சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் அமைத்து தரவேண்டும் என கார்த்திகா கோரிக்கை விடுத்திருந்தார். அதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து, கண்ணகி நகர் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழகம் முழுவதும் கண்ணகி நகர் புகழ் எதிரொலித்து வருகிறது.
கண்ணகி நகரில் அமைக்கப்பட்டு வரும் உள்ளரங்க கபடி மைதானம், மழை, வெயில் கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற உதவியாக இருக்கும். கார்த்திகா போல இன்னும் பல வீராங்கனைகளை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் பிரியா, கபடி வீராங்கனை கார்த்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.