பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் மோதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
தஜிகிஸ்தானில் தனக்கிருந்த அய்னி விமானத் தளத்தை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காலி செய்துள்ளது. இது வெளிநாட்டில் இந்தியாவுக்கு இருந்த ஒரே ராணுவத் தளமாக இருந்தது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் தளம், நிலவியல் ரீதியாக இந்தியாவுக்கு மிகுந்த உத்திசார்ந்த முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்ட தகவலின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த விமான தளத்தை மேம்படுத்த இந்தியா சுமார் 100 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது.
இந்தத் தளம் முதலில் சோவியத் காலத்தில் கட்டப்பட்டது.
பின்னர், இந்தியா அங்கு போர் விமானங்கள் தரையிறங்கக் கூடிய நீண்ட ஓடுபாதை, எரிபொருள் சேமிப்பு கிடங்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதிகள் போன்றவற்றை அமைத்தது.
அய்னி விமானத் தளம் தொடர்பான தகவல் பொதுவில் வெளியான பிறகு, இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் விவாதப் பொருளாகியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘இது இந்தியாவின் உத்திசார் தோல்வி’ என்று விமர்சித்துள்ளார்.
ஆனால், ‘ஒப்பந்தம் முடிந்ததால் இந்தியா இயல்பாகவே அத்தளத்திலிருந்து வெளியேறியது’ என அரசாங்கம் கூறுகிறது.
“2000களின் ஆரம்பத்தில் இந்தியா அய்னி தளத்தை தஜிகிஸ்தானில் நிறுவியது, பின்னர் அங்கு உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்தியது” என ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அய்னி விமான தளத்தின் முக்கியத்துவம்
பட மூலாதாரம், Tiffany Kary/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, தஜிகிஸ்தானில் வாகன் பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள ஒரு புத்த ஸ்தூபியின் இடிபாடுகள்
அய்னி விமானத் தளத்தின் உத்திசார்ந்த முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்தியா அங்கு தனது இருப்பை விரிவுபடுத்த பெரிய திட்டங்கள் வைத்திருந்ததாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.
“நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்தியா அங்கிருந்து படிப்படியாக வெளியேற வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. இப்போது, இந்தியாவின் ஒரே வெளிநாட்டு ராணுவத் தளமான அய்னி மூடப்பட்டுள்ளது. இது நமது உத்திசார்ந்த அரசியல் நகர்வுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவு” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அய்னி விமானப்படை தளம், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு அழகான அருங்காட்சியகமும் இருக்கிறது. 1,500 ஆண்டுகளுக்கும் மேலானதாக நம்பப்படும் ஒரு புத்தர் சிலை அங்கு முக்கிய காட்சிப்பொருளாக உள்ளது”என்றும் கூறினார்.
அக்டோபர் 30ஆம் தேதி, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த விவகாரம் குறித்து பதில் அளித்தார். அதன்பிறகே அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
“தஜிகிஸ்தானுடன் இணைந்து ஒரு விமானத் தளத்தை கட்டுவது தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அது பல ஆண்டுகள் நீடித்தது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்தபின், அந்த இடத்தை தஜிகிஸ்தானிடம் ஒப்படைத்தோம்”என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார் .
இந்தியாவிற்கு பின்னடைவு
பட மூலாதாரம், @narendramodi
படக்குறிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மானை சந்தித்தார்.
இந்த விமானப்படை தளம் இந்திய விமானப்படை மற்றும் எல்லை சாலை அமைப்பால் (BRO) கூட்டாக உருவாக்கப்பட்டது என்கிறார் பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி.
“அய்னி விமானப்படை தளம் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இது விமானப்படை விவகாரம் அல்ல, இது அரசாங்க விவகாரம். இந்த விவகாரத்தில் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை”
“இது மூடப்பட்டதால் இந்தியாவுக்கு இப்போது பெரிய இழப்போ, லாபமோ இல்லை. ஆனால், நாட்டின் திறனை வெளிப்படுத்தும் முயற்சி என இதனை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய ஆசியாவில் இருப்பை விரிவுபடுத்த முயன்று, விமானத் தளமும் கட்டினர், ஆனால் அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது அய்னி விமானப்படை தளம் கட்டப்பட்டது, அங்கு அவர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர். இந்தியாவும் தஜிகிஸ்தானும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் அங்கு ஒரு விமானப்படை தளத்தையும் மருத்துவமனையையும் அமைத்தன” என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா தாலிபன்களுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்கி அவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கியது, இது ஆப்கானிஸ்தானில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது என்றும் அவர் விளக்குகிறார்.
2021 இல், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
“ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தாலிபன்களுக்கு எதிராக கட்டப்பட்ட இந்த விமானப்படை தளத்தின் வடிவத்தில் இந்தியா தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டால், அது சரியாக இருக்காது” என்று அவர் கூறுகிறார்.
தற்போது இந்தியாவுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் முத்தக்கியின் இந்திய வருகை இதற்கான செய்தியைத் தருவதாகவும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா நம்புகிறார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது, தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி அதனை கண்டித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, முத்தக்கி ஒரு வார கால பயணமாக இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இது இந்தியா ஆப்கானிஸ்தான் மீதான தனது கொள்கையை மாற்றி வருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் .
வரலாற்று சிறப்புமிக்க அய்னி விமானப்படை தளம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துஷான்பேயிலிருந்து தெற்கே சுமார் 80 மைல் தொலைவில் உள்ள ஃபர்கார் விமானத் தளத்துக்கு அருகில் இந்தியா ஒரு மருத்துவமனையை அமைத்திருந்தது.
அய்னி விமானப்படைத் தளத்தின் கட்டுமானம், மத்திய ஆசியாவில் இந்தியாவின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக இருந்தது என்கிறார் ராகுல் பேடி.
நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அல்-கொய்தா போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஒரு முக்கிய ஆப்கானிய போர்த் தலைவரும் வடக்கு கூட்டணியின் தலைவருமான அஹ்மத் ஷா மசூத்தை கொன்றனர்.
காயமடைந்த நிலையில் அகமது ஷா, தஜிகிஸ்தானில் உள்ள ஃபர்கார் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு இந்திய மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாக ராகுல் பேடி கூறுகிறார்.
துஷான்பேயிலிருந்து தெற்கே சுமார் 80 மைல் தொலைவில் உள்ள ஃபர்கார் விமானத் தளத்துக்கு அருகில் இந்தியா ஒரு மருத்துவமனையை அமைத்திருந்தது.
அய்னி விமானப்படைத் தளம் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக மிக முக்கியமானதாக இருந்தது. இந்தத் தளத்துக்கு அருகே இந்தியா ஒரு கள மருத்துவமனையையும் நிறுவியிருந்தது.