் ப்ரித்விராஜ்.
ஹேமா கமிட்டியில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரணை செய்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்றால் புகார் அளித்த நடிகைகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ப்ரித்விராஜ் கூறியிருந்தார்.
எனக்கு இதுபற்றி தெரியாது – ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி காந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மன்னித்துவிடுங்கள். எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது,” என்று பதில் அளித்துள்ளார்.