ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.
இருப்பினும், யாருடைய சிக்ஸர்கள் அணிக்கு அதிகம் பலன் கொடுத்தது, எத்தனை இன்னிங்ஸ் மற்றும் பந்துகளில் இவை அடிக்கப்பட்டன என்ற விவாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில்தான் ரோஹித் ஷர்மா அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்திருந்தார். மேலும், விராட் கோலியுடனான பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 136 ரன்களை குவித்தனர்.
அப்ரிடியின் 15 ஆண்டுகால சாதனை
இதுவரை 277 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரோஹித் ஷர்மா, 269 இன்னிங்ஸ்களில் 352 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, 398 போட்டிகளில் (369 இன்னிங்ஸ்கள்) ஆடி, 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை அவர் 15 ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்தார்.
இவர்கள் இருவரின் சாதனையில் எது பெரியது என்று இந்தியா, பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் விவாதித்து வருகின்றனர். இருவரும் எத்தனை பந்துகளைச் சந்தித்தார்கள், கடினமான பௌலரை எதிர்கொண்டது யார், எந்தச் சூழலில் இந்த சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன என்பது போன்ற விவாதங்கள் ரசிகர்களிடையே நடந்து வருகின்றன.
எந்த வீரர் எவ்வளவு தூரம் சிக்ஸர் அடித்தார் என்ற விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. வெகுஜன மக்கள் மட்டுமின்றி, இருநாட்டு முன்னாள் வீரர்களும்கூட இதுகுறித்துப் பேசியிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் யார் என்று பார்த்துவிடுவோம்.
பட மூலாதாரம், Getty Images
அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள்
கிரிக்இன்ஃபோ இணையதள தரவுகளின்படி, ரோஹித் ஷர்மா, அப்ரிடி ஆகியோருக்கு அடுத்து ‘யுனிவர்சல் பாஸ்’ என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். 301 போட்டிகளில் (294 இன்னிங்ஸ்கள்) அவர் 331 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டிகளில் (433 இன்னிங்ஸ்) 270 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்திய முன்னாள் கேப்டன் தோனி 350 போட்டிகளில் (297 இன்னிங்ஸ்) 229 சிக்ஸர்கள் அடித்தார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஐயான் மோர்கன் 248 போட்டிகளில் (230 இன்னிங்ஸ்) 220 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
ஏழாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், 228 போட்டிகளில் (218 இன்னிங்ஸ்) 204 சிக்ஸர்கள் அடித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 260 போட்டிகளில் (228 இன்னிங்ஸ்) 200 சிக்ஸர்கள் அடித்து எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
அதற்கு அடுத்த இடத்தில் 195 சிக்ஸர்களுடன் (463 போட்டிகள் – 452 இன்னிங்ஸ்கள்) சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். பத்தாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, 311 போட்டிகளில் (300 இன்னிங்ஸ்கள்) 190 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகத்தில் நடக்கும் ஒப்பீடுகள்
ஞாயிற்றுக்கிழமை ரோஹித் ஷர்மா இந்தச் சாதனையை முறியடித்ததும், ஒரு பக்கம் இந்திய ரசிகர்கள் அவரைக் கொண்டாட, பாகிஸ்தான் ரசிகர்களோ அப்ரிடியின் சிக்ஸர்களை நினைவுகூர்ந்தனர்.
இதுபற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அதுல் வசன், அப்ரிடி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடித்த சிக்ஸர்களை ஒப்பிடுவது முற்றிலும் வேறுபட்ட இரண்டு விஷயங்களை ஒப்பிடுவதைப் போன்றது என்று கூறினார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “ஷாஹித் அப்ரிடியின் சாதனையோடு இதை ஒப்பிடுவது, வேறுபட்ட இரண்டு விஷயங்களை ஒப்பிடுவதற்குச் சமம். ஒரு ஓப்பனர் இந்தச் சாதனையைச் செய்வது மிகப்பெரிய விஷயம்” என்று கூறினார்.
“அப்ரியிடின் வேலை கீழே வந்து ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது. ஆனால், ஒரு ஓப்பனராக ரோஹித் குறைந்த இன்னிங்ஸ்களில் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறார் என்பது, அவரது ஆட்டம் இந்திய அணியில் எப்படியான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்த்துகிறது.”
“உங்கள் ஓப்பனர் இப்படி பெரிய ஷாட்கள் அடித்தால், அவரால் உங்களுக்குப் போட்டியை வென்று கொடுக்க முடியும். ஏனெனில் அவர் ஸ்டிரைக் ரேட்டை அதிகமாக வைத்திருப்பார்” என்று தெரிவித்தார்.
ஷாஹித் அப்ரிடியைவிட 100 இன்னிங்ஸ் குறைவாக விளையாடி ரோஹித் ஷர்மா இந்தச் சாதனையை அடைந்திருக்கிறார் என்று சமீர் ஹஷ்மி என்பவர் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். “அவரது அநாயசமான நடை, அசாத்தியமான டைமிங், சக்தி வாய்ந்த ஷாட்களை அடிக்கும் திறன் ஆகியவை அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “அவர் 400 சிக்ஸர்களுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுவார் என்று நம்புவோம்” என்றும் அவர் எழுதினார்.
ஃப்ரித் கான் என்பவர் தனது பதிவில், “ரோஹித் ஷர்மா ஷாஹித் அப்ரிடியின் சாதனையை நொறுக்கி, என் இதயத்தையும் நொறுக்கிவிட்டார்” என்று எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் விளையாட்டுப் பத்திரிகையாளரான ஃபைசன் லகானி, “இவர்களுக்குள்ள வித்தியாசம் என்னவெனில், ரோஹித் ஷர்மாவைவிட அப்ரிடி குறைந்த பந்துகளையே சந்தித்திருக்கிறார்” என்று கூறினார்.
ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 12,321 பந்துகளைச் சந்தித்திருக்கிறார், அப்ரிடி 8,064 பந்துகளையே சந்தித்திருக்கிறார்.
விகாஸ் குமார் சிங் என்பவர், “அப்ரிடி ஒவ்வொரு பந்திலும் தனது பேட்டை சுழற்றுவார். இதனால்தான் ரோஹித் சர்மா அவரைவிட 100 குறைவான இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்” என்று கூறுகிறார்.
அப்ரிடிக்கு ஆதரவாகப் பேசும் கபீர், “அப்ரிடியை ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிட விரும்பினால், ரோஹித் சர்மா எத்தனை விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதையும் சொல்லுங்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் அப்ரிடி 395 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.