பட மூலாதாரம், Getty Images
5 மில்லியன் டாலர்கள் செலவழித்து பெறக்கூடிய “கோல்டன் கார்டு” விசா திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பணக்கார வெளிநாட்டினர் நிரந்திரமாக குடியிருப்பதற்கான ( permanent residency) உரிமையை வழங்கும். மேலும், அவர்கள் நாட்டின் குடிமக்கள் ஆவதற்கான பாதையாகவும் இது இருக்கும்.
“அவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதிக பணம் செலவிடுவார்கள், அதிக வரி செலுத்துவார்கள். மேலும் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். இந்த திட்டம் மிகுந்த வெற்றியை பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று வெள்ளை மாளிகையிலுள்ள அதிபர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று டிரம்ப் கூறினார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா வழங்கும் ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக, புதிய “கோல்டு கார்டு” விசா திட்டம் இருக்கும் என்றார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவார்ட் லட்னிக்.
டிரம்ப் முன்மொழிவது என்ன ?
புதிய விசாவை பெற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேவை குறித்து டிரம்ப் எதையும் குறிப்பிடவில்லை. “அது பணக்காரர்களுக்கானதாக இருக்கும்,” என்றார் அவர்.
ஈபி-5 விசாக்களின் எண்ணிக்கை வரம்பிடப்பட்டுள்ள நிலையில், பற்றாக்குறையை குறைக்க 10 மில்லியன் “கோல்டு கார்டுகளை” அரசு விற்கலாம் என்றார் டிரம்ப்,
இது “மிகச்சிறப்பானதாக இருக்கலாம், ஒருவேளை அது அற்புதமாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“இது பணக்காரர்கள் அல்லது மிகவும் திறமையான நபர்களுக்கான குடியுரிமைக்கான பாதையாகும். திறமையான நபர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு பணக்காரர்கள் பணம் செலுத்துவார்கள். மேலும் நபர்கள் நாட்டிற்கு அழைத்த வரவும், அவர்கள் நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான அந்தஸ்தை பெறவும் நிறுவனங்கள் பணம் செலுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.
பணக்கார ரஷ்யர்கள் இதற்குத் தகுதி பெற முடியுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “ஆம், ஒருவேளை தகுதி பெறலாம். எனக்கு தலைசிறந்த சில ரஷ்யப் பணக்காரர்களைத் தெரியும், அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
இருப்பினும், அனைத்து விண்ணப்பதாரர்களும், “அற்புதமான, உலகத் தரம் வாய்ந்த உலகளாவிய குடிமக்கள்” என்பதை உறுதிப்படுத்த முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று லுட்னிக் கூறினார்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் குடியுரிமைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
கிரீன் கார்ட் வைத்திருக்கும் தற்போதைய ஈபி-5 திட்டத்தில் பயனாளிகள், நிரந்தர குடியிருப்பாளராக ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த பிறகே குடியுரிமைக்கு தகுதி பெற முடியும்.
அமெரிக்கக் குடியுரிமைக்கான தகுதிகளை நாடாளுமன்றம் தீர்மானிக்கிறது, ஆனால் “கோல்டு கார்டுகளுக்கு” நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய திட்டத்தின் விவரங்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
ஈபி -5 திட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
“ஈபி-5 திட்டம்…அர்த்தமற்றது, கற்பனையால் நிரம்பியதும் மோசடிகளால் நிறைந்ததுமாக இருந்தது. குறைந்த விலையில் கிரீன் கார்ட் பெறுவதற்கான ஒரு வழியாக இது இருந்தது. எனவே இதுபோன்ற அபத்தமான ஈபி-5 திட்டத்தை வைத்திருப்பதைக் காட்டிலும், நாங்கள் ஈபி-5 திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று அதிபர் கூறினார்” என்கிறார் லுட்னிக்
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் 1990ம் ஆண்டில் ஈபி-5 திட்டத்தை நிறுவியது. சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 10 வேலைகளை உருவாக்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிற்கு ஈடாக உடனடியாக கிரீன் கார்டு பெறுகிறார்கள், இது எதிர்காலத்தில் குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாகும்.
ஆனால், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பெரும்பாலானோர், நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தை பெற பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
ஈபி-5 திட்டமானது வருடத்திற்கு 10,000 விசாக்களுக்கு வரம்பிடப்பட்டுள்ளது, மேலும் வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள பகுதிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்காக 3,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
பிற குடியேற்ற விசாக்களை விட ஈபி-5 விசாக்களால் மோசடி நடவடிக்கைகள் அதிகம் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று 2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் அறிக்கை கண்டறிந்தது.
” முதலீட்டாளர்களின் நிதி சட்டப்படி பெற்றதா என்பதைச் சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இந்த விசா மூலம் கிடைக்கக்கூடிய பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன் இந்த வகையான ஆபத்துக்கள் தொடர்புடையவை. இது முதலீட்டாளர்களை ஏமாற்ற தனிநபர்களை தூண்டக்கூடும் மற்றும் விசா வழங்கும் முறையில் சிலருக்கு விருப்பச்சலுகை வழங்கப்படுகின்றது எனும் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதே போன்ற திட்டங்கள் மற்ற நாடுகளில் எவ்வாறு செயல்படுகின்றன?
பட மூலாதாரம், Getty Images
இதே போன்ற திட்டங்கள் உலகம் முழுவதும் பொதுவானவை.
“கோல்டன் விசா” திட்டங்கள், பணக்கார வெளிநாட்டினரின் பெரிய முதலீட்டிற்கு ஈடாக நாட்டில் வசிக்கவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகின்றன.
“கோல்டன் பாஸ்போர்ட்” திட்டங்களும் சில கரீபியன் நாடுகளில் பிரபலமாக உள்ளன.
இந்த திட்டங்களின் மூலம், அந்த நாட்டில் வேலை செய்யவும் வாக்களிக்கவும் உள்ள உரிமைகள் உட்பட குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் பணக்கார தனிநபர்கள் பெறுகின்றனர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட நாடுகள், பணக்கார தனிநபர்களுக்கு “கோல்டன் விசாக்களை” வழங்குகின்றன என அறியப்படுகின்றது.
இருப்பினும், இந்த திட்டங்கள் அதிகமான விமர்சனங்கள் மற்றும் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளன.
“(அவை) வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்டும், ஆனால் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான வருவாய் போல மாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புடைய பணத்தை ஒழுங்குபடுத்த இது உதவலாம்,” என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழலுக்கு எதிராக செயல்படும் உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள திட்டங்கள் “உண்மையான முதலீடு அல்லது இடம்பெயர்வு பற்றியது அல்ல, மாறாக ஊழல் நலன்களுக்கு சேவை செய்வது” என்று எச்சரிக்கிறது.
2022 ஆம் ஆண்டில், சிவில் உரிமைகள், நீதி மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழு கோல்டன் பாஸ்போர்ட்டுக்களை தடை செய்வதற்கு வாக்களித்தது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசா இல்லாமல் வருகை தர அனுமதிக்கும் மூன்றாம் தரப்பு நாடுகளை தங்களுடைய பாஸ்போர்ட் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியது.
இந்த காரணங்களே, பிரிட்டன் , ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுடைய கோல்டன் விசா திட்டங்களை திரும்பப் பெற வழி வகுத்தன.
எடுத்துக்காட்டாக, ஸ்பெயின், 2013 இல் உருவாக்கப்பட்ட அதன் “கோல்டன் விசா” திட்டத்தை நீக்கியது. இது முதலீட்டாளர்களுக்கு 500,000 யூரோ(525,000 டாலர்) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்குவதற்கு ஈடாக விசா வழங்கியது. இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி காலக்கெடு 3 ஏப்ரல் 2025 ஆகும்.
இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பாலிடிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science) மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) இணைந்து நடத்திய ஐரோப்பிய ஒன்றிய கோல்டன் விசாக்கள் பற்றிய ஆய்வு இந்த திட்டங்களின் பொருளாதார நியாயத்தை கேள்விக்குள்ளாக்கியது.
ஆய்வின் முடிவில், இவை “மிக குறைந்த” பொருளாதார தாக்கத்தைதான் ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது.
புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் உலகளாவிய வலையமைப்பான, ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தால்’ நடத்தப்பட்ட விசாரணை அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்டது.
போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் லிபிய கேப்டன் மற்றும் துருக்கியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு துருக்கிய தொழிலதிபர் ஆகிய இருவராலும் இந்த திட்டங்களின் மூலம் டொமினிகன் பாஸ்போர்ட்டை வாங்க முடிந்தது என்பது இந்த விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.