• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

“நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பாகக் களமிறங்க வேண்டும்!”

Byadmin

Sep 26, 2024


“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். இதுவே மக்கள் விருப்பம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்குடன் நான் செயற்படவுள்ளேன்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். தெல்லிப்பழை, மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் இன்று புதன்கிழமை நேரில் வந்து என்னுடன் கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் கொள்கையுடன் பயணித்த தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்ததை நினைவுகூர்ந்த அவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், எதிர்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக மீண்டும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும், ஒன்றுபட்டு போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும் என்றும், இதற்கு மக்கள் பூரண ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

அவ்வாறான கருத்தை நீண்ட நாட்களாகவும், அண்மைக்காலத்திலும் என்னிடம் வேண்டுகோளாக விடுக்கப்பட்டதை நான் கவனமாக அவதானித்து வந்துள்ளேன் .

ஆகையால், இந்தக் கோரிக்கையை அவர்களிடமும் தெரிவித்தேன். நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட நன்மைகளையும், இனத்தின் விடுதலைக்கான முன்னேற்றத்தையும் நான் நன்கு அறிந்திருந்தேன். இவர்களுடன் பகிர்ந்திருந்தேன் .

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாங்கள்  எதிர்காலத்திலும் தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசத்துக்காகவும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியதை நானும்  வலியுறுத்திக் கூறினேன் .

இந்த வேண்டுகோளை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்தச் சந்திப்பையும் கொண்டு சென்று இந்த ஒற்றுமைக்காகச் செயற்படவுள்ளேன்.

இத்தகைய ஒற்றுமை முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சித் தலைவர்களுடனும், பல்கலைக்கழக  மாணவ சமுதாயத்திடமும், அமைப்புகளுடனும் பேச்சுகள் நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படவுள்ளேன். அதற்கான முயற்சிகளை உடனேயே ஆரம்பிக்கவுள்ளேன்.” – என்றார்.

The post “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பாகக் களமிறங்க வேண்டும்!” appeared first on Vanakkam London.

By admin