வீடுகளில் காலைதோறும் கேட்கும் சமையலறை சத்தங்களுக்குப் பின்னால், வீட்டு பெண்களின் ஆரோக்கியத்திற்கு மறைந்திருக்கும் ஆபத்து உள்ளது. கணவன், பிள்ளைகளுக்காக சமையலறையில் தினமும் செலவிடும் நேரமும், அங்கு நிலவும் காற்றோட்டமின்மையும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுகிறார்கள். போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாததால், சமைக்கும்போது வெளியாகும் புகை மற்றும் வாயுக்கள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் 2020 ஆய்வின்படி, பாதுகாப்பற்ற சமையல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறக்கின்றனர். இதய நோய், பக்கவாதம், சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை இதில் அடங்கும்.
சமையலறை வாயுக்களான நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை சுவாச பிரச்சனைகள், தலைவலி, சோர்வு, கண்களில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இவை மேலும் அபாயகரமானவை. விறகு அல்லது கரி அடுப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். அதிக நேரம் நின்று சமைப்பது முதுகுவலி, குதிகால் வலியை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
சமைக்கும் போது கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும்.
சமையலை குறுகிய நேரத்தில் முடிக்கவும்.
எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் சிம்னி பயன்படுத்தவும்.
மின்சார அல்லது இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் புகையை குறைக்கலாம்.
சமையலறையின் சுகாதாரமற்ற சூழல், பெண்கள் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. நம் வீட்டுப் பெண்களின் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.
The post சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து appeared first on Vanakkam London.