0
நாம் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். பலர் காலை உணவை தாமதமாகவும், மதிய உணவை அவசரமாகவும் அல்லது முழுமையடையாமலும் சாப்பிடுகிறார்கள். சிலர் இரவில் தாமதமாகவும், அதிக அளவில் சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது.
இத்தகைய பழக்கங்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. சிறந்த ஆரோக்கியத்திற்காக, காலை உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், மதியத்தில் சத்தான உணவை சாப்பிட வேண்டும், இரவில் லேசான உணவை சாப்பிட வேண்டும். தவறான உணவு முறை மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உணவுப் பழக்கங்களில் சிறிய மாற்றங்களும் செரிமான அமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் சீக்கிரம் சாப்பிடுதல், போதுமான அளவு தண்ணீர் குடித்தல், மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தல் மற்றும் இரவு உணவிற்குப் பிறகு லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவை குடல் சீராகச் செயல்பட உதவுகின்றன. இதனால் காலையில் உடல் லேசாகவும், சுகமாகவும், ஆரோக்கியமாகவும் உணரலாம்.
காலையில் மலம் கழித்தல் சீராகவும், குடல் ஆரோக்கியமாகவும் இருக்க தினமும் மாலையில் செய்ய வேண்டிய 6 முக்கிய பழக்கங்கள்:
1. சரியான நேரத்தில் தூங்கி எழுதல்
படுக்கைக்கு செல்லும் நேரமும், எழும் நேரமும் தினமும் ஒரேபோல் இருக்க வேண்டும். இது உடலின் உள் கடிகாரத்தையும் செரிமான அமைப்பையும் சமநிலைப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கிச் செல்வதும் எழுவதும் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம். மேலும் காலையில் அவசரப்படாமல் மலம் கழிப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது அவசியம்.
2. சீக்கிரமாகவும் லேசாகவும் இரவு உணவு சாப்பிடுதல்
இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது செரிமானத்தையும் தூக்கத்தையும் பாதிக்கும். எனவே, படுக்கைக்கு செல்லும் முன் குறைந்தது 2–3 மணி நேரத்திற்கு முன் உணவு முடித்துவிடுங்கள். அதற்குப் பிறகும் பசி எடுத்தால், ஒரு கிளாஸ் சூடான பால், சில நட்ஸ் அல்லது செர்ரி ஜூஸ் போன்ற லேசான சிற்றுண்டி எடுத்துக்கொள்ளலாம். இது செரிமானத்தையும் காலை குடல் சுத்தத்தையும் மேம்படுத்தும்.
3. இரவு உணவில் நார்ச்சத்து சேர்த்தல்
நார்ச்சத்தானது குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது. ஓட்ஸ், குயினோவா, சோளம், பீன்ஸ், கீரை, ப்ரோக்கோலி, கேரட் போன்ற காய்கறிகள் செரிமானத்துக்கு உதவும். ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, பெர்ரி போன்ற பழங்கள் நார்ச்சத்தும் நீரும் வழங்கி மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
4. போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
நீரும் நார்ச்சத்தும் குறைவாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் அதிகம். பெரியவர்கள் தினமும் குறைந்தது 11–15 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கூடாக சூப்கள், பழச்சாறுகள், ஸ்மூத்திகள் போன்றவையும் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகின்றன.
5. தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பானம் குடித்தல்
இஞ்சி, கெமோமில் அல்லது புதினா டீ போன்ற சூடான பானங்கள் குடல் தசைகளை அமைதிப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகின்றன. மேலும் அவை தூக்கத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
6. உணவுக்குப் பிறகு லேசான நடைப்பயிற்சி
இரவு உணவிற்குப் பிறகு 10–15 நிமிடங்கள் லேசாக நடப்பது வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைத்து, உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். இதனால் மறுநாள் காலையில் வயிற்றில் சுகமான உணர்வு ஏற்படும்.
இந்தச் சிறிய பழக்கங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றினால், செரிமானம் சீராகி, குடல் ஆரோக்கியம் நீடித்து, நாளை முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.