இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே.
1. செந்துாரப்பூவே…
’16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது.
முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே…ஜில்லென்ற காற்றே…’ என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும்.
செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது.
“உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்” என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. ‘செந்தூரப்பூவே’ எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், gangaiamaren
2. பூவரசம் பூ பூத்தாச்சு
கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக ‘பூவரசம் பூ பூத்தாச்சு’ பாடல்.
ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது.
3. புத்தம் புது காலை
அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.
பட மூலாதாரம், gangaiamaren/Instagram
படக்குறிப்பு, இளையராஜாவுடன் கங்கை அமரன்
4. ஆசையை காத்துல துாதுவிட்டு
கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் ‘ஆசையை காத்துல துாதுவிட்டு’ . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது.
5. சின்ன மணி குயிலே
அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
பட மூலாதாரம், Youtube
6. நித்தம் நித்தம் நெல்லு சோறு
மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா – ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார்.
நிழல்கள் படத்தில் வரும் பாடல் ‘பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்’ இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள்.
8. என் இனிய பொன் நிலாவே
மூடு பனி படத்தில் வரும் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை பாடுவதாக அமைத்திருப்பார்.
9. என் ஜோடி மஞ்சக்குருவி
விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன்.
10. விளையாடு மங்காத்தா
மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது