0
ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஆதரவு அமைதித் திட்டத்தின் சில அம்சங்கள் குறித்துத் தனக்குச் சந்தேகம் இருப்பதாக ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்தார்.
இலண்டனில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), இங்கிலாந்து கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) ஆகியோருடனான நேற்றைய (08) சந்திப்பைத் தொடர்ந்து, மெர்ஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
“அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் ஆவணங்களில் நாங்கள் பார்க்கும் சில விவரங்கள் குறித்து நான் சந்தேகப்படுகிறேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும், அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம்,” என்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு மெர்ஸ் கூறினார்.
“இது நம் அனைவருக்கும் ஒரு தீர்க்கமான நேரமாக இருக்கலாம். எனவே, உக்ரைனுக்கான எங்கள் ஆதரவைத் தொடர நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
உக்ரைனுக்கான தங்களின் ஆதரவை யாரும் சந்தேகிக்க வேண்டாம் என்றும் மெர்ஸ் வலியுறுத்தினார்.
அவருடன் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், “அமைதிப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்கு, ஐரோப்பியர்கள், உக்ரைனியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஆகியோரின் பொதுவான நிலைப்பாடுகளுக்கு இடையே ஒருங்கிணைவு ஏற்படுத்துவதுதான் முக்கியப் பிரச்சினையாகும்” என்று தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்கர்கள் இல்லாமல் நம்மால் நிர்வகிக்க முடியாத சில விஷயங்கள் உள்ளன, அதேபோல் ஐரோப்பா இல்லாமல் நம்மால் நிர்வகிக்க முடியாத சில விஷயங்களும் உள்ளன,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தொடர்ச்சியான உதவிக்கு உறுதியளித்தார். “நாங்கள் இந்தப் போரிலும் பேச்சுவார்த்தைகளிலும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். இதனால் நியாயமான மற்றும் நீடித்த தீர்வு கிடைப்பதை உறுதிசெய்யலாம்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உக்ரைன் ஜனாதிபதி அந்த முன்மொழிவைப் “படிக்கவில்லை” என்றும், அதில் கையெழுத்திட “தயாராக இல்லை” என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்து, உக்ரைன் ஜனாதிபதியை விமர்சித்திருந்தார்.
தொடர்புடைய செய்தி: உக்ரேன் ஜனாதிபதியின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவிப்பு!