இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள்.
கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது.
நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது” என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன்.
கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் – ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர்.
அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார்.
“எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்” என்கிறார் செல்வராஜ்.
அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர்.
“அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது” என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன.
செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார்.
“நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். ‘அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்’ என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்” என்கிறார் தங்கேஸ்வரி.
குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
படக்குறிப்பு, மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள்
செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.
“என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்” என்கிறார் அவர்.
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது.
“சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது ‘டாடா காப்பாத்துங்கன்னு’ குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது ‘டாடா வந்துட்டீங்களா’ என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்” என்கிறார் கமல்ராஜ்.
“ஆனால், வீட்டை நெருங்கும்போது ‘டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா’ என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது” என்கிறார் கமல்ராஜ்.
இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது.