• Sat. Nov 30th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள் | ஃபெஞ்சல் புயல் தாக்கம் | Medical camps to be held at 500 places in 7 districts including Chennai tomorrow – Minister Ma Subramanian

Byadmin

Nov 30, 2024


சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (டிச.1) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நாளை (டிச.1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என ஆக மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நாளை நடத்தப்படும்.

இந்த மருத்துவ முகாம்கள் எண்ணிக்கையினை தேவைக்கேற்ப அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடக்கும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல் – சளி பரிசோதனை , ரத்த கொதிப்பு , நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் சளி மருந்துகள் ,ரத்த கொதிப்பு – நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.



By admin