பட மூலாதாரம், Getty Images
2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துகிறது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று போட்டியில் விளையாட மறுத்துவிட்டது. எனவே இந்தியாவுடனான போட்டிகளை துபைக்கு மாற்ற வேண்டியிருந்தது.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடுகிறது.
அதனைத் தொடர்ந்து, துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு நன்மை கிடைத்து வருவதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவைத் தவிர, மற்ற அணிகள் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானின் மூன்று நகரங்கள் மற்றும் துபைக்கு செல்ல வேண்டும்.
பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது.
இந்தியா பாகிஸ்தானில் விளையாடாததால், இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக நிறைய ஊகங்கள் இருந்தன.
பின்னர், 2027 வரை இந்தியாவில் ஏதேனும் ஐ.சி.சி போட்டிகள் நடத்தப்பட்டால், பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடுவதற்குப் பதிலாக வேறு ஏதாவது நாட்டில் விளையாடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐ.சி.சி) ஒப்புக்கொண்டது.
இதேபோல், இந்தியா பாகிஸ்தானுக்குப் பதிலாக ஏதாவது ஒரு நாட்டில் விளையாடும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியா, மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை நடத்த உள்ளது, மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் டி-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஜோனாதன் அக்னியூ, ஆஸ்திரேலிய ஒளிபரப்பாளரான ஏபிசியிடம் , இந்தியா முழு சாம்பியன்ஸ் டிராபியையும் கையாண்ட விதம் தனக்கு மிகவும் சங்கடமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
“இது தவறு. நீங்கள் ஒரு சர்வதேச போட்டியில் விளையாடச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் எங்கு விளையாடுவீர்கள், எங்கு விளையாட மாட்டீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. இது எவ்வளவு காலம் தொடரும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மாதிரியான அணுகுமுறை முழு போட்டியையும் கேலிக்கூத்தாக்குகிறது.” என்று ஜோனாதன் அக்னியூ தெரிவித்தார்.
இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்வி
பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபை மைதானங்களுக்கு இடையே நிறைய வித்தியாசம் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விளையாடும் சூழலும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. துபையில் நடந்த இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபியில், பாகிஸ்தானுடன் ஆடியபோது இந்தியா துபையில் 244 ரன்கள் எடுத்தது, ஆனால் பாகிஸ்தானின் மைதானங்களில் நிறைய ரன்கள் எடுக்கப்படுகின்றன.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 352 ரன்களை இலக்காகக் கொண்டு, ஆஸ்திரேலியா அணி வென்றது.
இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்கள் குவித்தார். மேலும் துபை மைதானத்தின் பிட்ச் பாகிஸ்தானை விட மெதுவானது.
பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடி, பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டியில் விளையாட துபை செல்ல வேண்டியிருந்தது, பின்னர் வியாழக்கிழமை வங்கதேசத்துடன் விளையாட ராவல்பிண்டிக்கு வர வேண்டியிருந்தது.
“நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டியை நடத்தும் ஒரு நாட்டின் அணி, அதன் நாட்டிற்கு வெளியே பெரிய போட்டிகளை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இது சரியா?” என்று அக்னியூ ஏபிசியிடம் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தின் தாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கடி வெளிப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு, இலங்கை அணி பாகிஸ்தான் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 2012-13 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தது. அதே நேரத்தில் இந்தியா கடைசியாக 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சென்றது.
2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் நடத்தியது, ஆனால் இந்தியா தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது.
“இதுபோல தொடர்ந்து நடக்க அனுமதிக்க முடியாது,” என்று அக்னியூ கூறினார்.
“இரண்டு முக்கிய அணிகளுக்கு இடையே அரசியல் நடந்து கொண்டிருக்கிறது, இது வெட்கக்கேடானது” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
உலக ஐ.சி.சி போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுகின்றன.
2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை விளையாட இந்தியா சென்றது, அப்போது இரு அணிகளும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நேருக்கு நேர் மோதின.
இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் அணியிடம் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லை என்று ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் புகார் அளித்திருந்தது.
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட துபை புறப்படுவதற்கு முன்பு, முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், “அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.
மேலும், “பிசிசி-ஐ நாடகம் இத்துடன் முடிவடையப் போவதில்லை. பாகிஸ்தான் குழந்தைகள் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இங்கு விளையாட வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எல்லா குழந்தைகளும் அவர்கள் இங்கே விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களின் நாடகம் முடிவதாகத் தெரியவில்லை. அவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள், எதை அடைய விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.”என்று பாகிஸ்தான் செய்தி சேனல் 24 டிஜிட்டலிடம் முஷ்டாக் தெரிவித்தார்.
1996 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தியது.
இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், ஸ்கை ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் நாசர் உசைனிடம், “துபையில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும்? அந்த பலன்களை மதிப்பிடுவது எனக்கு கடினமாக உள்ளது, ஆனால் பலன் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்றார்.
“இந்தியா அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், துபையின் சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அரையிறுதியில் எங்கு விளையாடப் போகிறது என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா பலனைடைகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய பலன் என்பதை மதிப்பிடுவது கடினம்.” என்றார்.
பட்லர் முக்கியத்துவம் அளிக்கவில்லை
பட மூலாதாரம், Getty Images
துபையில் அரையிறுதிப் போட்டியில் விளையாட எந்த அணி சென்றாலும், மைதானத்தின் நிலையைப் புரிந்துகொள்ள ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்.
பாகிஸ்தானிலிருந்து வந்த பிறகு அந்த அணி துபையில் அதன் முழு உத்தியையும் மாற்ற வேண்டியிருக்கும்.
கடைசி குழுப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மார்ச் 4 ஆம் தேதி, துபையிலேயே சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும்.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் தனது அணியை வழிநடத்தவில்லை.
கம்மின்ஸ் கணுக்கால் காயத்தால் அவதிப்படுகிறார். ஆனால் இதையெல்லாம் மீறி, அவர் இந்த விவாதத்தில் இணைந்துள்ளார்.
“ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகத்தைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கம்மின்ஸ் யாஹூ ஆஸ்திரேலியாவிடம் கூறினார்.
இந்தியா ஏற்கனவே தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இதனை ஒரு பெரிய பிரச்னையாக கருதவில்லை. இதனால் இந்தியாவுக்கு எந்த சிறப்பு நன்மையும் கிடைக்காது என்று அவர் கூறினார்.
“இந்த தொடரின் ஏற்பாடு வேறு எங்கோ நடைபெறுவதாலும், போட்டி வேறு எங்கோ நடைபெறுவதாலும் இது ஏற்கனவே ஒரு சிறப்புப் போட்டி என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை” என்று தெரிவித்தார் ஜாஸ் பட்லர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு