0
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும் செய்திகள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்குச் செல்லும் பாகிஸ்தான் நிவாரண விமானத்திற்கு இந்தியா விரைவாக அனுமதி வழங்கியதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி கோரும் விண்ணப்பம் பாகிஸ்தானால் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே கோரிக்கையின் நோக்கம் என்பதால், இந்தியா இந்தக் கோரிக்கையை துரித கதியில் செயல்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த அனுமதி, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை வழங்க மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே, இந்தியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.