பட மூலாதாரம், Mike Kemp/In Pictures via Getty Images
மனித குடும்பத்தில் வாழ்ந்த ஒரு மூதாதையர் இனம் பற்றிய புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மனித இனம் இருப்பதற்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகித்ததும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. யார் இவர்கள்? கண்டங்கள் கடந்து சென்று அவர்கள் சாதித்தது என்ன?
இன்று பூமியில் நடமாடும் ஒரே மனித இனமாக ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) மட்டுமே உள்ளனர். ஆனால், எப்போதும் இப்படி இருந்ததில்லை.
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித குடும்பத்தில் குறைந்தபட்சம் மேலும் இரண்டு குழுக்கள் இருந்தன: அவை நியண்டர்தால்கள் (Neanderthals) மற்றும் டெனிசோவன்கள் (Denisovans).
இதில், நியண்டர்தால்கள் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. 1856ஆம் ஆண்டில் ஜெர்மனியின் நியண்டர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக எலும்புகளைக் கண்டுபிடித்தனர்.
அவை ஆரம்பத்தில் ஒரு கரடியின் எச்சங்களாகக் கருதப்பட்டன. ஆனால் அவை நியண்டர்தால்கள் எனத் தெரிந்த பின் யுரேசியாவின் மேற்குப் பகுதியில் அவர்களின் ஏராளமான தொல்லியல் மற்றும் பழங்காலச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், டெனிசோவன்களின் இருப்பு இந்த நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. சமீபத்திய ஆய்வுகள், இந்தக் குழு மனித குலத்தின் நீண்ட கால இருப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது என்கின்றன.
பழமையான மனித இனம்
கடந்த 2010ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட ஒரு தற்செயல் நிகழ்வாகவே டெனிசோவன்கள் பற்றிய விவாதங்கள் தொடங்கின. 2008ஆம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள், சைபீரியாவில் உள்ள டெனிசோவா குகையில் ஒரு விரல் எலும்பு, ஒரு கடைவாய்ப் பல் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். அதன் டிஎன்ஏ-வை 2010இல் பிரித்தெடுத்தனர்.
இவை நியண்டர்தால்களை சேர்ந்தவை என்று முதலில் நம்பப்பட்டது. இருப்பினும், மரபணு ஆய்வின் முடிவு அவர்களுக்கு ஓர் ஆச்சரியத்தை அளித்தது.
பட மூலாதாரம், Getty Images
“விஞ்ஞானிகள் நியண்டர்தால் மரபணுவைக் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதைப் பகுப்பாய்வு செய்தபோது, அது தனித்துவமானது என்று தெரிய வந்தது,” என்று அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் ஃபெர்னாண்டோ வில்லானியா பிபிசி முண்டோவிடம் விளக்கினார். இவர் வரலாற்றுக்கு முந்தைய மனிதக் குழுக்களை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்
“மரபணுவில் கண்டறியப்பட்ட வேறுபாடுகளின் எண்ணிக்கை நியண்டர்தால்கள் மற்றும் நவீனகால மனிதர்களின் மரபணுக்களுக்கு இடையிலான வேறுபாடுகளுடன் ஒப்பிடக் கூடியதாக இருந்தது. இது அவர்கள் ஒரு புதிய இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது,” என்று விளக்கினார் வில்லானியா.
இந்தப் புதிய இனத்திற்கு, அவை கண்டுபிடிக்கப்பட்ட இடமான டெனிசோவாவின் பெயரே வைக்கப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பிற்காகவும், “முற்றிலும் புதிய அறிவியல் துறைக்கு, அதாவது பழங்கால மரபியல் (paleogenomics) துறைக்கு அடித்தளம் அமைத்தமைக்காகவும்” ஸ்வீடன் நாட்டு மரபியல் நிபுணர் ஸ்வாண்டே பாபோ 2022ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
பட மூலாதாரம், Albin Michel
டெனிசோவன்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்?
“அவர்கள் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நமது சேபியன்ஸ் கிளையில் இருந்து பிரிந்த ஒரு குழுவினர்,” என்று இந்தத் துறையில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களில் ஒருவரான பிரெஞ்சு பழங்கால மானுடவியலாளர் சில்வானா கொன்டேமி பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.
இவர் பிரான்சின் மிக முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு இயக்குநராக உள்ளார்.
“இரண்டு கிளைகளுக்கும் (நியண்டர்தால் மற்றும் டெனிசோவன்) இடையிலான வேறுபாடு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறியதைக் குறிக்கிறது என்பது மிகவும் சாத்தியமான கருதுகோள். ஹோமோ ஹெய்டெல்பெர்கென்சிஸ் குழுவினர் (Homo heidelbergensis) ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, ஒரு நீண்ட மற்றும் கடுமையான பனிப்பாறைக் காலத்தில் தீயைப் பயன்படுத்தும் திறனுடன் ஐரோப்பாவை அடைந்தனர் என்று நமக்குத் தெரியும்,” என்கிறார் சில்வானா கொண்டேமி.
இவர் தி சீக்ரெட் வேர்ல்ட் ஆஃப் டெனிசோவா (The Secret World of Denisova) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
மேலும், “இந்தப் பனிப்பாறை காரணமாகப் பிராந்தியம் துண்டு துண்டாகப் பிரிந்ததால், காலநிலை சூழல்களே நியண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன்களுக்கு இடையிலான பிரிவுக்குக் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை,” என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழு இவ்வளவு காலம் எப்படி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது என்கிற கேள்வியும் எழுகிறது. இதற்கு எச்சங்கள் இல்லாதது, சில கண்டுபிடிப்புகளைத் தவறாக வகைப்படுத்தியது ஆகியவை காரணமாக உள்ளதாகக் கூறுகிறார் சில்வானா கொண்டேமி.
பட மூலாதாரம், Benoit Clarys/Albin Michel
கண்டங்கள் கடந்து சென்ற டெனிசோவன்கள்
டெனிசோவன்கள் ஆசியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர், மேலும் ஓசியானியா வரையிலும் சென்றனர்.
கடந்த ஜூலையில், சீன விஞ்ஞானிகள் நாட்டின் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டில் டெனிசோவன் மரபணுவின் தடயங்களைக் கண்டறிந்தனர். திபெத் மற்றும் தைவானில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு தாடை எலும்புகளிலும் இதேபோலக் கண்டறியப்பட்டது.
“இது அவர்கள் கடலோர மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளிலும், அதே போல குளிர்ந்த மலைகளிலும் வாழ்ந்ததைக் குறிக்கிறது. இந்தப் பரந்த வரம்பு அவர்கள் உயிரியல் ரீதியாக மிகவும் தகவமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள் மற்றும் அவர்களுக்கு சில தொழில்நுட்ப அறிவும் இருந்தது என்பதைக் குறிக்கிறது,” என்று வில்லனியா சுட்டிக் காட்டினார்.
டெனிசோவன்கள் நிலவியல்ரீதியாக நகர்ந்து சென்றபோது, அவர்கள் எதிர்கொண்ட மற்ற மனித இனங்களுடன் இணைந்து வாழ்ந்ததுடன் மட்டுமல்லாது கலக்கவும் செய்தனர்.
“முதல் ஹோமோ சேபியன்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய போது, அவர்கள் நியண்டர்தால்களுடன் தொடர்புகொண்டு கலப்பினம் அடைந்தனர். பின்னர், அவர்கள் கிழக்கு நோக்கிச் சென்றபோது, டெனிசோவன்களுடன் அதே நடந்தது,” என்று கொண்டேமி தெரிவித்தார்.
சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்த “கலப்பு” சேபியன் இனம் உயிர் பிழைத்து இருப்பதை உறுதிப்படுத்த உதவியது.
“பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் பின்னர், டெனிசோவன்கள் கொண்டிருந்த மற்றும் சில காலநிலைகள் மற்றும் இடங்களில் அவர்களுக்கு நன்மைகளை அளித்த பல தனித்துவமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த டெனிசோவன் மரபணு மாறுபாடுகளில் சிலவற்றை இன்று நவீன மனிதர்களிடம் காணலாம்,” என்று வில்லனியா கூறினார்.
பட மூலாதாரம், Samuel Kirzenbaum
திபெத்தின் தற்போதைய மக்களில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவர்களிடம் உள்ள ஈபிஏஎஸ்-1 மரபணுவை பற்றி அந்த நிபுணர் குறிப்பிட்டார்.
“டெனிசோவன்களில் இருந்து தோன்றிய இந்த மரபணு, ஆக்ஸிஜன் கடத்துவதை மேம்படுத்துகிறது. இது அதிக உயரத்தில் வாழும் மக்களுக்கு அத்தியாவசியமானது,” என்று கொண்டேமி விளக்கினார்.
குரோமோசோம் 1இன் மிகத் தனித்துவமான வகைகளில் இருக்கும் டி.பி.எக்ஸ்15, வார்ஸ்2 மரபணுக்களின் தோற்றம் டெனிசோவன்களிடம் ஏற்பட்டதைக் கண்டறிய முடியும் என்றும், அவை ஆசியாவின் உயர் அட்சரேகைகளில் வாழும் சில மக்களிடம் காணப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்த மரபணுக்கள் உடலின் வளர்ச்சி மற்றும் குறிப்பாக பழுப்பு கொழுப்பு திசுக்களின் விநியோகத்தில் பங்கு வகிக்கின்றன, இது குளிர்ந்த காலநிலையில் வெப்பத்தை உருவாக்கப் பயன்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.
கடல் கடந்து அமெரிக்காவுக்கு சென்ற டெனிசோவன் மரபணு
நியண்டர்தால் புதைபடிவங்கள் மற்றும் நவீன மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு டெனிசோவன் மரபணு எம்யுசிC19 ஆகும். இது உமிழ்நீர், சுவாச மற்றும் செரிமானப் பாதைகளின் சளித் தடுப்புகளை உருவாக்கும் புரதங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. இது திசுக்களை நோய்க்கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது.
“இந்த மரபணு அமெரிக்காவின் பூர்வீக வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவரிடம் காணப்படுகிறது,” என்கிறார் வில்லனியா.
பட மூலாதாரம், Comité Noruego del Premio Nobel
ஆனால் டெனிசோவன்கள் அமெரிக்காவை அடைந்தார்களா என்கிற கேள்விக்கு, “இல்லை, ஆனால் அவர்களின் மரபணுக்கள் அமெரிக்காவை அடைந்தன,” என்று கொண்டேமி பதிலளித்தார்.
“அமெரிக்கர்கள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களிடம் உள்ளதைப் போல் ஆசியர்களும் நியண்டர்தால் மற்றும் டெனிசோவன் மரபணுக்களைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அமெரிக்காவின் பூர்வீக மக்களில் ஒரு பகுதி ஆசியாவில் இருந்து வந்தவர்கள்,” என்று அவர் கூறினார்.
“நீங்கள் தென் அமெரிக்காவை சேர்ந்தவராக இருந்தால், உங்கள் டிஎன்ஏ-வை 100 டாலர்களுக்கு ஆய்வுகளைச் செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பலாம். அப்படி அனுப்பினால், உங்களிடம் நியண்டர்தால் மற்றும் டெனிசோவன் டிஎன்ஏ இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் பூர்வீகத்தைப் பொருத்து உங்களுக்கு இரட்டிப்பான டெனிசோவன் டிஎன்ஏ இருக்கலாம்: ஒன்று பெரிங் ஜலசந்தி வழியாக வந்தது, மற்றொன்று பின்னர் பசிபிக் தீவு மக்கள் மூலமாக வந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஐரோப்பிய வம்சாவளியைக் கொண்ட லத்தீன் அமெரிக்கர்களிடம் நியண்டர்தால் மரபணு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார் அவர்.
மீண்டும் எம்யுசி19 மரபணுவைப் பார்க்கும்போது, “இது அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு பகுதிக்கு நோயெதிர்ப்புத் தற்காப்பில் ஒரு “நன்மையை” அளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது கண்டத்தின் நிலைமைகளுக்குத் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள உதவியிருக்கலாம்” என்று வில்லனியா சுட்டிக்காட்டினார்.
பட மூலாதாரம், JONATHAN NACKSTRAND/AFP via Getty Images
மரபணுவில் பொதிந்துள்ள ரகசியங்கள்
டெனிசோவன்களின் கண்டுபிடிப்பு மனித குலத்தின் தோற்றம் மற்றும் கடந்த காலத்தை ஆராயும் வழிகளைப் புரிந்துகொள்வதில் கொண்டேமிக்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது.
“இந்த ஆராய்ச்சி, முன்பு பழங்கால மானுடவியல் எலும்புகளை மட்டுமே நம்பியிருந்தது. ஆனால் இன்று மரபியல், உயிரியல், தாவரவியல் போன்ற பல துறைகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், மரபியல் ஒருங்கிணைப்பு ஒரு புரட்சிகரமான விஷயமாக இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “நமது முழு வரலாற்றையும் டிஎன்ஏ-வில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்,” என்று கொண்டேமி கூறினார்.
“இது நமது தனிப்பட்ட வரலாறு, நமது குடும்பம், அல்லது நமது தேசத்தின் வரலாற்றைப் பற்றியது மட்டுமல்ல. ஓர் இனமாக நமது வரலாறு, நமது இடப்பெயர்வுகள், நோய்களை நாம் எதிர்கொண்ட விதம், சில உணவுகள் மற்றும் சூழல்களுக்கு நாம் எப்படி நம்மை மாற்றியமைத்துக் கொண்டோம் என்பன பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். எல்லாமே நமது மரபணுக்களில் உள்ளன,” என்று கூறி முடித்தார்.
வில்லனியாவும் இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.
“முழுமையான எலும்புக்கூடு, கருவிகள் அல்லது பிற குறிப்புப் பொருட்கள் இல்லாதபோதிலும், டெனிசோவன் நபரின் முழு மரபணுவும் நமக்கு நிறைய தகவல்களை வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
டெனிசோவன் கண்டுபிடிப்பு எழுப்பும் கேள்விகள்
இந்த மூதாதையர்கள் மற்றும் அவர்களின் மறைவு பற்றி இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
அவர்களின் உடல் தோற்றத்தைப் பொருத்தவரை, நியண்டர்தால்களை போலவே டெனிசோவன்களும் பெரிய தலைகளைக் கொண்டிருந்தனர் என்று கொண்டேமி கூறினார்.
“நியண்டர்தால்களுக்கு ஒரு நாயைப் போல நீளமான முகம் இருந்தது. கன்ன எலும்புகள் முற்றிலும் பக்கவாட்டில் இருந்தன, ஆனால் டெனிசோவன்களுக்கு மிகவும் தடித்த கன்ன எலும்புகளும் நியண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களைவிட மிகப்பெரிய பற்களும் இருந்தன,” என்று அவர் பட்டியலிட்டார்.
அவர்களின் அழிவைப் பற்றிக் கூறும்போது பல காரணிகளின் கலவையால் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக வில்லனியா கூறினார்.

“எங்களிடம் உள்ள புதைபடிவச் சான்றுகள் முழுமையற்றவை, ஆனால் நாங்கள் அல்தாய் மலைகளில் (மத்திய ஆசியா) வாழ்ந்த நபரின் மரபணுவில் இருந்து சில தடயங்களைப் பெற்றுள்ளோம். அழிவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டெனிசோவன் சமூகங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் இருந்ததாக மரபணுச் சான்றுகள் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
மேலும், “ஐரோப்பாவில் பனியுகத்தின் முடிவோடு டெனிசோவன்களின் முடிவும் ஒத்துப் போனதாக நிலவியல் தகவல் சுட்டிக்காட்டுகிறது. இது அவர்கள் குளிர்ந்த சூழலில் வாழப் பழக்கப்பட்டிருந்தனர் என்பதையும், மறைந்துபோன பெரிய விலங்குகளை வேட்டையாடுவதை நம்பியிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.”
ஆனால் இந்த இறுதிக் காலகட்டத்தில்தான் ஹோமோ சேபியன்கள் என்ற மனித இனம் முன்னேறியது.
“டெனிசோவன்களை அழிவுக்கு உள்ளாக்கிய அதே காலநிலை மாற்றச் செயல்முறை, நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளில் இருந்து மத்திய தரைக்கடல் மற்றும் ஆசிய கடற்கரைகள் வரை விரிவடைய அனுமதித்தது. அங்கு அவர்கள் கடைசியாக இருந்த நியண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன்களை கண்டனர், இதன் விளைவாக இன்று மனிதர்கள் கொண்டுள்ள மரபணுப் பாரம்பரியம் உருவானது,” என்று அவர் முடித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு