• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

செந்தில் பாலாஜி முன்பு துரோகி, இப்போது தியாகியா? – தமிழிசை, சீமான் விமர்சனம் | tamilisai seeman condemns senthil balaji

Byadmin

Sep 27, 2024


சென்னை: முதல்வருக்கு, செந்தில் பாலாஜி முன்பு துரோகியாக இருந்தார், அவரது கட்சிக்கு வந்தவுடன் இப்போது தியாகியாகி விட்டாரா என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக விஜய பிரபாகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகியாக இருந்தவர், தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா? அவர் என்ன சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டா சிறைக்கு சென்றார்? தியாகி என்று கூறுவதற்கு. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை, சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். இண்டியா கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது. ஆனால் இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் திருடுவது, லஞ்சம் வாங்குவது, கமிஷன் பெறுவது, கள்ளச்சாராயம் விற்பது போன்ற வைதான் தற்போது தியாகமாக கருதப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது திமுக தொடர்ந்த வழக்கில்தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்கு அனுப்பியதும் திமுகதான். அவரை தற்போது வரவேற்பதும் திமுகதான். அவர் வெளியே வந்தவுடன் அமைச்சரும் ஆக்குவார்கள். அவர்களது கட்சியில் இருந்தால் இது தியாகம். அதே அடுத்த கட்சியில் இருந்தால் ஊழல், குற்றச்சாட்டாக மாறிவிடும்.

தேமுதிக விஜய பிரபாகரன்: ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் செந்தில் பாலாஜி. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், கொள்ளையர் கையில் மீண்டும் சாவியை கொடுப்பது போன்றது. இதில் ஏதோ டீலிங் உள்ளது போன்றுதான் அர்த்தம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



By admin