“கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே இதில் பங்கிருக்கிறது. செல்வாக்கைக் காட்ட கூட்டம் கூட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். ஒரு சமூகமாக நாம் மாறவேண்டும்” என்று கூறியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.
தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்றுவரும் அஜித், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வுக்கு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மேலும், இந்தப் பேட்டியில் தனக்கு ரேஸிங் பிடித்ததற்கான காரணம், விளையாட்டு தனக்குள் ஏற்படுத்திய தாக்கம், பிரபலமாக இருப்பதனால் ஏற்படும் பிரச்னைகள், அடுத்த படத்தின் அப்டேட் என பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார் அஜித்.
கரூர் கூட்ட நெரிசல் – “அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல”
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, “கரூர் கூட்ட நெரிசல் அந்தத் தனிமனிதருடைய தவறு மட்டுமல்ல” என்று சொல்லியிருக்கிறார் அஜித்
சம்பவம் நடந்தவுடன் மக்கள் யாரையும் சந்திக்காமலும் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமலும் சென்னை திரும்பினார் விஜய்.இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகவே, ஓரிரு தினங்கள் கழித்து ஒரு வீடியோவை விஜய் வெளியிட்டார். அதன்பிறகு சில நாள்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களுடன் குடும்பத்தோடு வீடியோ காலில் உரையாடினார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரம் வரவைத்து தனித்தனியாக ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்தார் விஜய்.
இந்நிலையில்தான் நடிகர் அஜித் குமார் கரூர் கூட்ட நெரிசல் குறித்து தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார். “கூட்ட நெரிசலுக்கு அனைவருக்குமே பங்கிருக்கிறது” என்று அஜித்குமார் குறிப்பிட்டார்.
“கரூர் கூட்ட நெரிசல் பிரச்னைக்கு அந்த ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு கிடையாது. நாம் அனைவருமே பொறுப்புதான். முக்கியமாக ஊடகங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. கூட்டத்தைக் கூட்டி செல்வாக்கைக் காட்டும் ஒரு சமுதாயமாக நாம் மாறிவிட்டோம்” என்றார் அஜித்.
மேலும், “இது ஏன் ஒரு கிரிக்கெட் போட்டியில் நடப்பதில்லை? ஆனால் திரையரங்குகளில் நடக்கிறது. பிரபலங்கள், திரைத்துறையினர் கலந்துகொள்ளும் இடங்களில் மட்டும் ஏன் நடக்கிறது. இது திரைத்துறை மீதே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். இது நமக்கு வேண்டாம்” என்று கூறினார்.
இது ஒரு சமுதாயமாக அனைவரின் தோல்வி என்று குறிப்பிட்டார் அஜித். “இது அந்த ஒரு தனி நபருடைய தவறல்ல. நான் உள்பட நாம் அனைவருமே இதற்கு பொறுப்புதான். கூட்டம் கூட்டுதலின் மேல் இருக்கும் மோகத்திலிருந்து நாம் விலக வேண்டும். 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. அதை வைத்து நம் செல்வாக்கை காட்டத் தேவையில்லை” என்றார் அஜித்.
‘ஊடகங்களும் ரசிகர்களும் மாற வேண்டும்
ரசிகர்களின் அன்பு திரைப் பிரபலங்களுக்கு முக்கியம் என்றாலும், அதைக் காட்ட பல்வேறு வழிகள் இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்தார் அஜித்.
“நாங்கள் குடும்பங்களிடமிருந்து பிரிந்து, தூக்கத்தை இழந்து, அடிபட்டு, காயம்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி படங்களை உருவாக்குவது ஏன்? எல்லாம் மக்களின் அந்த அன்புக்காகத்தான்! ஆனால், அதைக் காட்ட பல்வேறு வழிகள் இருக்கின்றன” என்று கூறினார் அஜித்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரசிகர்கள் தங்கள் அன்பைக் காட்ட வேறு வழிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார் அஜித் (கோப்புப்படம்)
“முதல் நாள் முதல் ஷோ என்று சொல்லி திரையரங்குகளில் பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, திரைகளைக் கிழிப்பது என நிறைய செய்கிறார்கள். இவையெல்லாம் முடிவுக்கு வரவேண்டும்” என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் “முதல் நாள், முதல் காட்சி மீதான மோகத்தை ஊடகம் ஊக்குவிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், ஊடகத்தின் ஒரு பகுதியினர் இரு நடிகர்களை ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு நடிகரை விட மற்றொரு நடிகரின் படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது என்றெல்லாம் எழுதும்போது, அது ரசிகர்களை தவறவான வழியில் வழிநடத்தும். அடுத்த முறை அந்தப் படத்தைவிட இதை நாம் சிறப்பாக்க வேண்டும் என்று நினைப்பார்கள்” என்றும் அஜித்மார் பேசினார்.
ரசிகர்களின் இந்த செயல்பாடுகளைப் பற்றிப் பேசியபோதுதான் கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு மேற்கூறிய விஷயங்களை அஜித் பேசினார்.
இலவசங்கள் பற்றி அஜித்
ரசிகர்கள், ஊடகம் ஆகியோருக்கு இருக்கும் பொறுப்பு பற்றிப் பேசிய அஜித், அனைவரும் இப்போது ஆட்சி செய்ய நினைக்கிறார்கள் என்றும் கூறினார். நாம் அனைவரும் அரசு சரியாக இயங்குவதற்கு அனைவரும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அரசியல் என்பது மிகவும் கடினமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், “அரசியல்வாதிகளிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர்களிடம் நாம் தொடர்ந்து எதிர்பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது. இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது. இந்த பேட்டிக்குப் பிறகு என்னை விமர்சிக்கலாம். ஆனால், ஒருகட்டத்தில் இதை சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது” என்றார்.
ரேஸிங்குக்காக தொடர் பயணங்களில் இருப்பது, தன்னை புகழுக்கு அப்பால் வைத்திருப்பதாகவும், அது தனக்கு தற்போது தேவைப்படுவதாகவும் கூறினார் அஜித். அந்தப் புகழ் நிறைய விஷயங்கள் கொடுத்திருந்தாலும், அவசியமான பல்வேறு விஷயங்களை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“புகழ் என்பது இருமுனைக் கத்தி. நிச்சயமாக அதைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நான் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவரும் அப்படித்தான் நினைக்கிறோம். அதேசமயம், அது நாம் அதிகம் எதிர்பார்க்கும் விஷயங்களை இழக்க வேண்டிய நிலையில் வருகிறது” என்றார் அஜித்.
மேலும் அதுபற்றிப் பேசிய அவர், “உதாரணமாக நான் என் மகனின் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது. ஒன்றிரண்டு முறை போனால், மூன்றாவது நாள் அங்கு கூட்டம் கூடிவிடும். பின்னர் நீங்கள் சென்றுவிடுங்கள் என்று அன்பாக பள்ளிதரப்பே சொல்லும். அது எனக்கு நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், என்னால் இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியாது. நாம் செல்வது தெரிந்தால் உடனே 50-60 வண்டிகள் பின்னே துரத்திவரும். அதிலும் ஒவ்வொரு வண்டியிலும் நான்கு பேர் வரை இருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படுவதோடு, மற்றவர்கள் மீது மோதி மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திடுவார்கள். இன்னும் சிலர் என் வண்டிக்கு முன் அவர்கள் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுக்கவோ, பார்க்கவோ வேண்டும் என்பார்கள். அவர்கள் ரசிகர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், எனக்கு எப்படி அது உண்மையென்று தெரியும். அப்படி நினைத்து சிலமுறை மோசமான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன” என்றார்.
ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு வெளியே ரசிகர்களுக்குக் கைகொடுத்தபோது ஒரு இளம் ரசிகர் பிளேடால் தன் கையைக் கிழித்த நிகழ்வைக் குறிப்பிட்டு அப்படிப் பேசினார் அஜித்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரேஸிங் தனக்கு தியானம் போன்றது என்று குறிப்பிடுகிறார் அஜித்
“ரேஸிங், வாழ்க்கை மீது மேலும் பிடிப்பைக் கொடுக்கிறது”
ஆபத்தான ரேஸிங்கில் ஈடுபடுவது பற்றிக் கேட்டதற்கு, “அதில் இருக்கும் ஆபத்துதான் வாழ்க்கை மீது இன்னும் பிடிப்பைக் கொடுக்கிறது” என்று கூறினார் அஜித்.
“இங்கு ரேஸிங்கில் ஒரு சிறு தவறும் உங்கள் கை, கால்களை இழக்கச் செய்யலாம், இல்லை உயிரையே பறிக்கலாம். அந்தக் காருக்குள் அடியெடுத்து வைத்ததும் நிறைய பயம் இருக்கும், பதற்றம் இருக்கும். ஆனால், ரேஸ் முடிந்து பின் இன்னும் நாம் நல்லபடியாக உயிரோடு இருக்கிறோம் என்ற உணர்வு அலாதியானது. ஒவ்வொரு சாகச விளையாட்டுகளுமே இப்படித்தான்” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், “ஒரு வகையில் இது எனக்கு தியானம் போன்றதும் கூட. அவ்வளவு ஆபத்துகள் இருப்பதால் நினைப்பு அதில் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி எதுவும் யோசிக்கத் தேவையில்லை” என்று கூறினார் அவர்.
அதேசமயம் வாகனம் ஓட்டும்போது அது நம்மையும், நம்மை சுற்றி ஓட்டும் மற்ற ரேஸர்களையும் பாதிக்காத வகையில் பொறுப்பாகவும் செயல்பட வேண்டும், இது ஒவ்வொரு ரேஸரின் கடமை என்றும் தெரிவித்தார்.
அடுத்த பட அப்டேட் எப்போது?
வரும் ஜனவரி மாதம் தன் அடுத்த படத்துக்கான அப்டேட் வரலாம் என்று அவர் தெரிவித்தார். இனிமேல் ரேஸிங், சினிமா இரண்டையுமே ஒரே கட்டத்தில் செய்யும் வகையில் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன் ரேஸிங் சீசனின் போது அதில் கவனம் செலுத்திவிட்டு, அடுத்த சீசனுக்கான இடைப்பட்ட காலத்தில் பட வேலைகளில் ஈடுபடுவதாக அஜித் குறிப்பிட்டிருந்தார்.