படக்குறிப்பு, நீதிபதி சூர்யகாந்த் முந்தைய சில தலைமை நீதிபதிகளை விட நீண்ட பதவிக் காலத்தைக் கொண்டிருப்பார் கட்டுரை தகவல்
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக அறிவித்தார்.
2025 நவம்பர் 24-ஆம் தேதி நீதிபதி சூர்ய காந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். சமீபத்திய சில தலைமை நீதிபதிகளை விட அதிக காலம் அதாவது 15 மாதங்கள் அவர் (2027 பிப்ரவரி மாதம் வரை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதி, இந்திய நீதித்துறை அமைப்பின் தலைமை அதிகாரி ஆவார். ஒரு நீதிபதியாக அவர் வழக்குகளை மட்டும் தீர்ப்பதில்லை, உச்ச நீதிமன்றம் தொடர்பான அனைத்து நிர்வாக விஷயங்களையும் முடிவு செய்கிறார்.
ஒரு வழக்கு எப்போது விசாரிக்கப்படும், எந்த நீதிபதி அதை விசாரிப்பார் என்பதை முடிவு செய்வது தலைமை நீதிபதியின் முக்கிய அதிகாரங்களில் ஒன்றாகும். எனவே, அனைத்து முடிவுகளிலும் தலைமை நீதிபதிக்கு “மறைமுக” அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், பிகாரில் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’, நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேடன்ட்’ நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள சர்ச்சை மற்றும் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது என பல உயர்மட்ட வழக்குகளில் நீதிபதி சூர்யகாந்த் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, தலைமை நீதிபதி கவாய் (வலது)க்குப் பிறகு நீதிபதி சூர்யகாந்த் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார்
வழக்கறிஞர் முதல் தலைமை நீதிபதி வரை
தனது 22 வயதில் ஹரியாணாவில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய நீதிபதி சூர்யகாந்த், ஓராண்டு கழித்து 1985-ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பணியைத் தொடங்கினார். 16 ஆண்டு கால வழக்கறிஞர் பணிக்குப் பிறகு ஹரியாணாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 38 வயதுதான், இது ஒரு அட்வகேட் ஜெனரலுக்கு மிகவும் இளம் வயது. அந்த நேரத்தில் அவர் மூத்த வழக்கறிஞராகக் கூட இல்லை. 2001-இல் அவர் மூத்த வழக்கறிஞரானார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2004-இல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் போது அவர் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
இதற்கிடையில் அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை கேரவன் பத்திரிகை செய்தியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2012-ஆம் ஆண்டில், தொழிலதிபர் சதீஷ் குமார் ஜெயின், அப்போதைய இந்திய தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் ஒன்றில், நீதிபதி சூர்யகாந்த் சொத்துகள் பலவற்றை வாங்கி விற்கும்போது அவற்றின் மதிப்பைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனால், அவர் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்தவில்லை என்கிறது அந்த புகார். பஞ்சாபில், ஜாமீன் வழங்க நீதிபதி சூர்யகாந்த் லஞ்சம் வாங்கியதாக 2017-ஆம் ஆண்டு சுர்ஜித் சிங் என்ற கைதி குற்றம் சாட்டியதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் கொலீஜியம் செயல்படுகிறது. கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஏற்ப நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட முன்மொழியப்பட்ட போதும் அவை எதிரொலித்தன. அப்போது, கேரவன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்திகளின்படி, அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், 2017-ஆம் ஆண்டில் நீதிபதி சூர்யகாந்த் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியதாகவும், அதன் விளைவு குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக விசாரிக்கப்படும் வரை நீதிபதி சூர்யகாந்தை இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இருப்பினும், 2019-ஆம் ஆண்டில், இந்திய பார் கவுன்சில் ஒரு கடிதத்தில் நீதிபதி சூர்யகாந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியது. பிபிசி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதி சூர்யகாந்திடம் கருத்து கேட்டது, ஆனால் இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. பதில் கிடைத்தால் இந்த செய்தியில் சேர்க்கப்படும்.
நீதிபதி சூர்யகாந்தின் சொத்து மதிப்பு தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வெளியாகியுள்ளன. 2025 மே மாதத்தில் நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் வலைத்தளத்தில் முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டது. நீதிபதி சூர்யகாந்தின் பிரகடனத்தில் சொந்தமாக எட்டு சொத்துக்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் பல முக்கியமான வழக்குகளில் நீதிபதி சூர்யகாந்த் ஓர் பகுதியாக இருந்துள்ளார்.
370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தேசத்துரோகச் சட்டத்திற்கு எதிரான விசாரணை, பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளில் பெகாசஸ் மென்பொருள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், அசாமில் குடியுரிமை பிரச்னை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து போன்ற வழக்குகளையும் நீதிபதி சூர்யகாந்த் விசாரித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டில், இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசியான நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பாஜகவை சேர்ந்த நூபுர் சர்மாவை அவர் கண்டித்தார்; நாடு முழுவதும் நூபுர் சர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இருப்பினும், நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, நூபுர் சர்மாவின் கைது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றியது. இதனால், நூபுர் ஷர்மா, தன் மீதான புகார்களின் விசாரணைக்காக நாடு முழுவதும் பயணம் செய்யும் அவசியம் ஏற்படவில்லை. ஆனால் அதே நேரத்தில், நூபுர் சர்மாவின் கருத்தைத் தொடர்ந்து நடந்த ஒரு கொலைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
இந்த வழக்கைத் தவிர, கருத்து சுதந்திரம் தொடர்பான பல வழக்குகளை அவர் விசாரித்துள்ளார். நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா தனது ‘இந்தியாஸ் காட் லேடன்ட்’ நிகழ்ச்சியில் தெரிவித்த சில கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில், இணையத்தில் உள்ள உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பான வழக்கு நீதிபதி சூர்யகாந்த் முன் விசாரணைக்கு வந்தது (கோப்புப் படம்)
இந்த ஆண்டு மே மாதம், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தனது சமூக ஊடக பதிவுகளுக்காக கைது செய்யப்பட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது, ஆனால் அவர் மீதான வழக்கை முடிக்கவில்லை.
இந்த வழக்குகள் காரணமாக, நீதிபதி சூர்யகாந்தை இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்கும் அறிவிப்பு வெளியானதும், பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்களும் அவரை விமர்சித்தனர்.
நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய மற்றொரு முக்கியமான தீர்ப்பு இன்னும் விவாதிக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு தீர்ப்பில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூட, அவர்களின் விசாரணை தாமதமானால் ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிட்டார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் ஜாமீன் பெறுவது கடினமாக இருந்து வருகிறது, இப்போதும் கூட, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் வழக்குகளில் ஜாமீன் உடனடியாகக் கிடைப்பதில்லை. இருப்பினும், நீதிபதி சூர்யகாந்தின் இந்த முற்போக்கான தீர்ப்பின் அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போதைய டெல்லி கலவர வழக்குகளில் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் கிடைக்க இந்தத் தீர்ப்பையே நம்பியுள்ளனர்.
தலைமை நீதிபதியாக சந்திரசூட் இரண்டு ஆண்டு பதவி வகித்த காலத்தில் பல அரசியலமைப்பு அமர்வுகள் உருவாக்கப்பட்டன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட இந்த அமர்வுகள், முக்கியமான சட்டம் குறித்த கேள்விகளுக்கான முடிவை தீர்மானிக்கின்றன.
நீதிபதி சந்திரசூட்டுக்குப் பிறகு, அரசியலமைப்பு அமர்வின் விசாரணைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. நீதிபதி சூர்யகாந்தின் பதவிக் காலத்தில் இதில் மாறுதல் ஏற்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
இவற்றைத் தவிர, நீதிபதி சூர்யகாந்த் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் போது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட முக்கியமான பிரச்னைகள் பலவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, பிகாருக்குப் பிறகு நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறை, 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றமாக அறிவிக்கக் கோரும் மனுக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன செயல்முறை, பணமோசடி தொடர்பான சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகளை நாடு கடத்தும் வழக்கு என பல முக்கியமான விவகாரங்களை அவர் எதிர்கொள்வார்.