பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜனவரி 6, 2021அன்று வழங்கிய உரையின் வெவ்வேறு பகுதிகளை இணைத்து எடிட் செய்ததற்காக டிரம்பிடம் பிபிசி மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால் இழப்பீட்டுக்கான அவரது கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.
இந்த எடிட் “அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை” கொடுத்துள்ளதாகவும், இந்த 2024 நிகழ்ச்சி மீண்டும் திரையிடப்படாது எனவும் பிபிசி கூறியுள்ளது.
இதனை திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்டு ,இழப்பீடு வழங்காவிட்டால், பிபிசி மீது 1 பில்லியன் டாலர் (759 மில்லியன் பவுண்டுகள்) இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரப்போவதாக டிரம்பின் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை பிபிசி இயக்குனர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜிநாமா செய்திருந்தனர்.
பிபிசி நியூஸ் கருத்துக்காக வெள்ளை மாளிகையை அணுகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட இரண்டாவது இதேபோல் திருத்தப்பட்ட வீடியோ கிளிப் டெய்லி டெலிகிராப்பால் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மன்னிப்பு வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அதன் திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் பிரிவில், டிரம்பின் உரை எவ்வாறு எடிட் செய்யப்பட்டது என்பது குறித்த விமர்சனங்களுக்குப் பிறகு பனோரமா நிகழ்ச்சி மதிப்பாய்வு செய்யப்பட்டதாக பிபிசி கூறியது.
“எங்கள் எடிட் உரையின் வெவ்வேறு பகுதிகளை விட, உரையின் ஒரு தொடர்ச்சியான பகுதியைக் காட்டுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்கியது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் இது அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்தார் என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தியது,” என்று அது கூறியது.
ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிபிசியின் வழக்கறிஞர்கள் அதிபர் டிரம்ப்பின் சட்டக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“பிபிசி தலைவர் சமீர் ஷா வெள்ளை மாளிகைக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார், அதில் 2021 ஜனவரி 6 ஆம் தேதி அதிபரின் உரையை எடிட் செய்ததற்காக அவரும் நிறுவனமும் வருந்துகிறோம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்” என பிபிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது
டிரம்பின் 2021-ம் ஆண்டு உரையில், “நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்; நமது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தப் போகிறோம்.” என்றார்.
50 நிமிடங்களுக்குப் பிறகு அதே உரையில், ” நாம் போராடுவோம். நாம் கடுமையாக போராடுவோம்” என கூறியிருந்தார்.
பனோரமா ஆவணப்படத்தில் அவர் கூறியதாக காட்டப்பட்ட உரையில், “நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்… நான் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். நாம் கடுமையாக போராடுவோம்.” என்றிருக்கிறது.
ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், தனது உரை “படுகொலை செய்யப்பட்டது” என்றும், அது வழங்கப்பட்ட விதம் பார்வையாளர்களை “ஏமாற்றியது” என்றும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் வழக்கறிஞர்களிடமிருந்து பிபிசி கடிதத்தைப் பெற்றது. ஆவணப்படத்தை “முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெறவும்” அது கோருகிறது, ஒரு மன்னிப்புக் கோருகிறது, மேலும் பிபிசி “அதிபர் டிரம்ப்புக்கு ஏற்பட்ட தீங்குகளுக்கு பொருத்தமான இழப்பீடு” வழங்க வேண்டும் என்றும் கூறியது.
டிரம்பின் சட்டக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து முக்கிய வாதங்களை முன்வைக்கிறது.
முதலாவதாக, பிபிசிக்கு அதன் அமெரிக்க சேனல்களில் பனோரமா எபிசோடை விநியோகிக்க உரிமை இல்லை என்று கூறுகிறது.
ஆவணப்படம் பிபிசி ஐபிளேயரில் கிடைத்தபோது, அது பிரிட்டனில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, ஆவணப்படம் டிரம்புக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்று அது கூறுகிறது, ஏனெனில் அவர் விரைவில் மீண்டும் (அதிபராக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்றாவதாக, வீடியோ கிளிப்பு தவறாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் ஒரு நீண்ட பேச்சைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் எடிட் தீய எண்ணத்துடன் செய்யப்படவில்லை என்று அது கூறுகிறது.
நான்காவதாக, இந்த வீடியோ கிளிப்பு ஒருபோதும் தனிமைப்படுத்தி பார்ப்பதற்காக கருதப்படவில்லை என்று அது கூறுகிறது. மாறாக, இது ஒரு மணி நேர நிகழ்ச்சியின் 12 வினாடிகள் ஆகும். இது (அந்த நிகழ்ச்சி) டிரம்புக்கு ஆதரவாக நிறைய குரல்களைக் கொண்டிருந்தது.
இறுதியாக, அமெரிக்காவில், பொது பிரச்னைகள் அல்லது அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சட்டத்தின் மூலம் மிகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.
பிபிசியின் உள் நபர் ஒருவர் கூறுகையில், பிபிசி முன்வைத்துள்ள வழக்கு மீதும், அதன் பாதுகாப்பிலும் வலுவான நம்பிக்கை உள்ளது என்றார்.