0
‘பிக் பொஸ் ‘சீசன் 7 மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமாகி, பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன், லோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் – கிளிஃபி கிரீஷ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஒரு இளம் பெண் மேற்கொள்ளும் பயணத்தை அடிப்படையாக வைத்து உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோவை பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” தன்னுடைய கனவுகளை மனதிற்குள் வைத்து பூட்டிக்கொண்டு, உறவுகளுக்காக நாளாந்த வாழ்வியல் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் இளம் பெண் – ஒரு புள்ளியில் தனக்கான வாழ்க்கையை வாழ்வதற்கான பயணத்தை தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் தான் இப்படத்தின் திரைக்கதையாக விரிகிறது. இது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அர்த்தமுள்ள பயணமாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.