அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக நேற்று (அக்டோபர் 31) வெளியான அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அக்டோபர் 30 அன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் நீக்கம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக கட்சியில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து செங்கோட்டையன் செயல்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மூவரும் (ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், செங்கோட்டையன்) ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்களின் திட்டம்.” என்று கூறினார்.
இதற்குப் பதிலடியாக, “எங்களை பி டீம் எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பி டீம் யார் என்பதை நாடறியும்.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதேபோல, “செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு என்பது என்னவாக இருக்கும்?
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கைகோர்த்தால் அது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி, செங்கோட்டையன் ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இல்லை என்கிறார் ப்ரியன்.
‘எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தும் முயற்சி’
அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
“கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக செங்கோட்டையனின் நடவடிக்கைகள் இருந்து வந்தன. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நடத்திக் கொடுத்தமைக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். செங்கோட்டையன் பங்கேற்காமல் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை சொன்னார்.”
“அதேவேளையில், அவரின் தொகுதியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஜெயலலிதா படம் இல்லை. அதில் கருணாநிதி, ஸ்டாலின் படம் மட்டுமே இருந்தது. அப்போதே பி டீம் வேலையைத் தொடங்கிவிட்டார்.” என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி .
மேலும், “தி.மு.கவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட இவர்கள் பேசுவது இல்லை. தி.மு.கவின் பி டீமாக இருக்கின்றனர். செங்கோட்டையனை நீக்கியதற்காக தொகுதியில் உள்ள தொண்டர்களே இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என்று கூறினார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் திமுக கூட்டணிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்க வாய்ப்பு இல்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.
பட மூலாதாரம், Edappadi K. Palaniswami/X
படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி
“திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டால், அதிமுக தொண்டர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும். அதிமுக அடிப்படையில் ஒரு பலமான கட்சி, அப்படியிருக்க இத்தனை நாளாக அதிமுக தொண்டர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறேன் என பேசிவிட்டு, ‘திமுக ஆதரவு’ என்ற முடிவை செங்கோட்டையன் எடுக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரனுடன் ஓரணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது” என்கிறார் ப்ரியன்
மேலும், “அப்படி ஒரு அணி அமைத்து எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கும்.” என்று கூறுகிறார் ப்ரியன்.
இதே கருத்தை மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணியும் முன்வைக்கிறார்.
“திமுக கூட்டணியை வீழ்த்த முடியாதபோது, இப்போது மீண்டும் திமுகவை வீழ்த்தவே பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறோம் என செங்கோட்டையன் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் ஒன்றிணைந்து இருந்தபோதிலும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதே இவர்களது நோக்கம்” என்கிறார் சிகாமணி.
பட மூலாதாரம், Getty Images
செங்கோட்டையனின் சந்திப்பும் எடப்பாடியின் முடிவும்
“என்னை இயக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது குறித்து வேதனைப்படுகிறேன், கண்ணீர் சிந்துகிறேன். 53 ஆண்டுகாலம் இந்த இயக்கத்துக்காக உழைத்திருக்கிறேன். இந்த நீக்கம் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.” என்று செங்கோட்டையன் தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசியிருந்தார்.
அதேபோல, “கே.ஏ. செங்கோட்டையன் கட்சிக்குள் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிடும் நபர்கள் எல்லாம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு பேசிய ப்ரியன், “அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரனை சந்தித்தால் தானும் நீக்கப்படுவோம் என தெரிந்தே தான், செங்கோட்டையன் அவர்களை சந்தித்தார். எனவே எடப்பாடி பழனிசாமியின் முடிவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது, ஆனால் செங்கோட்டையன் அவர்களுடன் இணைந்தது பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்” எனக் கூறுகிறார்.
படக்குறிப்பு, கோப்புப் படம்
அடுத்த கட்ட நகர்வு
“ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஓரணியில் நின்று தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி செல்லலாம் அல்லது வேறு வழியில்லாமல் தனி அணியாகவே தேர்தலை சந்திக்கலாம். ஆனால், எப்படிப் பார்த்தாலும் அது திமுகவுக்கே சாதகமாக அமையும். காரணம் அதிமுக வாக்குகள் பிரியும்” என்கிறார் சிகாமணி.
அதேசமயம், இந்த மூவரை பாஜக கண்டுகொள்ளாது என்கிறார் ப்ரியன்.
“அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதிமுக நிர்வாகிகள் அவர் பக்கம் உள்ளனர். அப்படியிருக்க பாஜக எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்கும்.” என்று கூறுகிறார்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஓரணியில் இணைந்தால், அது எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக வாக்கு வங்கிக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் என்பதையும் ப்ரியன் குறிப்பிடுகிறார்.
“மொத்தத்தில் இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் திமுகவை வீழ்த்த முடியுமா என்பது சந்தேகம். ஆனால் பிரிந்து நின்றால் அதிமுகவுக்கு என இருக்கும் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பது நிச்சயம்.” என்கிறார் ப்ரியன்.
“அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட்டிருந்தால் அவர் செங்கோட்டையனை நீக்கியிருக்க மாட்டார். கட்சியின் மீதான கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என்ற கவலை மட்டுமே அவருக்கு உள்ளது.” என்றும் அவர் கூறுகிறார்.