• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

கோடநாடு கொலை வழக்கு விசாரணை அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு | Kodanadu murder case trial adjourned to October 25

Byadmin

Sep 27, 2024


உதகை: கோடநாடு கொலை வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.இது தொடர்பாக சோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளைக் கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மேலும், இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று (செப்.27) மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி-யான, முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர்.

விசாரணை மேற்கொண்ட குடும்ப நீதிமன்ற நீதிபதி லிங்கம் இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, “மாவட்ட நீதிபதி மாற்றலாகிச் சென்று விட்டதால், பொறுப்பு நீதிபதி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்” என்றார்.



By admin