படக்குறிப்பு, இந்தியாவும் அமெரிக்காவும் பத்து வருட பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
“ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு” மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவதற்கு உதவும் இந்த ஒப்பந்தம், மோதல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் என்று சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளிடையே விரிசல் அடைந்த உறவுகளை செய்யவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் இந்தியா மீது விதித்த வரிகளில் ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25% ‘தண்டனை’ வரியும் அடங்கும்.
இந்தியா- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களுக்கும் கொள்கை வழிகாட்டுதலை இந்த ஒப்பந்தம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இது ஏற்கனவே வலுவாக உள்ள நமது பாதுகாப்பு கூட்டாண்மையில் புதிய சகாப்தம் ஒன்றை ஏற்படுத்தும். பாதுகாப்பு நமது இருதரப்பு உறவின் முக்கிய தூணாக இருக்கும். சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் சார்ந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு இந்த கூட்டாண்மை மிக முக்கியமானது.” என இந்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்
இந்த கூட்டாண்மையை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு புதிய தசாப்தத்தின் தொடக்கமாக அவர் விவரித்தார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி இடையேயான சந்திப்பின் போது பாதுகாப்பு ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது
இந்தியா – அமெரிக்கா வரி தகராறின் தாக்கம்
“இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த ஒப்பந்தம் நிறைவடையவிருந்தது, ஆனால் பாகிஸ்தானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான டிரம்பின் கருத்துகள் மீதான இந்தியாவின் அதிருப்தியால் ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதமானது” என்று யூரேசியா குழும சிந்தனைக் குழுவின் பிரமித் பால் செளத்ரி பிபிசி செய்தியாளர் ஷெர்லின் மோலனிடம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் வரிசையில் இந்த ஒப்பந்தம் சமீபத்தியது என்று அவர் கூறினார்.
“இது, இரு நாட்டு படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை அதிகரிக்கும். இந்தியாவுக்கு தொழில்நுட்ப அணுகலை வழங்கி, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகள் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவும் அமெரிக்காவும் சமீப காலமாக தங்கள் பாதுகாப்பு உறவுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, டிரம்புடனான அவரது பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்கா இந்தியாவுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்கும் என்றும், இதன் மூலம் இந்தியா F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்கும் வழியை உருவாக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவதும், ரஷ்யாவுடனான அதன் நீண்டகால பாதுகாப்பு உறவுகளும் கவலை தருவதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தென் கொரியாவில் சந்தித்தனர்.
‘இந்தியாவை விட அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது’
தற்போதைய இந்திய -அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விவரங்களைப் புரிந்துகொள்ள, தைவான்-ஆசியா எக்ஸ்சேஞ்ச் பவுண்டேஷனின் ஆராய்ச்சி மாணவரான சனா ஹாஷ்மியுடன் பிபிசி பேசியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” டிரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இதன் அடிப்படையிலேயே நாம் இந்தியா-அமெரிக்க உறவுகளை மதிப்பிடுகிறோம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் இருப்பதாக கூறுகிறோம்.” என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது எந்தவொரு தனிப்பட்ட தலைவராலும் பெருமளவில் பாதிக்கப்படுவதில்லை என கூறும் சனா ஹாஷ்மி, டிரம்பின் பதவிக்காலம் முடிந்ததும் நிலைமை மாறும் என்று கூறுகிறார்.
“இப்போது கையெழுத்திடப்பட்ட இந்தியா-அமெரிக்க ஒப்பந்தமும், இதற்கு முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இது அமெரிக்காவிற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தை, குறிப்பாக பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுகிறது” என்று சனா ஹாஷ்மி கூறுகிறார்.
இதற்கிடையில், வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தென் கொரியாவில் சந்தித்தனர்.
“டிரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் மிகச் சமீபத்தில் சந்தித்திருந்தாலும், அவர்களின் உறவு நேர்மறையான திசையில் நகரும் என எப்போதும் கூறிவிட முடியாது.” என்று சனா ஹாஷ்மி கூறுகிறார்.
“வரி தகராறு மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் இருந்தபோதிலும், அமெரிக்கா இன்னும் இந்தியாவை மிகவும் நேர்மறையாகப் பார்க்கிறது என்பதையே அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் காட்டுகிறது. அத்துடன் டிரம்ப் என்ன சொன்னாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து மேம்படும்.”
“இந்த ஒப்பந்தம் இந்தியாவை விட அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது என்றே நினைக்கிறேன், ஏனென்றால் தைவான் மற்றும் தென் சீனக் கடல் பிரச்னையாக இருந்தாலும் சரி, பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை தடுப்பதாக இருந்தாலும் சரி, பிராந்திய நட்பு நாடுகள் மிகவும் முக்கியம்” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன
இந்தியாவுக்கு ரஷ்யா இன்னும் முக்கியமான ஆயுத வழங்குநராக உள்ளது. ஆனால், இந்தியா தனது பாதுகாப்புத் துறையை பன்முகப்படுத்தவும் உள்நாட்டு திறனை மேம்படுத்தவும் முயற்சி செய்வதால், ரஷ்யாவின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.
சமீபத்திய மாதங்களில், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதலை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தை நவம்பர் மாதத்தில் எட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா ‘மிக விரைவில்’ கணிசமாகக் குறைத்துவிடும் என பிரதமர் நரேந்திர மோதி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீப காலங்களில் பலமுறை கூறிவிட்டார்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, கடந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து 52.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியது, இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.