பட மூலாதாரம், Getty Images
‘கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களை குறிப்பிடக் கூடாது’ என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் விழாவில், பட்டியல் சாதி மக்களை ‘ஊரார்’ என்ற பெயரில் அழைப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு அனைத்துக் கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் கூறுகிறார், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீநாடியம்மன் கோவில். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையானதாகக் கருதப்படும் இந்தக் கோவில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
நாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதியன்று நாடியம்மன் கோவில் திருவிழா நடத்தப்பட்டது.
‘ஊரார்’ யார்?
இதற்கான அழைப்பிதழை இந்து சமய அறநிலையத்துறை அச்சடித்துள்ளது. அதில், திருவிழா விவரங்கள் என்ற தலைப்பில் தினசரி நடக்கும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளனர். அதற்குப் பக்கத்தில் குறிப்பிட்ட நாளின் விழாவை நடத்தும் மண்டகப்படிதாரர் யார் என்ற விவரம் இடம் பெற்றுள்ளது.
முதல் நாள் விழா தொடர்பான விவரத்தில், ‘ஊரார் – ராஜுக்கள், நாயுடு வகையறா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதில், ஊரார் என்பது பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டியல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்” எனக் கூறுகிறார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கே.பி.செல்வராஜ். இவர் நடுவிக்கோட்டை ஆதிதிராவிடர் நல சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
பட்டுக்கோட்டை நகரம் மற்றும் அங்கிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள், தங்களின் முக்கியக் கடவுளாக நாடியம்மனை பார்க்கின்றனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.பி.செல்வராஜ் தொடர்ந்த வழக்கின் முக்கிய அம்சமாக, மாற்று சாதியினரை அடையாளப்படுத்துவது போல, ஆதிதிராவிடர்களையும் அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.
அறநிலையத்துறை சொன்னது என்ன?
வழக்கு விசாரணையின்போது, அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், “கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்திலேயே இங்கு ராஜுக்களும் நாயுடு சமூகத்தினரும் வந்துவிட்டனர். அவர்கள்தான் கோவிலுக்கு நன்கொடை தருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
“கோவிலில் உள்ள வழக்கத்தை உடனே எடுத்துவிட முடியாது” எனக் கூறிய அவர், “அழைப்பிதழில் ஆதிதிராவிடர்களைச் சேர்த்தால் மற்ற சாதியினரும் தங்கள் பெயரையும் சேர்க்குமாறு உள்ளே வந்துவிடுவார்கள். இதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை” என்று வாதிட்டார்.
அதேநேரம், கோவிலில் நன்கொடையாளர்கள் பட்டியலில் மாற்று சாதியினர் பெயர்கள் உள்ளதாகவும் கோவில் விழாக் குழுவில் அவர்கள் கிடையாது எனவும் அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறியுள்ளார்.
’14 ஆண்டுகள் கடந்தும் பதில் இல்லை’
பட மூலாதாரம், Pattukkottai Nadiamman kovil
இதே விவகாரம் தொடர்பாக, 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளதையும் கோவிலின் செயல் அலுவலர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், நாடியம்மன் கோவில் விழா அழைப்பிதழில் ‘ஊரார்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்கள்’ எனக் குறிப்பிட வேண்டும் என்று பட்டியல் சாதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேநேரம், உற்சவ மண்டபத்தில் இருந்து நடத்தப்படும் மண்டகப்படிகளில் (கடவுளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும்போது தனிநபர்களோ அல்லது சாதி குழுக்களோ தங்களின் இடத்துக்கு வரவழைத்து பூஜை செய்வது) தாங்கள் உரிமை எதையும் கோரவில்லை எனவும் பட்டியல் சாதி மக்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதி ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“அறநிலையத்துறை ஆணையர் முடிவெடுக்குமாறு கூறி 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழா அழைப்பிதழ் வரையிலும் ஊரார் என்றே குறிப்பிட்டதால் வழக்கு தொடர்ந்தோம்” எனக் கூறுகிறார் கே.பி.செல்வராஜின் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒரு குடும்பம் அல்லது சாதிக்கான கோவிலாக இருந்தால் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இது அரசு நடத்தக்கூடிய கோவில். இங்கு பாகுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது என நீதிமன்றத்தில் வாதிட்டோம்” எனக் கூறுகிறார்.
சாதிரீதியாகவோ, பாலினரீதியாகவோ, பிறப்புரீதியாகவோ யாரையும் பாகுபடுத்தக் கூடாது என அரசமைப்புச் சட்டம் சொல்வதையும் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியதாகக் கூறுகிறார் இராபர்ட் சந்திரகுமார்.
தீர்ப்பில் என்ன உள்ளது?
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.
கோவில் திருவிழா என்பது இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டாடப்பட வேண்டும் எனத் தாங்கள் கருதுவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், “இந்த வரையறைகளின்படி பட்டியல் சாதியினரும் இதில் அடங்குவர்” எனத் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து தங்களின் தீர்ப்பில், “கோவில் அழைப்பிதழில் நன்கொடைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிப் பெயர்களைப் பட்டியலிடும் நடைமுறை தேவையற்றது’ எனக் கூறியுள்ளனர்.
“திருவிழாவுக்கு பட்டியல் சாதி மக்கள் நிதி அளிக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர்களின் பெயரைத் தவிர்ப்பது ஏற்புடையதாக இல்லை” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு அதிகாரியாக இருக்கும் கோவிலின் நிர்வாக அதிகாரி, இதை ஆதரித்துப் பேசுவது வினோதமாக உள்ளதாகத் தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள், சமூகத்தில் பட்டியல் சாதி மக்களுக்கான அர்த்தமுள்ள பங்கேற்பு, தனி உரிமை மற்றும் சமூக மதிப்பு ஆகியவற்றை மறுப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள், இது அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதாகவும் கூறியுள்ளனர்.
பெயரை சேர்த்தால் தீர்வு கிடைக்குமா?
“பட்டியல் சாதியினர் விழாவில் பங்கேற்பதற்கோ, கடவுளை வழிபடவோ எந்தத் தடையும் இல்லை என அதிகாரிகள் கூறலாம். ஆனால், அவர்களின் பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். வெறும் அடையாளமாக இருக்கக் கூடாது” எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ‘திருவிழா அழைப்பிதழில் ஆதிதிராவிடர்கள் பெயரைச் சேர்ப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா?’ என்று ஆலோசித்த நீதிமன்றம், “”அரசு நடத்தும் கோவில் திருவிழாக்களில் தனிப்பட்ட எந்த சாதியின் பெயரும் இடம்பெறக்கூடாது” எனக் கூறியுள்ளதாக வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் தெரிவித்தார்.
“இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளதால், இதற்கு மேல் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்துக்குத் தான் செல்ல வேண்டும்” என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடியம்மன் கோவிலுக்கு மட்டும்தான் என்றாலும் அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களையும் இது கட்டுப்படுத்தும்” என்கிறார் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
விசிக முன்வைக்கும் கோரிக்கை
நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார், விழுப்புரம் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வருவாய் குறைவாக வரும் கிராம கோவில்களில் ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. அதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இந்தக் கோவில்களில் பழைய நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன” எனக் கூறுகிறார்.
“கிராம கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் சில சாதிகளோ, தனி நபர்களோ நன்கொடை கொடுத்து அவர்களின் பெயரில் விழா நடத்துகின்றனர். திருவிழா செலவை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலும் பட்டியல் சாதியினரைச் சேர்ப்பதில்லை” எனக் கூறுகிறார் ரவிக்குமார்.
“அரசு துறைகள் சார்பாக சாதிப் பெயரில் மண்டகப்படி செய்வதை அனுமதிக்கக் கூடாது. அதுவும் மதச்சார்பற்ற அரசு இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது” எனக் கூறும் ரவிக்குமார், “இதன் மூலம் கோவில்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எடுத்துக் கொள்ள முடியும். அவை சரிசெய்யப்பட வேண்டும்” என்கிறார்.
அறநிலையத்துறை அமைச்சரின் பதில்
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலின் செயல் அலுவலர் சுந்தரத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துப் பேசியபோது, “நீதிமன்றத்தின் உத்தரவு எங்கள் கைகளுக்கு இன்னும் வரவில்லை. வரும் மார்ச் 3ஆம் வாரத்தில் கோவில் திருவிழா நடக்கவுள்ளது. தீர்ப்பில் என்ன உள்ளதோ அதைத் திருவிழாவில் நடைமுறைப்படுத்துவோம்” எனக் கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக பிபிசி தமிழிடம் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “எல்லோருக்கும் எல்லாம் என்ற முதலமைச்சரின் கனவை நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. முன்னரே, அனைத்துக் கோவில்களிலும் இதைப் பின்பற்றி வருகிறோம். நீதிமன்றத் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்துவோம்” எனக் கூறுகிறார்.
அரசு நடைமுறைப்படுத்துமா?
கடந்த 1997ஆம் ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்டியதால் ஏற்பட்ட பிரச்னைகளையும் அதன்பிறகு ஏற்பட்ட தீர்வையும் பிபிசி தமிழிடம் சுட்டிக் காட்டினார், வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
விருதுநகர் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரை வைத்ததில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சாதிரீதியான பெயர்களை வைப்பதில்லை என அன்றைய தி.மு.க அரசு முடிவெடுத்தது.
முன்னதாக, 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அந்த அரசாணையின்படி, “தமிழ்நாட்டில் தெருக்களில் உள்ள பெயர்களில் இருக்கும் சாதிப் பெயரை நீக்குவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
அதன்படி, தெருக்களின் சாதிப் பெயர்களை அழிப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டியது. “அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பெயரை மாற்றியதுபோல, தெருக்களில் இருந்த சாதிப் பெயரை அழித்ததைப் போல, கோவில் விழாக்களில் எந்த சாதிப் பெயரும் இருக்கக் கூடாது என அரசு அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு