கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கரங்களால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் திரளாக கூத்தாண்டவரை மணவாளனாக ஏற்று, திருமணம் செய்துகொள்கின்றனர்.
அதன்படி, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 19-ம் தேதி தொடங்கியது. கூவாகத்தைச் சுற்றியுள்ள 8 கிராம மக்கள் கூழ் தயாரித்து கோயிலில் படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கினர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகத்தில் நேற்று மதியம் முதலே குவியத் தொடங்கினர்.
திருநங்கைகள் பட்டுப்புடவை அணிந்து, மலர்கள் சூடி, மணப்பெண் கோலத்தில் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் மஞ்சள் நாணில் தாலி கோர்த்து கோயில் பூசாரியிடம் கொடுத்து, கூத்தாண்டவரை தன் கணவராகப் பாவித்து தாலி கட்டிக் கொண்டனர். பின்னர், கோயிலை விட்டு வெளியே வந்து கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழந்தனர்.
விழாவையொட்டி, குடிநீர், குளியலறை, கழிப்பறை, தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. சமூக நலத்துறை மூலம் பால்வினைத் தடுப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. உளுந்தூர்பேட்டை விழுப்புரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி எஸ்.பி. தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூத்தாண்டவரை மணம் முடிக்கும் நிகழ்வு நேற்று மாலை தொடங்கி இரவு வரையிலும் கோயில் வளாகத்தில் தொடர்ந்தது. இன்று சித்திரைத் தேரோட்டம், அரவான் களப்பலி காணும் நிகழ்வு, தொடர்ந்து தாலி அறுத்து திருநங்கைகள் அழுகளம் காணும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை விடையாத்தி நிகழ்வு நடைபெறும். வரும் 16-ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.