பட மூலாதாரம், @DOT
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செயலியைச் செயலிழக்கச் செய்யவோ அல்லது அதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ முடியாதபடி இருப்பதை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.
“செல்போன்களில் பயன்படுத்தப்படும் IMEI-இன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவே” சஞ்சார் சாத்தி செயலி பயன்படுத்தப்படும் என்று அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.
முன்பே நிறுவப்பட்ட சாதனங்களில் உள்ள IMEI எண்ணை இந்தச் செயலி தானாகவே அணுகுமா அல்லது பயனர்கள் தாங்களே இந்த வன்பொருள் அடையாள எண்ணை (IMEI) உள்ளிட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மோதி அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ள அந்த கட்சி, இந்த வழிகாட்டுதல்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
“போலி செல்போன்களை வாங்குவதில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கவும், தொலைத்தொடர்பு சாதனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவவும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி, முதன்முதலில் 2023-இல் ஒரு போர்ட்டலாகத் தொடங்கப்பட்டது. இது மோசடி அழைப்புகள் (Scam Calls) குறித்து புகாரளிக்கவும், பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சிம் கார்டுகளை அடையாளம் காணவும் மற்றும் செல்போன் திருடப்பட்டால் அதைச் செயலிழக்கச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இது இந்தியாவின் வணிக ரீதியான ஸ்பேம்களை தடுக்க பயன்படுத்தப்படுத்தப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) DND செயலியைப் போன்றது.
பட மூலாதாரம், Getty Images
தொலைத்தொடர்புத் துறை உத்தரவு என்ன?
- அனைத்து புதிய செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி முன்பே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
- சந்தையில் ஏற்கனவே உள்ள சாதனங்களில், ஓஎஸ் (OS) மென்பொருள் புதுப்பித்தல் (Software Update) மூலம் செயலி நிறுவப்படும்.
- திருடப்பட்ட போன்களை முடக்குதல், IMEI உண்மையானதா என்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து புகாரளித்தல் ஆகியவற்றிற்கு இந்தச் செயலி பயன்படுத்தப்படும்.
- இந்தச் செயலி மூலம் ஆயிரக்கணக்கான தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது.
- அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும். ஏனெனில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) இதேபோன்ற ஒரு முயற்சிக்கு ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
- இதற்கு முன்னர், சிம் பிணைப்பு (SIM-binding) சைபர் குற்றங்களைத் தடுக்க அவசியம் என்று தொலைத்தொடர்புத்துறை கூறியிருந்தது. சிம் பிணைப்பின் கீழ், குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகள் அவற்றின் சேவைகள் பதிவுசெய்யப்பட்ட சிம் உள்ள சாதனங்களில் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- தொலைத்தொடர்புத்துறையின் இந்த வழிகாட்டுதல்கள் 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். 120 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்க எதிர்ப்பு
எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொலைத்தொடர்புத் துறையின் இந்த வழிகாட்டுதல்கள் குறித்து மோதி அரசை விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ள காங்கிரஸ், இந்த வழிகாட்டுதல்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தனியுரிமை அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்றும், இந்த வழிகாட்டுதல்கள் அதை மீறுகின்றன என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார். தனியுரிமை இந்திய அரசியலமைப்பின் சரத்து 21-இன் கீழ் உள்ள அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“செல்போன்களில் முன்பே நிறுவிய அரசு செயலி ஒன்றை நீக்கவே முடியாது என்பது உண்மையில் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் கண்காணிக்கும் சாதகம் ஆகும். இது ஒவ்வொரு குடிமகனின் செயல்பாடுகளையும் முடிவுகளையும் கண்காணிக்கும்,” என்று வேணுகோபால் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“விழித்தெழு இந்தியா! அரசாங்கம் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்குவது நமது தனியுரிமை மற்றும் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும்,” என அரசியல் ஆய்வாளர் என்று தன்னைக் தானே கூறிக்கொள்ளும் தஹ்சீன் பூனாவாலா, சஞ்சார் சாத்தி செயலி பற்றி எழுதியுள்ளார்.
“ஒவ்வொரு புதிய போனிலும் இதை வலுக்கட்டாயமாக முன்பே நிறுவி, இதை நீக்க அனுமதிக்காமல், ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் நம்முடைய அழைப்புகள், செய்திகள் மற்றும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் அதிகாரத்தை அரசு பெற முடியும். இது மிக மோசமான கண்காணிப்பு ஆகும். அரசாங்கம் நம்மைக் குற்றவாளிகள் போலக் கண்காணிக்க முடியும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”
“சஞ்சார் சாத்தி செயலி ஒரு நிரந்தர அம்சமாக செல்போனில் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடும் இந்திய அரசின் முடிவு ‘பிக் பாஸ்’ போன்ற கண்காணிப்பிற்கு மற்றொரு ஓர் உதாரணம்,” என மாநிலங்களவை எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
“இத்தகைய சந்தேகத்திற்கிடமான வழிகளில் மக்களின் தனிப்பட்ட போன்களில் தலையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். வலுவான புகார் தீர்வு முறையை உருவாக்குவதற்குப் பதிலாக, கண்காணிப்பு முறையை உருவாக்கலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நினைத்தால், அது மக்களின் கடுமையான எதிர்ப்புக்குத் தயாராக இருக்க வேண்டும்.”
பட மூலாதாரம், Getty Images
சிம் பிணைப்பு நடைமுறை
“முறைகேடாக உருவாக்கப்பட்ட போலி IMEI-க்களால், ஒரே IMEI வெவ்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்யும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுப்பதில் சவால்கள் உள்ளன,” என்று தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.
“இந்தியாவில் பழைய செல்போன்களுக்கென ஒரு பெரிய சந்தை உள்ளது. சில சமயங்களில், திருடப்பட்ட அல்லது கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட சாதனங்கள் மீண்டும் விற்கப்படுவதும் உண்டு. இதனால் வாங்குபவர் குற்றத்தில் கூட்டாளியாகி விடுகிறார் மற்றும் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. முடக்கப்பட்ட/கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட IMEI-களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் சரிபார்க்க முடியும்,” என்று தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.
“செல்போனில் இருந்து சிம் அகற்றப்பட்டாலும், செயலிழக்கப்பட்டாலும் அல்லது வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் கூட அதில் உள்ள உடனடி செய்தி மற்றும் அழைப்பு செயலிகளின் பயனர் கணக்குகள் தொடர்ந்து இயங்கும். இதனால் பெயர் தெரியாத மோசடிகள், ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் மற்றும் இந்திய எண்களைப் பயன்படுத்திப் போலி அரசு அதிகாரிகள் போல அழைப்பது ஆகியவை சாத்தியமாகின்றன,” என்று சிம் பிணைப்பு குறித்து தொலைத்தொடர்புத்துறை கூறியது.
சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உலகெங்கிலும் அரசாங்கங்களின் செயலிகளை முன்பே நிறுவும் உத்தரவுகளுக்கு ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. உதாரணமாக, டிராயின் ஸ்பேம் புகாரளிக்கும் செயலியை நிறுவுவதற்கான விதிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்தது. டிராய் செயலியின் அனுமதிகளில் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புப் பதிவுகளை அணுகுவது ஆகியவை அடங்கும்.
பட மூலாதாரம், Getty Images
சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?
சஞ்சார் சாத்தி செயலி ஒரு சைபர் பாதுகாப்புக் கருவி ஆகும். இந்தச் செயலி ஜனவரி 17, 2025 அன்று ஒரு மொபைல் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு இயங்கு தளங்களிலும் கிடைக்கிறது.
ஆகஸ்ட் 2025 வரை இந்தச் செயலி 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
37 லட்சத்திற்கும் அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன செல்போன்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சஞ்சார் சாத்தி செயலி மூலம் 22 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான சாதனங்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது நேரடியாக அரசின் தொலைத்தொடர்புப் பாதுகாப்புக் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் (CEIR) என்பது ஒரு மையத் தரவுத்தளம் ஆகும், இதில் நாட்டின் ஒவ்வொரு மொபைல் போனின் IMEI எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஞ்சார் சாத்தி செயலி எவ்வாறு இயங்கும்?
செல்போனின் பாதுகாப்பு, அடையாளப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு எளிதான மற்றும் பயனுள்ள கருவியே சஞ்சார் சாத்தி செயலி என்று அரசு கூறுகிறது.
‘இந்தச் செயலி செல்போனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, வாடிக்கையாளரின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது மற்றும் தேவைப்படும்போது உடனடியாக அரசு உதவியை வழங்குகிறது’ என்று அரசாங்கம் கூறுகிறது.
இது போனின் IMEI எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர் இந்தச் செயலியை செல்போனில் திறக்கும்போது, அது முதலில் மொபைல் எண்ணைக் கேட்கிறது. எண்ணை உள்ளீடு செய்த பிறகு, போனுக்கு ஒரு ஓடிபி (OTP) வருகிறது, அதைப் பயன்படுத்திய பிறகு போன் இந்தச் செயலியுடன் இணைக்கப்படுகிறது. அதன் பிறகு, சஞ்சார் சாத்திசெயலி, செல்போனின் IMEI எண்ணை அடையாளம் கண்டுகொள்கிறது.
இந்தச் செயலி IMEI-ஐ தொலைத்தொடர்புத் துறையின் மத்திய CEIR அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. அந்த செல்போன் திருட்டு வழக்கில் புகார் செய்யப்பட்டுள்ளதா அல்லது அது கறுப்புப் பட்டியலில் (blacklisted) இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கிறது.
இந்தச் செயலி ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதனால் இது நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து செல்போன் பயனர்களாலும் பயன்படுத்தப்படலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு