• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை | Mettur Dam filled for the 3rd time this year

Byadmin

Jul 20, 2025


மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 31,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு காரணமாக இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்குத் தேவையான 330 டிஎம்சி நீர் வழங்கப்படும். எனினும், இருப்பைப் பொறுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்விடுவார்கள்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியன. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த ஜூன் 29-ம் தேதி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 44வது முறையாக எட்டியது. பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததால், நடப்பாண்டில் ஜுலை 5-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 18,610 கன அடியாகவும், நேற்று மாலை 28,784 கன அடியாகவும் இருந்த நிலையில் இன்று காலை 31,500 கன அடியாக அதிகரித்தது. நடப்பாண்டில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 3வது முறையாக இன்று காலை 8 மணிக்கு எட்டியது.

கடந்தாண்டை போல், நடப்பாண்டிலும் 3 முறை அணை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி முதல் காவிரி ஆற்றில் 31,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி வீதமும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 8,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வராத்திற்குப் பிறகு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 16 கண் மதகு வழியாக மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், காவிரிக்கரையோர பகுதிகளான தங்கமாபுரிபட்டணம், சின்னகாவூர், முனியப்பன் கோவில் பகுதிகளில் வருவாய்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளாதால், அணை 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை 16 கண் மகுத வழியாக திறக்கப்பட்ட தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவரை மீனவர்கள் மீட்ட காட்சி

நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அறிவித்த நேரத்திற்கு, முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பெரியார் நகர் கால்வாயில் நின்று கொண்டிருந்த முதியவர் சடையன் (60) நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த மீனவர்கள் ஒடிச் சென்று முதியவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



By admin