பட மூலாதாரம், Getty Images
கோவையில் சமீபத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த 60 வயது பெண் ஒருவர், கார் ஏறி உயிரிழந்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன.
தமிழகத்தில் பல நகரங்களில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஆதரவற்றோர் இரவு நேர காப்பகங்கள் நடத்தப்பட்டாலும், இந்த காப்பகங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அவற்றில் வசிப்போருக்கு உணவளிக்க உள்ளாட்சி நிர்வாகங்களால் வழங்கப்பட்டு வந்த நிதி, கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 7 மாநகராட்சிகளில் சாலையோரங்களில் வசிப்பவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேலும் 57 வீடற்றோர் காப்பகங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு தமிழக நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த சிவராசு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
இரவு நடந்த விபத்து
கோவையில் திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையிலும், எதிரிலுள்ள பேருந்து முனையத்திலும் நுாற்றுக்கணக்கான ஆதரவற்றோர் இரவு நேரங்களில் தூங்குவது வழக்கம்.
கடந்த மே 3 ஆம் தேதியன்று இரவு 12 மணியளவில், பேருந்து முனையத்தின் ஒரு பகுதியில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் படுத்திருந்த ஒரு பெண்ணின் மீது ஏறியது. இதில் கடுமையாக காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
கோவை நகரில் இப்போதும் 700க்கும் மேற்பட்டோர், இரவு நேரங்களில் சாலையோரத்திலும் நடைபாதைகளிலும் உறங்குவதாகக் கூறுகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன். இவர் மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள இடத்தில் ஈரநெஞ்சம் என்ற பெயரில் முதிய பெண்களுக்கான காப்பகத்தை நடத்தி வருகிறார். அதில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கின்றனர்.
கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள இவருடைய காப்பகத்துக்கு அருகிலேயே மலரும் விழிகள் என்ற பெயரிலும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தப்படுகிறது. அதிலும் 98 ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என பலர் வசித்து வருகின்றனர்.
இவற்றைத் தவிர்த்து ‘ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் நடத்தப்படும் 3 மாநகராட்சி வீடற்றோர் தங்கும் விடுதிகளிலும் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்த மூன்றில் ஒன்று மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது
கோவை மாநகராட்சியின் 2024 – 2025 நிதிநிலை அறிக்கையில், கோவையிலுள்ள வீடற்றோரின் நலனை பேணி காக்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி, தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று கூறப்பட்டது.
அதேபோல, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கூடுதலாக 2 விடுதிகள் அமைக்கப்படும் என்றும் அதில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்றில் ஒன்று மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதைப் பற்றி கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ”மாநகராட்சி பகுதியில் ஏற்கெனவே 5 வீடற்றோர் தங்கும் விடுதிகள் உள்ளன. அவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGO) உதவியுடன் நடத்தப்படுகின்றன. வீடற்றோர் தங்கும் விடுதிகளின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சென்னை மாநகராட்சி சார்பிலும் 55 ஆதரவற்றோர் இரவுநேர காப்பகங்கள் செயல்பட்டு வருவதாக நகர் நலப்பிரிவு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில் மாநகராட்சி ஆணையாளராக ககன்தீப்சிங் பேடி இருந்தபோது, அப்போது இயங்கிவந்த 54 இரவு நேர காப்பகங்களில் 1741 பேர் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அப்போது பேருந்து நிலையங்கள் மற்றும் நடைபாதைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றோரை மீட்டு இந்த காப்பகங்களில் சேர்க்க சிறப்பு மீட்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து உருவாக்கிய இந்த மீட்புக்குழுவினர், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் இரவில் தங்கியிருந்த வீடற்ற மற்றும் ஆதரவற்றோர் 27 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என 43 பேரை மீட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைத்தனர்.
அப்போது சென்னையில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர் தங்கியிருந்தால் அது குறித்த தகவல்களை 94451 90472 மற்றும் 044-25303849 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போதும் சென்னையில் பெரும்பாலான பேருந்து நிலையங்கள் மற்றும் நடைபாதைகளில் பல ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
இரவு நேர காப்பகங்களில் தங்கியிருக்கும் நபர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் மாறுபடுவதாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர்.
உணவுக்கு தரப்பட்டு வந்த நிதியும் நிறுத்தம்!
இதேபோல மதுரை உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் வீடற்றோருக்கு இரவு நேர காப்பகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இவை எதற்குமே மாநகராட்சி சார்பில் எந்த நிதியுதவியும் தரப்படவில்லை. கட்டடங்கள் மட்டுமே மாநகராட்சி நிர்வாகங்களால் கட்டித்தரப்படுகின்றன.
இரவு நேர காப்பகங்களுக்கு முதல் 5 ஆண்டுகள் மட்டுமே உணவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்/
இத்தகைய இரவு நேர காப்பகங்கள் ஏற்படுத்தியதன் பின்னணியை விளக்கும் கங்காதரன், ”கடந்த 2009 ஆம் ஆண்டில், டெல்லியில் சாலையோரம் துாங்கிய 7 பேர் கடுங்குளிரில் இறந்துவிட்டனர். அது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவின் அடிப்படையில், 5 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமுள்ள நகரங்களில் இரவு நேர காப்பகங்கள் நடத்தப்பட வேண்டும்.
யாரும் சாலையோரம் உறங்க அனுமதிக்கக்கூடாது. இது உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்பு என்றது உச்சநீதிமன்றம். அதன் அடிப்படையில்தான் தமிழகத்திலும் இரவு நேர காப்பகங்கள் துவக்கப்பட்டன.” என்கிறார்.
இவர்தான் மாநகராட்சி அளித்துள்ள இடத்தில், ‘மலரும் விழிகள்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் காப்பகத்தை, கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறார். இதில் தற்போது 12 பெண்கள், 86 ஆண்கள் தங்கியிருக்கின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சி இரவு நேர காப்பகங்களில் தங்கியிருப்போர்க்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு வரையிலும் ஒரு நபருக்கு ஒரு நாள் உணவுக்கு ரூ.28 வரை மாநகராட்சியால் தரப்பட்டதாகக் கூறும் கங்காதரன், கடந்த 4 ஆண்டுகளாக கோவை உட்பட எந்த மாநகராட்சியிலுமே உணவுக்கான நிதி தரப்படுவதில்லை என்கிறார்.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், உணவுக்கு மக்கள் உதவுவதாகக் குறிப்பிடும் காப்பக நிர்வாகிகள், சில மருத்துவமனை நிர்வாகங்கள் ஆதரவற்றோர்க்கு இலவச சிகிச்சை தரும் உதவியையும் செய்து வருவதாகக் கூறுகின்றனர்.
”இப்போதும் இங்குள்ள ஆதரவற்றோர்க்கு உணவு கிடைத்துவிடுகிறது. எங்கள் காப்பகத்திலுள்ளவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஒருவர், தினமும் காலை உணவை அளித்து வருகிறார். பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் வாங்கும் ரேஷன் அரிசி, பருப்பு, ஆயில் போன்றவற்றைத் தருகின்றனர். எங்களுக்குத் தேவை பணமில்லை; அரசின் ஆதரவுதான்.” என்கிறார் மலரும் விழிகள் கங்காதரன்.
‘ஆதரவற்றோர்க்கு ஆதார் இல்லை’
கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், மாநகராட்சி சார்பில் வீடற்றோர் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் ஏராளமானவர்கள், சாலையோரம் உறங்குவதற்கு இந்த விடுதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதே காரணமென்கின்றனர் நிர்வாகிகள்.
சென்னையில் இருப்பது போன்று மூன்றில் ஒரு பங்கு காப்பகங்களை அதிகப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஈரநெஞ்சம் மகேந்திரன், ”கோவை போன்ற பெரிய நகரங்களில் இன்னும் கூடுதல் காப்பகங்களை உருவாக்க வேண்டும். ஏராளமான நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி, இத்தகைய பொதுக்காரியங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதை மாநகராட்சி மூலமாக சரியாகப் பகிர்ந்தளித்தால் சாலையோரம் உறங்குபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.” என்கிறார்.
அதேபோன்று, அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கென்று தனியாக சிறப்பு வார்டு ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இவர்கள் வைக்கின்றனர்.
ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த முகவரி ஆவணமும் இல்லாத நிலையில், இவர்களால் அரசு மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களையும் இவர்கள் விவரிக்கின்றனர்.
காப்பகங்களில் வசிக்கும் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோதும், ”உணவுக்கு பிரச்னையில்லை. இலவச மருந்து மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று கோரினர்.
கோவையில் மாநகராட்சியால் நடத்தப்படும் இரவு நேர காப்பகத்தில் இருந்த இரண்டு அறிவிப்புப் பலகைகள் மிகவும் கவனம் ஈர்ப்பதாக இருந்தன.
அதிலொன்றில், ”நாங்கள் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். தற்போது மாநகராட்சி காப்பகத்தில் பராமரிப்பில் உள்ளோம்” என்று எழுதப்பட்டுள்ளது.
அதற்கு அருகிலேயே உள்ள மற்றொரு அறிவிப்புப் பலகையில், ”அறிவிப்பு! புதிய பயனாளிகளை சேர்க்க இயலாது. HOUSE FULL அரங்கம் நிறைவு’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு பேசிய தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு, ”சாலையோரம் வசிப்போர்க்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி இவை அனைத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் வசிப்பவர்கள் எண்ணிக்கை குறித்து அனைத்து மாநகராட்சிகளிலும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான திட்ட முன்மொழிவும் அரசுக்கு வந்துள்ளது.” என்றார்.
”கோவையில் 1748 பேர் சாலையோரம் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 368 பேருக்கு மட்டுமே காப்பக வசதி உள்ளது. சென்னை தவிர்த்து கோவை உட்பட 7 பெரிய மாநகராட்சிகளில் 4293 பேர் சாலையோரம் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டிருப்பதால் கூடுதல் காப்பகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு கூடுதலாக 15, மதுரைக்கு 30, திருச்சிக்கு 4, திருப்பூர், சேலம், தாம்பரம், ஆவடி ஆகிய நகரங்களில் தலா 2 என மொத்தம் 57 காப்பகங்கள் அமைக்க அரசிடம் முன்மொழிவு தரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்” என்றார் சிவராசு.
பட மூலாதாரம், Getty Images
காப்பகங்களில் வசிப்போருக்கு உணவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டது குறித்து, நகராட்சி நிர்வாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ”காப்பகங்களுக்கு கட்டட வசதி செய்து தரப்படுகிறது. அங்கு தங்குவோர்க்கு உணவுக்கு ஒரு நாள் வீதமாக ஒரு தொகை, 5 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும். அதற்குள் அந்தந்த காப்பகத்தை நடத்தும் தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரத்தைத் திரட்டிக் கொண்டு, அவற்றை நடத்த வேண்டும் என்பதுதான் விதிமுறை. அதன்படியே நிதி நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக காப்பகம் துவங்கினால் அவற்றுக்கும் முதல் 5 ஆண்டுகளுக்கு உணவுக்கு நிதி வழங்கப்படும்.” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ”கோவையில் ஏற்கெனவே இருந்த காப்பகங்களுடன் புதிதாக காப்பகங்கள் விரைவில் துவக்கப்படவுள்ளன. மேலும் காப்பகங்களுக்கு அரசுக்கு முன்மொழிவு சென்றுள்ளது. முன்பு நிதி திரட்ட இயலாத நிலையிலிருந்த காப்பகங்களுக்கு, உணவுக்கு மாநகராட்சியால் நிதி தரப்பட்டது. விதிமுறைப்படி அந்த நிதி நிறுத்தப்பட்டது.” என்றார்
முன்பு நடந்த சம்பவங்கள்
- கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
- சென்னை வியாசர்பாடியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது லாரி ஏறி பலியானார்.
- கடந்த ஆண்டிலும் சென்னையில் நடைபாதையில் படுத்திருந்த சிலர் மீது ஒரு பெண் ஓட்டிவந்த கார் ஏறியதில் பலர் படுகாயமடைந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு