படக்குறிப்பு, ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஷியாம் சுந்தர் பார்டியா உள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடிகை ஒருவர் பார்டியாவுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார். ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை வழக்காக பதிவு செய்யவில்லை. பார்டியா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த நடிகை மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த விவகாரம் நீதிபதி நீலா கோகலே முன்பு விசாரணைக்கு வந்தது. புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, பின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் (Ld. APP) வழங்கிய அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தார் நீலா. தற்போது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை அளித்த குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை.
தானேவில் அமைந்திருக்கும் கப்பூர்பாவ்டி காவல்நிலையம் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஷியாம் சுந்தர் மற்றும் இதர மூன்று நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஷியாம் சுந்தர் பார்டியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?
பாலியல் வன்கொடுமை, மிரட்டல், சாதிய ரீதியான துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆரில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான பூஜா கமல்ஜீத் சிங்கை புகார் கொடுத்த அந்த பெண் முதலில் தொடர்பு கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆரின் படி, சினிமா வாய்ப்புகள் கிடைப்பதற்கு உதவியாக செல்வாக்கு மிக்க நபர்களை அப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக பூஜா கமல்ஜீத் சிங் அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
மே 3, 2023 அன்று மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் முதன்முறையாக பார்டியாவை பார்த்ததாக தெரிவிக்கிறார் அந்த நடிகை. பிறகு பார்டியா அவரை சிங்கப்பூருக்கு அழைத்ததாக தெரிவிக்கிறார் அப்பெண்.
எஃப்.ஐ.ஆரில், மே 19, 2023 அன்று அந்த பெண் சிங்கப்பூருக்கு பூஜாவுடன் பயணித்துள்ளார். அங்கே புகார் அளித்த பெண்ணை பார்டியா அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை வற்புறுத்தி மதுபானம் குடிக்க வைத்து, பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மொத்த நிகழ்வையும் பூஜா தன்னுடைய செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நடந்த விவரங்களை வெளியே கூறினால் இந்த வீடியோ பொதுவில் வெளியிடப்படும் என்று அவர் மிரட்டப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, பாம்பே பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவற்றுக்கு ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் பிப். 25 அன்று அனுப்பிய அறிக்கை
பார்டியா கூறியது என்ன?
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் என்பது டெல்லி, நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவு சேவை நிறுவனமாகும்.
டோமினோஸ் பிட்சா, போபெயேஸ், டங்கின் டோனட் போன்ற சர்வதேச பிராண்டுகளின் உணவகங்களை இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் நடத்தும் உரிமையைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம் என்று தெரிவிக்கிறது அந்த நிறுவனம்.
பார்டியாவுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனிப்பட்ட ரீதியாக இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து பார்டியா வெளியிட்ட அறிக்கையை அந்த நிறுவனம் பெற்றதாக கூறுகிறது. அதில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, பொய்யானவை மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார் பார்டியா. மேலும் குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பார்டியா வழங்குவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு இதில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 400 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் 30 ஆயிரம் நபர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அந்த நிறுவனத்தின் வணிகத்தையோ, செயல்பாடுகளையோ பாதிக்காது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.