சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆவது ஆண்டு பொன் விழா நிறைவு செய்வதால் அதனை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் திகதியன்று அவரது நடிப்பில் வெளியான ‘படையப்பா’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பட மாளிகையில் வெளியிடப்படுகிறது.
இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற ‘படையப்பா’ எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் ஆகியோருடன் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சத்ய நாராயணா – எம். வி. கிருஷ்ணா ராவ் – கே. விட்டல் பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று மீண்டும் படமாளிகையில் வெளியாகிறது. இது தொடர்பான பிரத்யேக காணொளி ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -கமல்ஹாசன்- விஜய் – அஜித் – ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தை ஈட்டி தருவதால்… திரைப்படங்களை மறு வெளியீடு செய்வது தற்போது பெசனாகி வருகிறது. அந்த வரிசையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ மீண்டும் வெளியாவதால் இந்த முறையும் வசூலில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ ரிட்டர்ன்ஸ் appeared first on Vanakkam London.