‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது’ எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், ‘புயலாக மாறி கரையைக் கடக்கும்’ என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது.
‘ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறான சூழல் ஏற்பட்டது ஏன்?
வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?
“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே 30ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்” என வியாழனன்று(நவம்பர் 28) வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.
“வியாழன் மற்றும் வெள்ளி காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகப் புயலாக வலுப்பெறக் கூடும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த அறிவிப்பு சொன்னது என்ன?
ஆனால், வெள்ளி (நவம்பர் 29) காலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணிநேரத்தில் இது புயலாக மாறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிழக்கில் 310 கி.மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் எனவும் அப்போது காற்றின் வேகம் 70-80 கி.மீட்டர் வேகத்தில் இருந்து 90 கி.மீ வேகம் வரையில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாறியது ஏன்?
இந்த மாற்றம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசும்போது, “இலங்கையில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் அதன் நகர்வில் ஏற்பட்ட குறைவு காரணமாகவும் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது” என்கிறார் அவர். மேலும், மழை அளவு குறைந்ததற்கும் இதுவே காரணம் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த புயல், வெள்ளியன்று மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கணிப்பு தவறியதா?
“இயற்கையில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல முன்னாள் இயக்குநர் ரமணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று எதிரும் புதிருமாக வந்தால் செங்குத்தான அமைப்பாக இருக்காது. அதனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 63 கி.மீட்டருக்கு மேல் சென்றால் புயல் வரும் எனக் கணிக்கிறோம்.
அதுவே, 62 கி.மீட்டருக்குள் வந்தால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Deep depression) என்கிறோம். தற்போதைய சூழலை, ‘புயல் இல்லாத புயல்’ என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள். இது இயற்கை என்பதை ஏற்க வேண்டும்” என்கிறார்.
அந்தந்த நேரத்தில் உள்ள சூழல்களைக் கணித்து முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், ரமணன்.
எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு?
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன?
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளதாக, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் வெள்ளியன்று (நவம்பர் 29) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீ மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீ அதிகமாக மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார்நிலையில் உள்ளன. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 29) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுரை
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
‘பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம்’
நாளை புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துப் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை
அனைத்துக் கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றால் விளம்பர போர்டுகள் சாயாமல் இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு