படக்குறிப்பு, வீடு மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஸ்ரீவத்ஸ்கட்டுரை தகவல்
சென்னை போரூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை குத்தகைக்கும் வாடகைக்கும் விடுவதாகக் கூறி, பலரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஒரு நபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறையில்லை. இதிலிருந்து தப்புவது எப்படி?
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, ஆன்லைன் தளங்களில் விளம்பரம் வெளியிட்டு, பலரிடமும் பணத்தை வசூலித்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையில் போரூக்கு அருகில் உள்ள பெரிய பணிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ். இவர் தனக்குச் சொந்தமான வீடு ஒன்று கெருகம்பாக்கத்தில் இருப்பதாகவும் அந்த வீட்டை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடவிரும்புவதாகவும் ஆன்லைன் செயலிகளிலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் செய்தார்.
இதையடுத்து அந்த வீட்டை குத்தகைக்குப் பெறுவதற்கும் வாடகைக்குப் பெறுவதற்கும் என பலர் ஸ்ரீவத்ஸை அணுகியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சில லட்சங்களைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருக்கிறார் ஸ்ரீவத்ஸ்.
இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஆட்டோ ஓட்டுநரான பவானி ஆனந்த்தும் ஒருவர். என்ன நடந்தது என்பது குறித்து பவானி ஆனந்தின் உறவினரான மணி விரிவாக விளக்கினார்.
‘பணத்தைப் பெற்றதும் தலைமறைவு’
“ஆன்லைன் செயலியில் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு வீட்டைப் பார்க்கலாமா எனக் கேட்டோம். அவர் வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு ஏற்கனவே ஒருவர் குடியிருந்தார். அவர் விரைவில் காலி செய்யப் போகிறார், நீங்கள் குடிவந்துவிடலாம் என ஸ்ரீவத்ஸ் சொன்னார். வீடு பிடித்திருக்கவே நான்கரை லட்ச ரூபாய்க்கு குத்தகைக்குக் கேட்டோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். இதற்குப் பிறகு நான்கு லட்சத்தை ரொக்கமாகவும் ஐம்பதாயிரத்தை ஜிபே மூலமும் அவரிடம் கொடுத்தோம். பணத்தை வாங்கிக்கொண்ட அவர், ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, அன்றைய தினம் குடியேறலாம் என்று சொன்னார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், அதற்குப் பிறகு அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அவரைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. எந்த வீட்டிற்கு பணம் கொடுத்தோமோ, அங்கே சென்றால், எங்களைப் போலவே சிலர் காத்திருந்தார்கள்” என்கிறார் மணி.
இதேபோல ராமாபுரத்தைச் சேர்ந்த எஸ். கார்த்திகேயனும் பணம் கொடுத்த ஏமாந்திருக்கிறார். ஆன்லைன் செயலியில் இந்த வீடு குறித்த விளம்பரத்தைப் பார்த்து ஸ்ரீவத்ஸைத் தொடர்புகொண்டார் கார்த்திகேயன். இருவரும் பேசிய பிறகு, அந்த வீட்டிற்கு 13,500 ரூபாயை வாடகையாக ஒப்புக்கொண்டு, ஒன்றரை லட்ச ரூபாயை முன் பணமாக அக்டோபர் மாத இறுதியில் ஸ்ரீவத்ஸின் வீட்டில் வைத்து கொடுத்திருக்கிறார் கார்த்திகேயன்.
கண்டுபிடிக்க உதவிய லாரி
நவம்பர் எட்டாம் தேதியன்று வீட்டில் குடியேறலாம் என ஸ்ரீவத்ஸ் இவரிடம் கூறியிருக்கிறார். அடுத்த நாள் குடியேற வேண்டிய நிலையில், ஏழாம் தேதியன்று ஸ்ரீவத்ஸை அழைத்திருக்கிறார் கார்த்திகேயன். ஆனால், அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
கார்த்திகேயன் வேறு ஊரில் இருந்ததால், தன்னுடைய நண்பர் ஒருவரை ஸ்ரீ வத்ஸின் வீட்டிற்கு அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவர் பெரிய பணிச்சேரிக்கு வந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோதுதான், பலரும் இதுபோல ஏமாந்தது தெரிந்தது. இதையடுத்து கார்த்திகேயனும் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதுபோல ஏமாந்த சிலர், மௌலிவாக்கத்தில் அவர் குடியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர் காலிசெய்துவிட்டதாக அருகில் இருப்பவர்கள் சொல்லியிருக்கின்றனர். “இதையடுத்து, அவர் தனது பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்கின் எண்ணை சிசிடிவி பதிவுகளை வைத்துப் பிடித்தோம். அந்த டிரக்கை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரித்தபோது ஸ்ரீவத்ஸ் மாங்காடு பகுதியில் புதிதாக குடியேறியிருப்பது தெரிந்தது. நாங்களும் இன்னும் சிலரும் சென்று அவரைப் பிடித்தோம். அவர் எங்களைப் பார்த்ததும் யாரென்றே தெரியாது எனக் கூறிவிட்டார். வீட்டைக் குத்தகைக்குக் கொடுக்க போடப்பட்ட பத்திரத்திலும் கையெழுத்திட்டிருந்தார். அது தன்னுடைய கையெழுத்தில்லை எனவும் மறுத்துவிட்டார். யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் கூறிவிட்டார். பிறகு அவரை மௌலிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றார் மணி.
இந்த விவகாரம் வெளியான நிலையில் மேலும் பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பட்டாபிராமைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மட்டும் 11 லட்ச ரூபாயை வீட்டிற்காக ஸ்ரீவத்ஸிடம் கொடுத்துள்ளார். மேலும் ஒருவர் 9 லட்ச ரூபாயை ரொக்கமாகக் கொடுத்திருக்கிறார். 10க்கும் மேற்பட்டவர்கள் இதுபோல பணம் கொடுத்து ஏமாந்திருக்கின்றனர். மொத்தம் 28 பேர் இதுபோல ஏமாந்திருப்பதாக பல காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதில் ஸ்ரீவத்ஸிடம் பணம் கொடுப்பவர்கள் சிலர், அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதில், பணத்தை எண்ணிப் பார்க்காமல் வாங்கும் ஸ்ரீவத்ஸ், ரூபாய் நோட்டு கட்டுகளை கையில் தூக்கிப் பார்த்தே எவ்வளவு இருக்கிறது என்பதை தன்னால் அறிய முடியும் எனக் கூறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், ஒரே வீட்டைக் காட்டி, பலரிடமும் குத்தகை பணத்தைப் பெற்று ஏமாற்றும் சம்பவங்கள் நடப்பது முதல் முறையல்ல. குறிப்பாக சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதுபோல பல முறை நடந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் அயனாவரத்தில் வசித்துவந்த சிவகுமார் என்பவர், மணிகண்டன் என்பவரிடம் தனக்குச் சொந்தமான வீட்டை குத்தகைக்குத் தருவதாகக் கூறி, 15 லட்ச ரூபாயைப் பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குடியிருப்பு வீடுகள் (கோப்புப்படம்)
ஆனால், வீட்டை குடியிருக்க ஒப்படைக்காமல் சிவகுமார் இழுத்தடித்த நிலையில், மணிகண்டன் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்தபோது, அந்த வீடு ஏற்கனவே ஒரு தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவகுமார் கைதுசெய்யப்பட்டார்.
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் இதுபோல ஒரு மோசடி பதிவாகியிருக்கிறது. அதில் தங்களுக்குச் சொந்தமேயில்லாத வீட்டை காட்டி பணத்தைப் பெற்றதாக புகார் கூறப்பட்டது. கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடியிருக்க வீடு தேடிவந்த நிலையில், ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து மகாராஜா என்பவரை அணுகினார். மகாராஜா தங்களுடைய வீடு என்றுகூறி ஒரு வீட்டைக் காட்டினார். அந்த வீட்டிற்கு குத்தகை பணமாக ஐந்து லட்ச ரூபாய் பேசப்பட்டது. முன் பணமாக, இரண்டு லட்ச ரூபாயைக் கொடுத்தார் மணிகண்டன்.
ஆனால், வீட்டைக் கொடுக்க இழுத்தடித்தார் மகாராஜா. இது குறித்து மகாராஜாவிடம் மணிகண்டன் கேட்டபோது அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டவே காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மணிகண்டன். காவல் துறையினரின் விசாரணையில், மணிகண்டனுக்குக் காட்டப்பட்டது மகாராஜாவுக்குச் சொந்தமான வீடு அல்ல என்பதும் வேறொருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மகாராஜா ஏழு பேரிடம் இதுபோல குத்தகைக்குத் தருவதாகக் கூறி, 36 லட்ச ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, மணிகண்டனை மிரட்ட பயன்படுத்தப்பட்டது உண்மையான துப்பாக்கி இல்லை என்பதும் துப்பாக்கி வடிவிலான லைட்டர் என்பதும் தெரியவந்தது.
2020-ஆம் ஆண்டில் சென்னை தாம்பரம் பகுதியில், காலியான வீடுகளை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டின் புகைப்படங்களை எடுத்து ஆன்லைன் செயலிகளில் விளம்பரம் செய்து, வேறொருவருக்கு குத்தகைக்கு விடும் மோசடி நடைபெற்றது. இதுபோன்ற வீடுகளில் குடியேறும் நபர்களுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு உண்மையான உரிமையாளர்களைப் பார்க்கும்போதுதான் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பதே தெரியவந்தது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேரைக் கைதுசெய்தது காவல்துறை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குடியிருப்பு வீடுகள் (கோப்புப்படம்)
தொடரும் மோசடிகள் – தப்புவது எப்படி?
சென்னை போன்ற நகரங்களில் வீடுகளைத் தேடும் அவசரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற மோசடிகளில் இருந்து எப்படித் தப்புவது?
வீடுகளில் வாடகைக்குச் செல்பவர்களோ, குத்தகைக்குச் செல்பவர்களோ இது தொடர்பான ஒப்பந்தங்களைப் பதிவுசெய்வதுதான் ஒரே வழி என்கிறார்கள் பதிவுத்துறை நிபுணர்கள். பதிவுத் துறையின் முன்னாள் கூடுதல் தலைவரான ஆ. ஆறுமுக நயினார் இது தொடர்பாக பிபிசியிடம் விவரித்தார்.
“தமிழ்நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, சொத்துகள் தொடர்பாக மூன்று விதமான சிக்கல்கள் தொடர்ந்து எழுந்துவந்தன. ஒன்று, உரிமையாளருக்கே தெரியாமல் பவர் ஆஃப் அட்டர்னியை வைத்திருப்பதாகக்கூறி அந்தச் சொத்தை விற்பது. இரண்டாவது, ஒரே சொத்தை பல வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெறுவது. மூன்றாவதாக, ஒரே சொத்தை பலருக்கு குத்தகைக்கு விடுவதாக ஒப்பந்தம் செய்வது. இது தொடர்பாக பல புகார்கள் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டன.”
“இதற்கு ஒரே தீர்வு, இந்த மூன்றையும் பதிவுசெய்வதை கட்டாயமாக்குவதுதான் என புரிந்தது. 2009ல் பவர் ஆஃப் அட்டர்னியை கட்டாயமாக்கி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு சட்டத் திருத்தங்களின் மூலம், அடமானம் வைப்பது, குத்தகைக்கு விடுவதையும் பதிவுசெய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது. அப்படிப் பதிவுசெய்தால் இதுபோன்ற மோசடிகளுக்கு வழியே இருக்காது.”
“ஆனால், பதிவுக் கட்டணம், அலைச்சல் போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் பதிவுசெய்வதில்லை. ஒரு வருடத்திற்கு மேலான ஒப்பந்தங்கள்தான் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதால், பலர் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். இதனால்தான் இவ்வளவு மோசடிகள் நடக்கின்றன” என்றார்.