பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (எம்.எல்.ஏ) கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார்.
’52 ஆண்டுகாலம் அ.தி.மு.கவுக்காக உழைத்திருக்கிறேன். தொண்டர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். என் மீது களங்கம் சுமத்தி நீக்கப்பட்டது வேதனையளிக்கிறது’ என, சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார் செங்கோட்டையன்.
“அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ‘இவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்?’ என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது.

1972-ஆம் ஆண்டு அ.தி.மு.கவில் இணைந்த செங்கோட்டையன், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னைக் கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி என்று நேற்று (அக்டோபர் 31) அவர் கூறியதாக செய்தியைப் பார்த்தேன். இன்று (நவம்பர் 1) செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அ.தி.மு.க தொண்டர்களையும் யோசிக்க வைத்திருக்கும். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் மதிக்கப்பட்ட தலைவராக அவர் இருந்தார்.
‘இரவெல்லாம் நான் தூங்கவில்லை’ என அவர் கூறியபோது அதை நாடகம் என்றோ நம்ப மறுத்தவர்களோ குறைவு எனலாம். இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்தில் அவர் எவ்வளவோ பார்த்திருப்பார். பதவிகளைத் தேடி ஓடும் நபராகவோ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நபராகவும் அவர் இல்லை.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறும் செய்தி என்னவென்றால், ‘என்னுடைய விருப்பத்துக்கு மாறாக பொதுவெளியிலோ என் அருகிலோ அமர்ந்து குரல் எழுப்பினால் அமைதியாக இருக்க மாட்டேன்’ என்பது தான்.
அதேநேரம், கட்சியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சற்று பொதுப் பார்வையை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்கலாம். ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் கூறிய ஆறு பேரில் ஒருவராக செங்கோட்டையன் இருந்ததார். அதைப் பொய் என எடப்பாடி பழனிசாமி கூறியதால், தான் வெளியில் வந்து பேசுவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
‘நீக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் கட்சியை விட்டு நீக்குவார்கள்’ என்ற பாலபாடத்தை அறியாதவரா செங்கோட்டையன்? அப்படியானால் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவர் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
மதுரையில் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் ஏறும்போதே, தன்னை நீக்கிவிடுவார்கள் என்பது அவருக்கு தெரியும். அப்படியானால் எடப்பாடி பழனிசாமிக்கு சில விஷயங்களை புரிய வைப்பதற்காக அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.
‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்றால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்தை யாரோ ஒருவர் சந்தித்ததால் அவரை மீண்டும் கட்சியில் எடப்பாடி பழனிசாமி சேர்த்துக் கொண்டார். அந்த நபர் யார் என எடப்பாடி பழனிசாமி பொதுவெளியில் சொல்வாரா?
இதே தியரி தான் அப்போதும் இருந்தது. இத்தனைக்கும் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்றதாகக் கூறினார் பழனிசாமி. ஆனால், செங்கோட்டையன் அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
‘அந்தியூர் தொகுதியில் செங்கோட்டையானால் வெற்றி பெற வைக்க முடியவில்லை’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘தோல்வியைத் தேடித் தந்தாலும் பரவாயில்லை, என்னுடைய தலைமையை ஏற்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்’ எனக் கூறுவது தலைமைக்கு அழகல்ல.
பட மூலாதாரம், UGC
தனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லையா?
நிச்சயமாக இருக்கிறது. தலைவர் தவறான வழியில் செல்லும்போது அறிவுரை சொல்லும் கடமை இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு இருக்கிறது. முதலமைச்சர் பதவியில் அமர்ந்தது இல்லையே தவிர, அனுபவம், சீனியர் உள்பட அனைத்திலும் மேலானவராக செங்கோட்டையன் இருக்கிறார். அவர் சில விஷயங்களைக் கூறக் கூடாதா?
செங்கோட்டையன் பேசும்போது, ‘1972 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தது முதல் 1984 வரையில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். இவர் (எடப்பாடி பழனிசாமி) 89 ஆம் ஆண்டு தான் பொறுப்புக்கு வந்தார்.’ எனக் கூறுகிறார். ‘தனக்குப் பின்னால் வந்தவர்’ என்ற மனநிலை தான் இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்குக் காரணமா?
எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிப்பதற்கு கூவத்தூரில் 122 பேரிடம் கையெழுத்து வாங்கினர். அதில் கையெழுத்து போட்ட 121 பேரிடம் கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். கடைசி கையெழுத்து போடும் வரையில் அதில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இல்லை.
தன் பெயரை எழுத வேண்டாம் என சசிகலாவிடம் செங்கோட்டையன் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் இதை மறுக்க மாட்டார். செங்கோட்டையனிடம் பணபலம் இருந்திருந்தால் அவரால் பதவியைப் பெற்றிருக்க முடியும். ‘எனக்கு சரிவராது.. அவரே இருக்கட்டும்’ எனக் கூறினார்.
இத்தனை வருடங்களாக அமைச்சர், கட்சிப் பொறுப்பு, தேர்தல் பரப்புரைகள் என அனைத்திலும் பங்கேற்றுவிட்டு தலைமையிடம் அவருக்கு கசப்பு இருப்பதாகக் கூறுவது ஆதாரமற்றது
பட மூலாதாரம், KASengottaiyan
‘சசிகலா, டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தால் என்ன பதவி தர வேண்டும்?’ என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி எழுப்பினால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி பேசவே கூடாது என்றால் என்ன நியாயம்?
2031 தேர்தல் வரையில் ஆக்டிவ் அரசியலில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபடுவது சிரமம். அதை நோக்கிய பயணத்தில் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர் தோல்விப் பாதையில் கட்சி செல்லும்போது அதைக் கூறும் துணிச்சல் ஆறு பேரில் ஒருவருக்கு வந்தது. அ.தி.மு.கவில் உள்ள பலரின் உணர்வும் இதே தான்.
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனக் கூறிய ஆறு பேரில் ஐந்து பேர் அமைதியாக இருப்பதற்கு பொதுச்செயலாளர் உத்தரவை மீறி செயல்படக் கூடாது என்பது தானே காரணம்?
ஆமாம். தாங்கள் கூறும் வேட்பாளர்கள் தான் வரவேண்டும் என்ற சுயநலம் தான் காரணம். தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் செங்கோட்டையன் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர் பேசுவதில் உள்ள உள்கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இனிமேல் எதை சாதிக்கப் போகிறார்? அவர் ஆக்டிவ்வாக இருக்கும் கடைசி தேர்தல் இதுவாக இருக்கலாம். தற்போது 70 வயதைத் தாண்டிவிட்டார். இதற்கு மேல் அவர் பதவியைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
மனஅமைதிக்காக ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு பா.ஜ.க தலைவர்களை டெல்லியில் செங்கோட்டையன் சந்தித்தார். இதற்குக் கட்சித் தலைமையிடம் அவர் அனுமதி பெறவில்லையே? இது தவறுதானே?
அது கட்சி விரோத நடவடிக்கை தான். இதற்கு விளக்கம் கேட்டு குறைந்தபட்சம் எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் துரோகத்தைத் தடுப்பதாக பார்க்க முடியும். யாருக்குப் பயந்து எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார்.
செங்கோட்டையனை தி.மு.கவின் பி டீம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், பி டீமே அவர் தான். ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் மீதும் அவரின் கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என ஸ்டாலின் சபதமே போட்டார்.
‘கடந்த ஆட்சியில் ஊழல் செய்து அமைச்சர்கள் சேர்த்த பணத்தை அரசின் கஜானாவுக்கு கொண்டு வருவேன்’ எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமி மீது ஒரு முதல் தகவல் அறிக்கையைக் கூட தி.மு.க அரசு பதிவு செய்யவில்லை.
பட மூலாதாரம், Edappadi K. Palaniswami/X
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறதே?
நீதிமன்றம் கூறிய பிறகே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார்கள். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட நீதிமன்றம் சொல்ல வேண்டுமா? அப்படியானால் யார் ஏ டீம், யார் பி டீம்?
கொடநாடு வழக்கு வந்தபோது, ‘இது டிரைலர் தான்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஆனால், டிரைலரையே காணவில்லை. இதனை ஆராய்ந்தால் யார் பி டீம் எனத் தெரியும்.
செங்கோட்டையன் பேசும்போது, தேவருக்கு அஞ்சலி செலுத்தியதற்கு பரிசாக தன்னை நீக்கியதாகக் கூறுகிறார். அடுத்து, கொடநாடு வழக்கில் அதிமுக தலைமை கேள்வி எழுப்பவில்லை எனக் கூறுகிறார். இவ்விரு விஷயங்களையும் அவர் சுட்டிக் காட்டுவது ஏன்?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர் நிலையை அவர் எடுத்துவிட்டார். அவருக்கு எதிரான அஸ்திரங்களைப் பயன்படுத்தவே செய்வார். ஜெயலலிதாவை மதிக்கும் செங்கோட்டையன், கொடநாடு விவகாரத்தில் ஓர் அறிக்கை விடுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கலாம். ஆனால், இந்த விவகாரத்தில் சில தகவல்கள் உலா வரும்போது அவரால் அவ்வாறு கூற முடியுமா?
‘கட்சி விதிகளின்படி தன்னை நீக்கவில்லை’ என செங்கோட்டையன் கூறுகிறார். சட்டரீதியாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார். இதில் தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
அதற்கான வாய்ப்புகள் இல்லை. சிவில் வழக்குப் போட்டால் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் தேவைப்படும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறும் நடைமுறைகள் இருந்தது இல்லை. இவை வெறும் சம்பிரதாயங்கள் தான். இதில் தீர்வு வரும் என செங்கோட்டையனே நம்ப மாட்டார். அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர் குடைச்சல் தரலாம்.

டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றனர். அப்போது தினகரனை தவிர்த்து மற்ற இருவரும் சசிகலாவைச் சந்தித்தனர். சசிகலாவை தினகரன் சந்தித்துப் பேசியதாக எந்த தகவலும் இல்லை. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்பதாகத் தானே இதைப் பார்க்க முடியும்?
இதுபோன்ற குரல்கள் அவர்களின் காதுகளுக்கும் எட்டியிருக்கும். ஓர் அரசியல் முடிவை எடுத்த பிறகு அந்த இடத்திலும் சசிகலாவோ, தினகரனோ இல்லை என்றால் இதைப் பற்றி விவாதிக்கலாம். அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
சசிகலாவுக்கு என தனி அரசியல் அடையாளம் உள்ளது. அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்று தான் தனது கடிதங்களில் அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார். தனிக்கட்சியை தினகரன் நடத்தி வருகிறார். ஓ.பி.எஸ், உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார்.
செங்கோட்டையனுக்கு எந்தக் கட்சியும் இல்லை. அ.ம.மு.கவில் பன்னீர்செல்வம் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டால் அ.தி.மு.க மீதான வழக்கை நடத்தும் உரிமையை அவர் இழந்துவிடுவார். இவையெல்லாம் அலசி ஆராயப்பட வேண்டும்.
தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ளன. சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் ஆகியோரின் நகர்வுகள் என்னவாக இருக்கும்?
‘எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவது தான் தன்னுடைய நோக்கம்’ என தினகரன் கூறிவிட்டார். பிகார் தேர்தலை முடித்துவிட்டு தமிழ்நாட்டின் பக்கம் பா.ஜ.கவின் கவனம் திரும்பும். அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, தனியாக நிற்பது, தவெக உடன் கூட்டணி சேர்வது அல்லது தி.மு.க அணியில் சேரலாம் என்பது அவர்களின் நகர்வாக இருக்கலாம்.

பா.ஜ.க ஆதரவில் இயங்கிய பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கினார். பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்த செங்கோட்டையனும் நீக்கப்பட்டிருக்கிறாரே?
டி.டி.வி.தினகரனை சிறையில் தள்ளியதும் பா.ஜ.க தான். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஒவ்வொரு அசைவிலும் பா.ஜ.க தான் இருந்தது. அனைவரும் பா.ஜ.க ஆலோசனையின்படி தான் செயல்பட்டனர். அப்படியும், ‘பா.ஜ.க தேவையில்லை’ எனக் கூறிவிட்டு தினகரனும் பன்னீர்செல்வமும் வெளியேறிவிட்டனர்.
கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்குவதன் மூலம் பா.ஜ.கவை பலப்படுத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி செய்வதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அ.தி.மு.க வலுவாக இருந்தால் பா.ஜ.கவுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? அ.தி.மு.க தொண்டர்கள் வேதனையில் துடிப்பதாக மதுரையில் விஜய் பேச வேண்டியது தேவை ஏன் வந்தது? அ.தி.முக தொண்டர்களுக்கு விஜய் வலைவீசுகிறார். எடப்பாடி பழனிசாமி இனியாவது யோசிக்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு