• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழர்களை வருத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும்! – சிறீதரன் எம்.பி. வலியுறுத்து

Byadmin

Jul 20, 2025


இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட்டு நேற்றுடன் 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டுக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட பங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது வரையில் அமுலில் உள்ளது. குறித்த சட்டமானது, ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறாக இருந்தாலும் பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தச் சட்டத்தின் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த தரப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசினர் உள்ளனர். அவர்கள் தற்போது இந்தச் சட்டத்தை அமுலில் வைத்திருப்பதற்கு முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் ஜே.வி.பியினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

ஜே.வி.பியின் இந்த மாற்றமானது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் உரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.

The post தமிழர்களை வருத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும்! – சிறீதரன் எம்.பி. வலியுறுத்து appeared first on Vanakkam London.

By admin