சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
எந்த அணிகள் எந்த இடத்தில்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் முதல் இடத்தில் இந்திய அணியும், 2வது இடத்துக்கு ஆஸ்திரேலிய அணியும் சரிந்துள்ளது. பெர்த் டெஸ்டில் இந்திய அணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் நியூசிலாந்து அணியும், 5-வது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியும் உள்ளன. இதில், இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே, புள்ளிக்கணக்கில் வேறுபாடு பெரிதாக இருந்தாலும், வெற்றி சதவிகிதம் என்பது மிகவும் குறைந்த நிலையில் இருக்கிறது.
இன்னும் 16 டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டிய நிலை இருப்பதால், எந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது தெளிவாக இல்லை. அதேபோன்று, எந்த அணியும் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் உறுதி செய்யவில்லை.
முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் வெற்றி சதவிகிதத்திற்கும், அடுத்த 4 இடங்களில் இருக்கும் அணிகளுக்கும் இடையிலான வெற்றி சதவிகிதத்திற்குமான வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளின் வெற்றி, தோல்விகள் இறுதிப் போட்டிக்கு யார் செல்வார்கள் என்பதை முடிவு செய்யும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி எப்படி நடக்கிறது?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று 2 ஆண்டுகள் வரை நடக்கும். ஏற்கனவே 2 சாம்பியன்ஷிப் போட்டி நடந்துள்ளது. ஒன்றில் நியூசிலாந்து அணியும், மற்றொன்றில் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. 3வது சாம்பியன்ஷிப் சுற்று 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்கியது, 2025ம் ஆண்டு, ஜூன் மாதம் முடிவடைய உள்ளது.
இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டிலும் 3 தொடர்களை வெளிநாட்டிலும் விளையாட வேண்டும். ஒரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும், போட்டி ‘டை’யில் முடிந்தால் 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் 4 புள்ளிகளும் வழங்கப்படும்.
இந்திய அணிக்கு வாய்ப்பா?
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா எளிதாக செல்லும் வாய்ப்பிருந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனபின் இந்திய அணிக்கான வாய்ப்புப் பாதை குறைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்துக்கு சரிந்தது, ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடைசி வாய்ப்பாகும். இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றபின், அட்டவணையிலும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இந்திய அணியின் வெற்றி சதவீதம் 61.11 ஆக உயர்ந்தது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 57.69ஆகக் குறைந்தது.
இன்னும் இந்திய அணிக்கு 4 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அதில் 3 ஆட்டத்தில் வென்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படு்த்திக்கொள்ளும். அவ்வாறு 4-0 என்று டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால் வெற்றி சதவீதம் 65.69 ஆக உயரும்.
ஒருவேளை நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பயணத்தில் அந்த அணியை 3-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினால்கூட இந்திய அணியைவிட குறைவாக 54.29 ஆகவே இருக்கும்.
அதேசமயம் தென் ஆப்பிரிக்கா அணி உள்நாட்டில் இலங்கையுடன் 2 போட்டிகளிலும், பாகிஸ்தானுடன் 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் 69.44 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். இந்திய அணி 2வது இடத்தைப் பிடிக்கும் என்றாலும் இந்திய அணியின் இடம் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொருத்து அமையும்.
ஒருவேளை ஆஸ்திரேலிய அணியிடம் 2-3 என்று டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றாலும் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதற்கு நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்ய வேண்டும். தென் ஆப்ரிக்க அணி உள்நாட்டில் இலங்கையுடன், பாகிஸ்தானுடான டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா- இலங்கை டெஸ்ட் தொடர் 0-0 என்று முடிய வேண்டும்.
இவ்வாறு நடந்தால், ஆஸ்திரேலிய அணி 58.77 சதவிகிதத்துடன் முதலிடத்தையும், இந்திய அணி 53.51 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடிக்கும். தென் ஆப்ரி்க்கா 52.78 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 52.38 புள்ளிகளுடனும், இலங்கை 51.28 புள்ளிகளுடன் முடிக்கும்.
ஆஸ்திரேலியா பட்டத்தைத் தக்கவைக்குமா?
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளும், இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டியும் உள்ளன. ஆஸ்திரேலிய அணி தனக்கிருக்கும் 6 டெஸ்ட் போட்டிகளில் 5 ஆட்டங்களில் வென்றாலே இறுதிப் போட்டிக்கு 2வது முறையாகத் தகுதி பெற்றுவிடலாம். 4 வெற்றிகள் கூட போதுமானது என்றாலும், ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது 90 புள்ளிகளுடன், 57.69 வெற்றி சதவிகிதத்துடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை வென்றால், 67.65 சதவிகிதம் வரை புள்ளிகள் பெறலாம்.
நியூசிலாந்தும், தென் ஆப்ரிக்காவும் தொடர்ந்து தங்களிருக்கும் போட்டிகளில் வென்றால் வெற்றி 64 சதவிகிதத்தைக் கடக்கும். ஆனால், ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் வென்றால்தான் நியூசிலாந்து அணியை 64.29 சதவிகிதத்துடன் 2வது இடத்துக்கு முன்னேறலாம். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தனக்கிருக்கும் 4 போட்டிகளிலும் வென்றால் 69 சதவிகிதம் வரை புள்ளிகள் பெறும்.
இந்திய அணியை 2-3 என ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்தாலும், இலங்கை அணியை 2-0 என்று வென்றுவிட்டால், இறுதிப்ப போட்டிக்கு செல்ல முடியும். இந்திய அணியின் 58.77 புள்ளிகளைவிட கூடுதலாகப் பெற்று 60.53 என ஆஸ்திரேலிய அணி முடிக்கும். நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியின் முடிவுகளைப் பொறுத்து ஆஸ்திரேலிய அணி நிலை தீர்மானிக்கப்படும்.
தென் ஆப்ரிக்கா தகுதி பெறுமா?
தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் இலங்கையுடன் 2 டெஸ்ட், பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. தற்போது தென் ஆப்ரிக்கா புள்ளிப்பட்டியலில் 52 புள்ளிகளுடன், 54.17 வெற்றி சதவீதத்துடன் 5வது இடத்தில் இருக்கிறது.
ஒருவேளை இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்கா வென்றுவிட்டால், இறுதிப் போட்டிக்கு உறுதியாகத் தகுதி பெறும். தென் ஆப்ரிக்க அணி 3 வெற்றிகள், ஒரு டிரா செய்தால் 63.89 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு அதிக வாய்ப்பும், ஒரு தோல்வி, 3 வெற்றிகள் பெற்றால் 61.11 சதவிகிதம் பெறும், இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிடும் என்றும் கூற இயலாது.
தென் ஆப்ரி்க்க அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் 69.40 சதவிகிதம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். ஒருவேளை தென் ஆப்ரிக்கா 61.11 என முடித்தால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்திய அணிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துவிடும். தென் ஆப்ரிக்கா இறுதிப்போட்டிக்குச் செல்ல 4 போட்டிகளிலும் வெல்வது பாதுகாப்பானது.
இலங்கை அணிக்கு பெரிய சவால்
இலங்கை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 60 புள்ளிகளுடன், 55.56 வெற்றி சதவிகிதத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது. இன்னும் இலங்கை அணிக்கு 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. தென் ஆப்ரிக்க அணியுடன் அந்நாட்டில் 2 போட்டிகளும், இலங்கை அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.
இலங்கை அணி 4 போட்டிகளிலும் வென்றால் 69.23 சதவிகிதம் பெற்று தகுதி பெறும். ஒருவேளை ஒரு தோல்வி, 3 வெற்றிகள் பெற்றால் 61.54 சதவிகிதம் என இலங்கை முடிக்கும். இறுதிப்போட்டிக்குள் இலங்கை நுழைவதற்கான வாய்ப்பு, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளின் டெஸ்ட் வெற்றி, தோல்வியைப் பொருத்து அமையும்.
நியூசிலாந்து அணி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா?
நியூசிலாந்து அணி உள்நாட்டில் இந்திய அணியை 3-0 என டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து ஏக உற்சாகத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடும் முன்புவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால், டெஸ்ட் தொடர் வெற்றிக்குப்பின் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலிலும் 72 புள்ளிகளுடன், 54.55 வெற்றி சதவிகிதத்துடன் 4வது இடத்துக்கு நகர்ந்தது. நியூசிலாந்து அணி கடைசியாக 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றால் 64.29 சதவிகிதத்துடன் முடிக்கும். நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட அதன் வெற்றி சதவிகிதம் 57.14 ஆகக் குறைந்துவிடும். அதன்பின் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்திருக்க வேண்டியதிருக்கும்.
இது சாத்தியமா?
இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் தங்களின் டெஸ்ட் போட்டிகளில் வென்றால்கூட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது கடினம். இந்த அணிகள் இறுதிப் போட்டிக்கான ரேஸில் இல்லை.
குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளுடன் தலா 2 டெஸ்ட் போட்டிகள் என 4 போட்டிகள் உள்ளன. இதில் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வென்றால், 52.38 வெற்றி சதவிகிதம் பெறும். ஆனாலும், இறுதிப் போட்டிக்குச் செல்ல பிற அணிகளின் உதவி தேவை.
அதாவது, இலங்கை அணி 0-1 என தென் ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்து, 1-1 என ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய அணியிடம் 1-2 என இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்க வேண்டும். நியூசிலாந்து அணி 1-2 என இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தால், பாகிஸ்தான் அணி 52.38 புள்ளிகளுடன் பைனலில் 2வது இடத்துக்கு தகுதி பெறும். இது சாத்தியமா?
மற்ற இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், வங்கதேச அணிகள் தங்களுக்குரிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தோற்றால்கூட இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு