சிவகாசி:
இந்திய அளவில் பா.ஜ.க.வின் தொடர் வெற்றிக்கு காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல காங்கிரஸ் தான் காரணம். நம்ம தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் போட்டுள்ள ஓட்டில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போய்விட்டார்கள். குறைந்தபட்ச நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரசை இனி எந்த காலத்திலும் நாம் நம்பப்போவது இல்லை. அவர்களுக்கு சரியான பாடத்தை நாம் கற்றுக்கொடுக்கிறோமோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் கற்றுக் கொடுப்பார்கள் என இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். விருதுநகர் பராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திட்டமிட்டது.
* பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் ஒருவர் தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு கனெக்டிங் கால் செய்தார்.
* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.
* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் எனக் கூறியதும் உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்தார்.
* இதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
* தி.மு.க.- அ.தி.மு.க.வின் திட்டத்தை உடைத்தது காங்கிரஸ் என்பதால் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளது.
* பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகமாக முடிவு எடுப்பதற்காக ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்தது.
* வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
* தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசி இருக்க வேண்டும்.
* கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார்.
* எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் திமுக, அதிமுக கூட்டணி அமைக்கும் என உறுதிபட தெரிவித்தார்.