பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images
படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் விவசாயிகளின் சூழல் குறித்த விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை இரவு, வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்டிடம், “இந்தியா தொடர்ந்து தனது அரிசியை அமெரிக்காவில் கொட்டுகிறது. இதற்கு ஏன் அனுமதி அளிக்கப்படுகிறது? இதற்கு அவர்கள் கட்டாயம் சுங்கவரி செலுத்த வேண்டும். அரிசி மீதான வரிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா?” என்று கேட்டார்.
அதற்கு ஸ்காட் பெசன்ட், “இல்லை. நாங்கள் இன்னும் அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், “ஆம், ஆனால் அவர்கள் தங்கள் அரிசியை இப்படி இங்கு அனுப்ப முடியாது. இதைச் செய்ய அவர்களை அனுமதிக்க முடியாது” என்றார்.
அமெரிக்க விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்காட் பெசன்ட் ஆகியோருக்கு இடையே இந்த உரையாடல் நடந்தது.
இதற்கிடையில், பிற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த சுங்கவரிகளால் கிடைக்கும் வருவாயில் இருந்து 12 பில்லியன் டாலர் அமெரிக்க விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அரிசியைக் காரணம் காட்டி டிரம்ப் மீண்டும் இந்தியா மீது புதிய வரிகளை விதிப்பாரா என்ற அச்சம் நிலவுகிறது.
தற்போது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக 25% அபராதம் உட்பட, இந்தியா மீது மொத்தம் 50% சுங்கவரியை அமெரிக்கா விதித்துள்ளது.
என்ன விவகாரம் ?
பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட்டிடம், ‘இந்தியா ஏன் அமெரிக்காவில் அரிசியைக் கொட்டுகிறது?’ என்று டிரம்ப் கேட்டார்.
அமெரிக்காவிற்கான இந்தியாவின் அரிசி ஏற்றுமதியை விவரிக்க டிரம்ப் ‘கொட்டுகிறது ‘ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
‘இந்தியா தனது அரிசியை அமெரிக்காவில் இப்படி கொட்ட முடியாது, இதை நான் கவனித்து கொள்கிறேன்’ என்றும் கூறினார்.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விவசாயிகள், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் அரிசி மற்றும் பிற வேளாண் பொருட்களை குறைந்த விலையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இது ‘தங்கள் நலன்களுக்கு அச்சுறுத்தலாக’ இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் பிரதிநிதி ஒருவர், ‘முந்தைய அரசின் கொள்கைகளாலும் உயர்ந்து வரும் பணவீக்கத்தாலும் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் விவசாயிகள் பொதுவாக டிரம்பின் ஆதரவாளர்களாக கருதப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில், அங்குள்ள விவசாயிகள் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நிலையற்ற விலையுடன் போராடி வருகின்றனர்.
பட மூலாதாரம், Abhishek Chinnappa/Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவிற்கு அதிக அளவில் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சராசரியாக 37.7% சுங்கவரி விதிக்கப்படுகிறது. அதேசமயம் அமெரிக்காவில் இந்திய வேளாண் பொருட்களுக்கு இந்த வரி 5.3% ஆக மட்டுமே உள்ளது. ஆனால் இந்தியா மீது டிரம்ப் விதித்த புதிய வரிகளால், இப்போது இது 25% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு, டிரம்பின் எச்சரிக்கை ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் “யுக்ரேன் போரில் புதினுக்கு உதவி செய்வதாக” ஒரு குற்றச்சாட்டை அமெரிக்கா இந்தியா மீது தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
அமெரிக்கா முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டை எதிர்க்கும் இந்தியா, தனது இறக்குமதி கொள்கை, “எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியில் இந்திய நுகர்வோரின் நலனுக்கானது” என்று கூறி வருகிறது.
சமீபத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார், அவருக்கு இங்கு மிகவும் அன்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
ரஷ்ய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, புதினுக்கும் மோதிக்கும் இடையிலான இந்த நட்பு, டிரம்பை அசௌகரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.
டிரம்ப், தொடர்ந்து இந்தியாவை ‘அதிக சுங்கவரி விதிக்கும் நாடு’ என அழைத்து வருகிறார். இந்தியாவின் வர்த்தகத் தடைகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் ஆகியவற்றை காரணம் காட்டி, அவர் இந்தியாவுக்கு 50% சுங்கவரி விதித்துள்ளார்.
இந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழு, இந்தியாவுக்கு வர உள்ளது. ஆனால் சுங்கவரிகளை குறைப்பது தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும், அரிசியை முதன்மையாக ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது.
இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியா ஆண்டுதோறும் 150 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது, இது உலகின் அரிசி உற்பத்தியில் 28 சதவீதமாகும்.
2024-25 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்தது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 30.3 சதவீத பங்கை வகிக்கிறது.
சீனா இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தியாளராக உள்ளது. அங்கு ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தப் பட்டியலில் வங்கதேசம், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உள்ளன.