
4 மீட்டர் (13 அடி) உயரமுள்ள மின்சார எஃகு வாயில்கள், மேலே கூர்முனைகளுடன், மெதுவாகச் சத்தம் எழுப்பி திறக்கின்றன. மார்தினஸ் என்ற விவசாயி தனது பிக்-அப் வாகனத்தில் அந்த வாயிலைக் கடந்து செல்கிறார். நுழைவாயிலில் உள்ள கேமராக்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கின்றன. பண்ணையைச் சுற்றி எங்கும் முள்வேலிகள் சூழ்ந்துள்ளன.
இப்பகுதி தென்னாப்பிரிக்காவின் மையப்பகுதியில் உள்ள கிராமப்புற ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ளது.
வாயில்கள் அவருக்குப் பின்னால் சத்தம் எழுப்பிக்கொண்டே மூடும்போது, “இது ஒரு சிறைச்சாலையைப் போன்ற உணர்வு தருகிறது,” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் வந்து எங்களைக் கொல்ல விரும்பினால் அவர்களால் அதைச் செய்ய முடியும். ஆனால் குறைந்தபட்சம் என்னிடம் வந்து சேர அவர்களுக்கு நேரம் எடுக்கும்” என்கிறார் மார்தினஸ்.
தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளையினத்தவரான அவர், தனது மனைவி மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் பண்ணையை நிர்வகிக்கிறார். அவருக்கு தாக்குதல் குறித்த பயம் அதிகம் உள்ளது. மார்தினஸ் தனது முழுப் பெயரையும் வெளிப்படுத்த விரும்பவில்லை.
அவரது தாத்தாவும், அவரது மனைவியின் தாத்தாவும் பண்ணை மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். 21 வயது பண்ணை மேலாளர் பிரெண்டன் ஹார்னரின் உடல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு, கழுத்தில் கயிற்றால் சுற்றப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் தான் அவர் வசிக்கிறார்.
குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவரால் அந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாது என்றும், பிப்ரவரி மாதம் அவர்கள் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து (refugee status) கேட்டு விண்ணப்பித்ததாகவும் மார்தினஸ் தெரிவித்தார்.
“என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் படுகொலை செய்யப்பட்டு ஒரு கம்பத்தில் தொங்கவிடப்படுவதை விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
“எங்கள் ஆஃப்ரிகானர் மக்கள் (தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளை இனக்குழு) ஒரு அழிந்து வரும் இனமாக மாறிவிட்டார்கள்,” என்கிறார் மார்தினஸ்.

தொடக்க கால ஐரோப்பிய குடியேறிகளின் வெள்ளையின வம்சாவளியினரான ஆயிரக்கணக்கான ஆஃப்ரிகானர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டது முதல், அமெரிக்காவில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பிக்கும் நீண்ட செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா ஆண்டுதோறும் ஏற்கும் அகதிகளின் எண்ணிக்கையை 1,25,000-லிருந்து 7,500 ஆகக் குறைப்பதாக டிரம்ப் அக்டோபரில் அறிவித்திருந்தாலும், ஆஃப்ரிகானர்களை மீள்குடியேற்றுவதை அவர் ஒரு முன்னுரிமையாகக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தினசரி இதழில் வெளியான அதிபர் ஆவணம், ஏற்கப்படும் அகதிகள் “முக்கியமாக” ஆஃப்ரிகானர் தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் “தாய்நாட்டில் சட்டவிரோதமாக அல்லது அநியாயமாகப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று குறிப்பிடுகிறது.
மார்தினஸுக்கு, இது வெளியேறுவதற்கான ஒரு வாய்ப்பைப் போன்றது.
“என் மனைவியும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என் வாழ்நாள் முழுவதையும் நான் கொடுக்கத் தயாராக உள்ளேன். பயத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என உங்களுக்குத் தெரியும். யாரும் அப்படி வாழக் கூடாது,” என்று அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான, நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட குற்றங்கள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு நாளும் சராசரியாக 63 கொலைகள் நடந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.
தென்னாப்பிரிக்கா உலகில் மிக அதிக கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகவே உள்ளது.

கருப்பின விவசாயிகளும் பண்ணைத் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தின் இம்பெரானி மலையின் அடிவாரத்தில் உள்ள ஃபிக்ஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில், தாபோ மாகோபோ என்பவர் 237 ஏக்கர் (96 ஹெக்டேர்) பரப்பளவில் ஒரு சிறிய பண்ணை நடத்துகிறார்.
அங்கு அவர் ஆடு மாடுகளை வளர்க்கிறார். வெள்ளை இன விவசாயியான மார்தினஸைப் போலவே, 45 வயதான இவரும் பண்ணைத் தாக்குதல்களே தனது மிகப் பெரிய கவலை எனக் கூறுகிறார்.
“அவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள், ஆபத்தானவர்கள். அவர்கள் தங்கள் உயிரை இழந்தாலும் சரி, உங்கள் உயிரை எடுத்தாலும் சரி, அந்த கால்நடைகளை எடுத்துச் செல்வார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
மாகாணத்தின் அனைத்து விவசாயிகளும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்று தாபோ நம்புகிறார்.
“நாங்கள் எல்லாரும் ஆபத்தில் தான் இருக்கிறோம். நான் இன்று தாக்கப்படலாம். இது எங்களில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்கிறார் தாபோ.
தென்னாப்பிரிக்காவில் குற்றச் சம்பவங்களைப் பற்றிய புகார்களுக்கு காவல்துறை விரைவாகப் பதிலளிக்கும் விகிதம் மிகவும் குறைவு. இதை காவல்துறையினரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும், தாங்கள் இதைச் சரிசெய்ய முயற்சித்து வருவதாக காவல்துறை பொதுவெளியில் கூறுகிறது.
இதற்கிடையில், தென்னாப்ரிக்க மக்கள் தனியார் பாதுகாப்பை அதிகமாக நம்பத் தொடங்கியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தனியார் பாதுகாப்பு துறைக்கான அதிகாரப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பின்படி, நாட்டில் 630,000 க்கும் மேற்பட்ட தனியார் காவலாளிகள் பணியாற்றுகின்றனர்.
இது காவல்துறை மற்றும் ராணுவத்தின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம்.

வெள்ளையினத்தவரான மோர்கன் பாரெட் போன்ற பல விவசாயிகள், தங்களால் முடிந்தளவு தனியார் காவலாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
தனது குடும்பத்திற்கு ஆறு தலைமுறைகளாகச் சொந்தமாக இருக்கும் 2,000 ஏக்கர் பண்ணையை அவர் பராமரித்து வருகிறார்.
ஒரு தடிமனான ஜாக்கெட்டும் தொப்பியும் அணிந்து கொண்டு, மோர்கன் இரவு ரோந்துப் பணிக்கு தனது காரில் ஏறுகிறார். மோர்கனும் அவரது அண்டை வீட்டாரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவிலும் ரோந்து செல்கிறார்கள்.
“நீங்கள் போலீஸை அழைக்கலாம். அவர்கள் இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு வரக்கூடும். அதற்குள் திருடர்கள் ஓடி விடுவார்கள்,” என்று அவர் சொல்கிறார்.
தாபோவைப் போலவே, மோர்கனும் தனது நிறத்திற்காகத் தான் குறிவைக்கப்படுவதாக நம்பவில்லை.
“இந்தப் பகுதியில் வெள்ளையர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன என்ற கருத்தை நான் நம்பவில்லை,” என்கிறார் மோர்கன்.
“ஒரு கருப்பினத்தவர் தனது பெட்டகத்தில் 20,000 ரேண்ட் வைத்திருப்பதாக அவர்கள் நினைத்தால், பெட்டகத்தில் 20,000 ரேண்ட் வைத்திருக்கும் வெள்ளைக்காரரை எவ்வளவு விரைவாகத் தாக்குவார்களோ, அதே வேகத்தில் அவரையும் தாக்கிவிடுவார்கள்.”
தென்னாப்ரிக்காவில் “வெள்ளை இனப் படுகொலை” நடக்கிறது எனக் கூறுபவர்கள் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, “இனப் படுகொலை என்றால் என்ன என்பதைப் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு இல்லை,” என்று மோர்கன் கூறுகிறார்.
“ருவாண்டாவில் நடந்தது தான் இனப்படுகொலை. வெள்ளை இன விவசாயிகளுக்கு நடப்பது மிகவும் மோசமானது, ஆனால் அதை இனப் படுகொலை என்று சொல்ல முடியாது,” என்கிறார் அவர்.
அதே நேரத்தில், டிரம்ப் வெள்ளையின விவசாயிகள் மீது இனப்படுகொலை நடக்கிறது என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.
தென்னாப்ரிக்காவில் பிறந்த கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க், தென்னாப்ரிக்க அரசியல்வாதிகள் இனப் படுகொலையை “தீவிரமாக ஊக்குவிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஃப்ரிகானர்களும் மற்ற வெள்ளை இன தென்னாப்ரிக்கர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இங்குள்ள அரசு கடுமையாக மறுத்துள்ளது.
இனம் சார்ந்த குற்றப் புள்ளிவிவரங்களை அந்நாடு வெளியிடுவதில்லை என்றாலும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில், மே மாதத்தில், காவல்துறை அமைச்சர் சென்சோ ம்சுனு பண்ணைகளில் நடக்கும் கொலைகள் குறித்த விவரங்களை வழங்கினார்.
அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை தென்னாப்பிரிக்கா முழுவதும் 18 பண்ணைக் கொலைகள் நடந்துள்ளதாக முச்சுனு கூறினார். பாதிக்கப்பட்டவர்களில் பதினாறு பேர் கறுப்பினத்தவர், இருவர் வெள்ளையர்.
இந்த புள்ளிவிவரங்கள் இருந்தபோதும், முன்பு தென்னாப்பிரிக்க தீவிர வலதுசாரிக் குழுக்களிடம் மட்டும் இருந்த கருத்தான ‘வெள்ளையர்கள் நிறத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்ற கோட்பாடு, இப்போது பிரதான அரசியல் மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இன அடிப்படையிலான திட்டமிட்ட துன்புறுத்தல் என்ற அனுபவம், தென்னாப்பிரிக்க மக்கள் தொகையில் 80% க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் பல ஆண்டு காலமாக எதிர்கொண்ட ஒன்று.
1948 முதல் 46 ஆண்டுகள் நீடித்த நிறவெறி முறையின் போது, வெள்ளை-சிறுபான்மையின அரசு, மக்களை அவர்களின் நிறத்தின் அடிப்படையில் சட்டப்பூர்வமாகப் பிரித்தது.
இந்த முறை ஏற்கனவே இருந்த பாரபட்ச சட்டங்களை மேலும் வலுப்படுத்தியது.
வாக்களிக்கும் உரிமை, நிலம் வாங்கும் உரிமை மற்றும் பணிபுரியும் வாய்ப்பு ஆகியவை வெள்ளையர்களுக்கே ஒதுக்கப்பட்டன.
லட்சக்கணக்கான கறுப்பின தென்னாப்பிரிக்கர்கள் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுப்புறங்களில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கல்வி கட்டுப்பாடுகளுடன் கூடியதாக இருந்தது.
வன்முறை மற்றும் அடக்குமுறை மூலம் அந்த ஆட்சி செயல்படுத்தப்பட்டது.
1994 இல் நிறவெறி முடிவுக்கு வந்தாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழமான இன சமத்துவமின்மை தொடர்கிறது.
நிறவெறிக்குப் பிந்தைய அரசாங்கம் சில சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்கும் வகையில் உறுதியான கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.
ஆனால், அவை பயனில்லாதவை என்றும், “இன ஒதுக்கீட்டு முறைகளை” உருவாக்குவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அரசாங்கத்தின் 2017 நில ஆய்வு அறிக்கையின்படி, தனியார் விவசாய நிலங்களில் 72% இன்னும் வெள்ளையினத்தவர் கைகளில்தான் உள்ளது. மக்கள் தொகையில் வெள்ளையர்கள் 7.3% மட்டுமே இருந்த போதிலும் இந்த நிலை நீடிக்கவே செய்கிறது.
விருப்பமுள்ள விற்பனையாளர் – விருப்பமுள்ள வாங்குபவர் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த நிலச் சீர்திருத்தத் திட்டம் இதுவரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த ஆண்டின் புதிய சட்டம், உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காமல் சில தனியார் நிலங்களை அரசால் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இது அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று பிபிசியிடம் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நாட்டில் வேறு எந்தக் குழுவையும் விட வெள்ளையின விவசாயிகளுக்கே அதிக நிலங்கள் இருந்தாலும், பண்ணைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து இனங்களிலும் உள்ளனர்.
அரசியல் கவனம் பெரும்பாலும் வெள்ளையின விவசாயிகள் மீதே இருப்பினும், களத்தில் நடக்கும் குற்றங்களும் வன்முறையும் எந்த வேறுபாடும் இன்றி எல்லோரையும் பாதிக்கின்றன.

நிறவெறி ஆட்சியின் போது கறுப்பின தென்னாப்பிரிக்கர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த ஃபிக்ஸ்பர்க்கின் புறநகரில் உள்ள மெக்ஹெலெங்கில், தாபிசெங் தாதகனா ஒரு சிறிய கடையை வைத்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, அவரது கணவர் தெம்பானி சாங்கோ கடையை மூடி கொண்டிருந்த போது ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. அவர் அண்டை வீட்டாரின் கதவைத் தட்ட ஓடினார். ஆனால், கதவைத் திறந்தால் கொன்றுவிடுவோம் என்று அவரைத் தாக்கியவர்கள் மிரட்டியுள்ளனர்.
அதன் பிறகு, தெம்பானியின் உடல் வெளியே தரையில் கிடப்பதை தாபிசெங் கண்டார்.
“அவரின் உடலில் முழுவதும் துப்பாக்கி குண்டு காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.” என்று கூறுகிறார் தாபிசெங்.
அவரது கொலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இப்போது தாபிசெங் தனது நான்கு குழந்தைகளுக்கான ஒரே ஆதரவாக உள்ளார்.
“‘அப்பாவைக் கொன்றது யார்?’ என்று குழந்தைகள் கேட்கிறார்கள், அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் தாபிசெங்.
ஃபிக்ஸ்பர்க்கிலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில், மார்தினஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்க அகதி விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தங்களது மிகப்பெரிய இடப்பெயர்வைத் திட்டமிடுவதில் அவர்கள் தற்போது மும்முரமாக உள்ளனர். விமான பயணத்தை தொடங்கும் நேரத்தை தெரிந்துகொள்ள மார்தினஸ் குடும்பம் காத்திருக்கிறது.
மார்தினஸ் இன்னமும் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்தவர் துன்புறுத்தப்படுவதாக நம்புகிறார்.
“இந்த நாட்டில் வெள்ளை இன விவசாயிகளான எங்களையோ அல்லது வெள்ளை இனத்தவரையோ அகற்றுவதற்கு அரசியல் காரணம் இருக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். அப்படி செய்தால் அவர்கள் இந்த நிலத்தையும் இடத்தையும் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியும்”என்று கூறும் அவர்,
“இந்த பய உணர்விலிருந்து விடுபட முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்த கடவுளுக்கு நன்றி”என்கிறார் மார்தினஸ்.
கூடுதல் தகவல்: இசா-லீ ஜேக்கப்சன் மற்றும் டமாசின் ஃபோர்ட்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு