கோல்ட்பிளே நிகழ்ச்சியில் திரையில் தோன்றிய ஜோடி ஒன்று சங்கடமான தருணத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் எதிரொலியாய் தனது தலைமை செயல் அதிகாரியை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் விடுப்பில் அனுப்பியுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் வைரலான அந்த ஜோடி, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சக ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது.
மாசசூசெட்ஸின் ஃபாக்ஸ்பரோவில் உள்ள ஜில்லெட் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட திரையில் தோன்றிய வீடியோவில், அந்த ஜோடி மிகவும் நெருக்கமாக, கைகளை கட்டிக்கொண்டு காணப்படுவது தெரிகிறது.
இசைநிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த ஜோடியின் முகங்கள் திரையில் தோன்றியதும் அந்த ஆணும் பெண்ணும் கேமராவைத் தவிர்க்க தலையை குனிந்து ஒதுங்கிவிட்டனர்.
அந்த இருவரும் அஸ்ட்ரோனோமர் நிறுவனத்தில் நிர்வாகிகளாக பணிபுரிகின்றனர்.
பெரிய திரையில் இருவரும் தோன்றியதும், உடனே அவர்கள் மறைந்துக் கொள்வதையும் பார்த்த கோல்ட்பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டின், “இவர்கள் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது இருவரும் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கும்” என்று கேலி செய்தார்.
விடுப்பில் அனுப்பப்பட்ட தலைமை செயல் அதிகாரி
புதன்கிழமையன்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்ப ஜோடி ஆடுவதும், பின்னர் ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களிலும் வைரலானது.
டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட முதல் காணொளியை மில்லியன் கணக்கானோர் பார்த்தனர். பின்னர் அது பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, மீம்களும் உருவாக்கப்பட்டன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த வீடியோ வெளியாகி கேலிக்குள்ளானது.
இருவரும் கட்டிப் பிடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலான இரு நாட்களுக்கு பிறகு, இந்த விஷயத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அஸ்ட்ரோனோமர் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் வீடியோவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
அதன்பிறகு, தங்களுடைய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரன் விடுப்பில் அனுப்பப்பட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
“அஸ்ட்ரோனமர் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து எங்களை வழிநடத்திய மதிப்புகள் மற்றும் கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், “நடத்தை மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டிலும் எங்கள் தலைவர்கள் தரத்தை நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர்கள் குழு இந்த விஷயத்தில் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது, விரைவில் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை ப்ராடக்ட் அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த காணொளியில் இருப்பவர், ஜூலை 2023 முதல் அஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் ஆண்டி பைரன் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தக் காணொளியில் இருப்பது தான்தான் என்பதை ஆண்டி பைரன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆண்டி பைரனுடன் இருந்த பெண், அஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 2024 நவம்பர் முதல் அஸ்ட்ரோனமரில் பணியாற்றி வருகிறார். அவரும் தனது அடையாளத்தையும் உறுதிப்படுத்தவில்லை.
வீடியோவில் உள்ளவர்களின் அடையாளங்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த காணொளி தொடர்பாக இதுவரை ஆண்டி பைரன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், வேறுவிதமாகக் கூறும் செய்திகள் தவறானவை என்றும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவில் வேறு எந்த ஊழியருக்கும் தொடர்பு இல்லை என்றும் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ஆண்டி பைரன் கூறியதாக பல போலி அறிக்கைகள் வியாழக்கிழமையன்று சமூக ஊடகங்களில் வைரலாகின.