படக்குறிப்பு, இலங்கையில் பாகிஸ்தான் கடற்படை ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.
“இலங்கையில் திட்வா புயல் எதிரொலியாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் காணாமல் போயுள்ளனர். 432 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சுமார் 13 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று அந்நாட்டு அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையுடன் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன.
ஆபரேஷன் சாகர்பந்து
பட மூலாதாரம், X/AF_MCC
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் உதவ இந்தியா ஆபரேஷன் ‘சாகர் பந்துவை’ அறிவித்தது.
அதன் கீழ் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பல் ஆகியவை நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நவம்பர் 28-ஆம் தேதி கொழும்பு சென்றன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா வழங்கியது.
இந்தியாவிலிருந்து 9 டன் நிவாரணப் பொருட்கள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் 80 என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் நவம்பர் 29-ஆம் தேதி இலங்கை சென்றது. அவர்கள் படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவு உட்பட 12 டன் அளவிலான மனிதாபிமான உதவிகள் அடங்கிய இந்திய விமானப்படை விமானம் நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
இந்தியாவில் இருந்து மூன்றாவதாக ஐஎன்எஸ் சுகன்யா கப்பல் டிசம்பர் ஒன்றாம் தேதி 12 டன் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை சென்றது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 53 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், X/DrSJaishankar
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து சென்ற சேத்தக் ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் இலங்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் 2 எம்ஐ-16 ஹெலிகாப்டர்கள் இலங்கையில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோட்மாலே போன்ற பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மீட்டு கொழும்பு அழைத்துச் சென்றன.
தியாதலவா ராணுவ முகாமிலிருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கோட்மாலே பகுதிக்கு 40 வீரர்கள் அடங்கிய இலங்கை ராணுவத்தின் 5 குழுக்கள் இந்தியா விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டன.
“இந்த மீட்புப் பணிகளில் பெண்கள், குழந்தைகள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட சிக்கியவர்கள் என 150-க்கும் அதிகமானோர் வான் வழியாக மீட்கப்பட்டனர். இவர்களில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.” என வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், X/AF_MCC
விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்
பட மூலாதாரம், X/IndiainSL
இலங்கையில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் வெவ்வேறு நாடுகளிலிருந்து கொழும்பு வழியாக இந்தியா வர திட்டமிட்டிருந்த பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருந்தன.
இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் சிறப்பு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் வர்த்தக விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டதாக கூறும் வெளியுறவு அமைச்சகம், தற்போது வரை 2000-க்கும் மேற்பட்டோர் டெல்லி மற்றும் திருவனந்தபுரத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்பதாக இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் செய்த உதவிகள் என்ன?
பட மூலாதாரம், X/Pakistan High Commission Sri Lanka
இலங்கையில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சைஃப் போர்க்கப்பல் மீட்புப் பணிகளில் உதவியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் தரப்பிலிருந்து உணவு பொருட்கள், அத்தியாவசிய முதலுதவி உபகரணங்கள், அவசர கால மருந்துகள் வழக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை போக நடமாடும் மருத்துவமனை அமைப்பு, படகுகள், கூடாரங்கள், போர்வைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் மருந்துகள் உடன் 45 பேர் அடங்கிய மீட்புக் குழு இலங்கைக்கு அனுப்பப்படும் என பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்திருந்தது.
பட மூலாதாரம், Pakistan Navy
படக்குறிப்பு, இலங்கையில் மீட்புப் பணியில் பாகிஸ்தான் படையினர்.
மற்ற நாடுகளின் உதவி என்ன?
இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சீன செஞ்சிலுவை சங்கம் அவசர உதவியாக 1 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அவசர நிவாரணப் பொருட்களுடன் 4 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவை ஜப்பான் அரசு அனுப்பியிருந்தது. மருத்துவ நிபுணர்கள் அடங்கிய இந்தக் குழு மேற்கொள்ளும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஜப்பான் பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது.
மக்கள் கூறுவது என்ன?
இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ருவான் ரணசிங்கே இந்தியாவின் என்.டி.ஆர்.எஃப் குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார். “இலங்கையில் பதுளை மாவட்டம் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று. இங்கே இன்னும் பல இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறைந்தது 53 பேர் மண்ணில் புதைந்துவிட்டனர். அங்கே மீட்புப் பணியில் என்.டி.ஆர்.எஃப் குழுவினர் மிகவும் உதவியாக உள்ளனர்.” என அவர் தெரிவித்தார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பாகிஸ்தான் உதவிக்கு நன்றி தெரிவித்து இலங்கையைச் சேர்ந்த நிபராஸ் ரஹ்மான் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். “இலங்கைக்கு உதவி தேவைப்பட்டபோது பாகிஸ்தான் உடனடியாக வந்தது. இது தான் உண்மையான சகோதரத்துவம்.” என அதில் தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதை பாராட்டி பதிவிட்ட ஷானே பிரியவிக்ரமா என்பவர், “போட்டி நாடுகளும் கூட ஒரே குறிக்கோளுடன் இங்கு வந்துள்ளனர். நன்றி சகோதரர்களே.” என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார்.
படக்குறிப்பு, கொழும்புவைச் சேர்ந்த உமாலினி
கொழும்புவைச் சேர்ந்த உமாலினி பிபிசியிடம் பேசுகையில், “இந்த நெருக்கடியான சமயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் உதவி செய்யத் தயங்கவில்லை. இது பிராந்திய நட்பு மற்றும் மனிதநேயம் என்றால் என்ன என்பதைக் காட்டுகிறது. இந்த உதவிகளும் நெருக்கடியான நேரத்தில் காட்டப்படும் அக்கறையும் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது” என்றார்.
“கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட இந்த முறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் வீடு, தொழில் என எல்லாவற்றையும் இழந்துள்ளனர். இத்தகைய நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதவி செய்வதற்கு மிகவும் நன்றி,” என கொழும்புவில் தமிழர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.