
அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் அக்டோபர் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
ஒரு நோட்டீஸ்கூட அனுப்பாமல் தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறிய கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் கட்சி விதிகள் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “செங்கோட்டையனை நீக்கியதற்காக தொகுதியில் உள்ள தொண்டர்களே இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என கூறினார்.
அக்டோபர் 30 அன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவைக் கண்டித்து, “செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை” என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பட மூலாதாரம், ADMK
செங்கோட்டையன் பேசியது என்ன?
கடந்த 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்தில் உறுப்பினராக மட்டுமல்ல செயலாளராகவும் தான் பணியாற்றத் தொடங்கியதாகக் கூறினார் செங்கோட்டையன்.
மேலும், “1975ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற முதல் பொதுக் குழுவை சிறப்பாக நடத்தி முடித்துக் கொடுத்தோம். கே.ஏ.கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன் அருகில் இருந்தபோது பாராட்டைப் பெற்றவன்.
அதன் பிறகு, ஜெயலலிதா வழியில் அ.தி.மு.கவில் இரவு பகலாக என் பயணத்தைத் தடம்புரளாமல் செய்து வந்தேன். அதை ஜெயலலிதாவே என் திருமணத்தில் கூறினார். எம்.ஜி.ஆர். காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் அ.தி.மு.க வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக உழைத்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க உடைந்துவிடக் கூடாது என்பதால் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தபோதும் விட்டுக் கொடுத்துள்ளதாகக் கூறிய செங்கோட்டையன், “இன்றைக்கு அ.தி.மு.கவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்” எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 2019, 2021ஆம் ஆண்டுகளில் மாநகரம், பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்ததாகக் குறிப்பிட்டார்.
“எம்.ஜி.ஆர் வரலாற்றில் தோல்வி என்பதே இல்லை. ஜெயலலிதா அவர்களுக்கு ஒருமுறை தோல்வி ஏற்பட்டால் மறுமுறை சரித்திர வெற்றி என்ற நிலையைக் கடைபிடித்தார். அவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவை வழிநடத்துவதற்கு அனைவரையும் அழைத்துப் பேசினார் சசிகலா. அப்போது, ‘அனைவரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்’ எனக் கூறினேன். எடப்பாடி பழனிசாமிக்காக பரிந்துரைக் கடிதத்தை வாங்கினேன்” என்றார்.
“எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்குப் பிறகு மனவேதனையோடு வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால் அவரிடம் கருத்துகளை வெளிப்படுத்தினோம்.”
“ஆறு பேர் சந்தித்தார்கள், கருத்துகளைக் கூறினார்கள். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை என செய்திகள் வெளிவந்தன. செய்தியாளர்கள் கேட்டபோது, யாரும் என்னைப் பார்க்கவில்லை என எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னார்” என்றார்.
அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பையே பிரதிபலித்தோம் எனக் கூறிய செங்கோட்டையன், “சோர்வுடன் உள்ள தொண்டர்களை அழைத்துச் சென்றால்தான் வெற்றியைப் பெற முடியும் என்பதை உணர்ந்துதான், அவரிடம் வலியுறுத்தினேன்” என்றும், “அப்போது என்னுடன் சிலர் வந்தார்கள். அவர்களின் பெயரைக் கூற விரும்பவில்லை” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், KASengottaiyan/X
‘எனக்குக் கிடைத்த பரிசு’
அ.தி.மு.க தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டே, தான் 10 நாட்கள் கெடு விதித்ததாக கூறினார் செங்கோட்டையன்.
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை அ.தி.மு.க சந்தித்தது. பத்து தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்தது. இரண்டு தொகுதிகளில் நான்காவது இடம் பிடித்தது. மீண்டும் அ.தி.மு.க புத்துயிர் பெற்று ஆட்சியை நடத்த வேண்டும் என்ற நோக்கில் என்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தினேன்.”
“என்னுடைய பொறுப்புகளும் பதவிகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலவை உறுப்பினர் பதவியில் நானும் ஒருவனாக இருந்து பரிந்துரை செய்தேன். அ.தி.மு.க தான் என்னுடைய உயிர் மூச்சாக இருந்து வந்துள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5126 வாக்குகளை மட்டுமே பெற்றோம். அப்படியானால் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து என்னுடைய கருத்துகளை தெரிவித்தேன்.”
தேவர் ஜெயந்திக்கு செல்லும்போது அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தான் பேசியதாகவும், அதிமுக வலிமையாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
“தேவர் ஜெயந்தியில் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தியதற்கு எனக்குக் கிடைத்த பரிசாக அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன்.” என்றும் அவர் கூறினார்.
‘இரவு முழுவதும் தூங்கவில்லை’
“எங்களை பி டீம் எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பி டீம் யார் என்பதை நாடறியும்.” என அவர் தெரிவித்தார்.
“என்னை இயக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது குறித்து வேதனைப்படுகிறேன், கண்ணீர் சிந்துகிறேன். 53 ஆண்டுகாலம் இந்த இயக்கத்துக்காக உழைத்திருக்கிறேன். இந்த நீக்கம் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.”
“எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக 1972 ஆம் ஆண்டு முதல் 1984 வரையில் சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராக பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். இவர் 1989 ஆம் ஆண்டு தான் பொறுப்புக்கு வந்தார். அப்படியிருக்கும்போது எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதுதான் விதிகளில் உள்ளது.
சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறியலாம் என்ற போக்கில் செயல்பட்டுள்ளார். 1975 ஆம் ஆண்டு இறுதியில் கொண்டு வரப்பட்ட விதியில், கழக தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொண்டர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். என் மீது களங்கம் சுமத்தி நீக்கப்பட்டிருக்கிறது வேதனைப்படுகிறது.” என அவர் தெரிவித்தார்.

‘முரண்பாடான பேச்சு’
“பொதுச்செயலாளராக சசிகலா இருந்தபோது அவர் எப்படி பதவியைப் பெற்றார் என்பது நாடறியும்.
அதன்பிறகு 18 பேர் டி.டி.வி.தினகரனுடன் வந்து ஆதரவு தந்ததால் ஆட்சியமைத்தோம். அவர் வாபஸ் பெற்ற பிறகு பன்னீர்செல்வம் உள்பட 11 பேரை அழைத்து என்னுடன் பயணித்தால் அனைத்து பதவிகளையும் தருவதாகக் கூறி ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தார்.
அவரும் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அ.தி.மு.கவை நான்கு ஆண்டுகாலம் பா.ஜ.க கட்டிக் காப்பாற்றியது. தமிழ்நாட்டில் தடுமாற்றத்தை உருவாக்கி 2024 மட்டுமல்ல 2026 மற்றும் 2029 ஆம் ஆண்டிலும் கூட்டணி இல்லை என்றார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சைப் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு இடத்திலும் பேசும் பேச்சுகள் முரண்பாடாக உள்ளது.” எனவும் செங்கோட்டையன் கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கையை வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி அறிவிப்பேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், “கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக செங்கோட்டையனின் நடவடிக்கைகள் இருந்து வந்தன. அத்திக்கடவு- அவிநாசி திட்டம் என்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்த திட்டம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சுமார் 1,200 கோடி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணிகள் 85 சதவிகிதம் முடிவடைந்தது. இத்திட்டத்தை திமுக அரசு திறந்து வைத்த பிறகு, அங்குள்ள விவசாயிகள், பல்வேறு கட்சிகள் இணைந்து பாராட்டு விழாவை நடத்துவதற்கு கூட்டம் ஏற்பாடு செய்தார்கள்.
கட்சி சார்பற்ற பாராட்டு விழாவை நடத்தினர். அதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை செங்கோட்டையன் சொன்னார். அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி எனக் கூறியும் நிராகரித்தார். அதேவேளையில், அவரின் தொகுதியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஜெயலலிதா படம் இல்லை. அப்போதே பி டீம் வேலையைத் தொடங்கிவிட்டார். இதில் கருணாநிதி, ஸ்டாலின் படம் மட்டுமே உள்ளது.” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி விரோத செயல்களுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது என்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலும் நீக்கி வைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் கூறினார்.
“இதை நான் கூறவில்லை. அ.தி.மு.கவின் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிராக செயல்பட்டால் கழகம் என்ன முடிவை எடுக்கும் என்பது அவருக்கு தெரியாதா?
பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. அதை ஏற்று அனைவரும் செயல்பட வேண்டும். ” என கூறினார்.

மேலும், கே.ஏ. செங்கோட்டையன் குறிப்பிடும் நபர்கள் எல்லாம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல என்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார்.
“ஜெயலலிதாவின் விசுவாசி என்றால் அவரை ஏன் அமைச்சரவையில் இருந்து நீக்கினார்? அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும்ம் நீக்கிவிட்டார்.
நான் வந்த பிறகு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மாவட்ட செயலாளராகவும் நியமித்தோம். பத்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே டி.டி.வி.தினகரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
ஜெயலலிதா இறக்கும் வரை அவர் சென்னைக்கே வரவில்லை. அவரின் மறைவுக்குப் பிறகு சசிகலாவிடம் இருந்து துணைப் பொதுச்செயலாளராக பதவி வாங்கினார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவருக்கு சசிகலா பதவி கொடுத்தார்.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“தி.மு.கவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட இவர்கள் பேசுவது இல்லை. தி.மு.கவின் பி டீமாக இருக்கின்றனர். செங்கோட்டையனை நீக்கியதற்காக தொகுதியில் உள்ள தொண்டர்களே இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என்றார்.
செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில், “ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு இடத்தில் ஏற்பட்ட கொலை, கொள்ளை குற்றங்களுக்கு இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை” என கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து பதில் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு குறித்து செங்கோட்டையன் பேசியுள்ளார். அதுகுறித்து முன்பே நடவடிக்கை எடுத்தோம். இரண்டு, மூன்று கொலைகள் நடந்ததாகக் கூறுகிறார். மனதுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு தற்போது நாடகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.” என்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் “எங்களுடன் இணைய வேண்டும் எனக் கூறியதால் அதற்கு ஒப்புக் கொண்டு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைக் கொடுத்தோம். அப்போதும் அதற்கு மாறாக செயல்பட்டார். கட்சி அலுவலகத்தை அவர் அடித்து நொறுக்கினார். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்?” என்றும் தெரிவித்தார்.
“பன்னீர்செல்வம் தனக்குப் பதவி இல்லையென்றால் எந்த நிலைக்கும் போவார் என்பது நிரூபணம் ஆனது. ஸ்டாலினை அவர் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். சமீபத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இவையெல்லாம் வெட்ட வெளிச்சமாக வெளிவந்துவிட்டது.” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எனினும், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இணையவில்லையென்றால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்றே தான் கூறியதாக, ஓ. பன்னீர்செல்வம் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார்.
டிடிவி தினகரன் கூறியது என்ன?
ஷார்ட் வீடியோ

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு பழனிசாமிக்கு தகுதியில்லை” என கூறியுள்ளார். “கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக வருத்தப்படக் கூடியவர் செங்கோட்டையன் அல்ல” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், “எம்.ஜி.ஆர் காலத்திலேயே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செங்கோட்டையன் பணியாற்றியுள்ளார். அவரின் மறைவுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏழு பேரை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அழைத்து வந்தவர்.
அந்தளவுக்கு ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக பார்க்கப்படுகிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க இப்போது இல்லை. இப்போது இருப்பது இ.டி.எம்.கே.” என்றார். (எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.)
“ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பசும்பொன்னுக்கு ஒவ்வோர் ஆண்டும் வருவார். அப்போது அவர் வருகை தொடர்பான நிகழ்வுகளைக் கண்காணிக்கும் மூத்த நிர்வாகியாக செங்கோட்டையன் இருந்துள்ளார். தற்போதும் அவர் அரசியலுக்காக பசும்பொன்னுக்கு வரவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், PTI
செங்கோட்டையன் விதித்த கெடு
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இயங்கி வருபவராக கே.ஏ. செங்கோட்டையன் அறியப்படுகிறார்.
இந்நிலையில், பத்து நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் கெடு விதித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
”கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றி பெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்” என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்தை வரவேற்பதாக அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளான வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அப்போது தெரிவித்திருந்தனர்.

“கழகம் (அதிமுக) ஒன்றுபட வேண்டுமென்ற செங்கோட்டையனின் கருத்துதான் ஒவ்வொரு தொண்டனின் கருத்தும். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்” என வி.கே. சசிகலா விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.
“ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்று தனது மனதின் குரலாகப் பேசியுள்ளார். நாங்களும் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்” என ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்தார்.
கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் அதிமுகவை சேர்ந்த யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் அறிவுறுத்தினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு