பட மூலாதாரம், Getty Images
பண்டைய உலகின் வரலாறை பெண்கள் மூலம் ஒரு புத்தகம் சொல்கிறது. எழுத்தாளர் டெய்சி டன்னின் புத்தகம், பெண்கள் தங்கள் தனிப்பட்ட காம ஆசைகள் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்கிறது. பெண் வெறுப்பை கொண்ட ஆண்களின் எண்ணத்துக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் இருந்தன.
கி.மு 7ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர் அமோர்கோஸின் செமோனைட்ஸ் கூற்றுப்படி, பெண்களை பத்து முக்கிய வகையாக பிரிக்கலாம். சுத்தம் செய்வதை விட சாப்பிட விரும்பும் ‘பன்றிகளைப் போன்ற பெண்கள்’; விசித்திரமாக கவனிக்கும் ‘நரிகளைப் போன்ற பெண்கள்’; பாலியல் ரீதியாக அதிக இச்சைக் கொண்ட ‘கழுதைப் பெண்கள்’; கீழ்ப்படியாத ‘நாய்-பெண்கள்’.
அதேபோல, புயல் வீசும் கடல் பெண்கள், பேராசை கொண்ட பூமிப் பெண்கள், வேட்டைக்கார திருட்டுப் பெண்கள், சோம்பேறியான குதிரைப் பெண்கள், அழகற்ற குரங்குப் பெண்கள் மற்றும் நல்ல வகையைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் கடின உழைப்பாளி தேனீப் பெண்கள் என பெண்களை ஆண் கவிஞர் வகைப்படுத்தினார்.
அந்தக் காலத்தில் நிலவிய பெண் வெறுப்பை அப்பட்டமாக காட்டும் இந்தப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பெண்களிலும், பாலியல் ரீதியாக ஒழுக்கக்கேடானவர்கள் என முத்திரை குத்தப்பட்ட “கழுதைப் பெண்கள்” மிகவும் மர்மமானவர்களாக இருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
பண்டைய உலகின் வரலாற்றுக் குறிப்புகள் பெண்களின் வாழ்க்கையின் ரகசியத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. கிரேக்கத்தில், பெண்கள் பொது இடங்களில் தங்களை மறைத்து முக்காடு போடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
ரோமில், பெண்களின் செயல்பாடுகளையும், அவர்கள் சொத்துக்களைக் கையாள்வதையும் மேற்பார்வையிட அவர்களுக்கு “பாதுகாவலர்கள்” (பொதுவாக அவர்களின் தந்தை அல்லது கணவர்) இருந்தனர்.
பாலியல் இச்சை கொண்ட பெண் என்ற கருத்து உண்மையில் ஆண்களின் வெற்றுக் கற்பனையா? அல்லது பொதுவாக நம்பப்படுவதை விட உடலுறவில் பழங்காலப் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருந்ததா?
எனது புத்தகம் ‘The Missing Thread: A New History of the Ancient World Through the Women Who Shaped It’, குறித்த ஆய்வில், பெண்கள் உண்மையில் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள் என்பதைக் கண்டறிய நாம் மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.
‘மிகைப்படுத்த முனையும் ஆண்களால் எழுதப்பட்டவை’
தற்போது எஞ்சியிருக்கும் பெரும்பாலான ஆதாரங்கள், பெண்களின் பாலியல் பழக்கங்களை ஏதோ ஒரு திசையில் மிகைப்படுத்த முனையும் ஆண்களால் எழுதப்பட்டவை.
சிலர், ஒரு பெண்ணின் நல்லொழுக்கத்தை வலியுறுத்துவதற்காக அவரை கிட்டத்தட்ட புனிதமானவள் மற்றும் மனிதாபிமானமற்றவள் என்று காட்டினார்கள். மற்றவர்கள், வேண்டுமென்றே பெண்களை அதீத பாலியல் இச்சை கொண்டவர்களாக சித்தரித்து, அவர்களின் நடத்தையை மோசமானதாக காட்டினார்கள்.
இந்த விளக்கங்களை நாம் மேலோட்டமாக எடுத்துக் கொண்டால், பண்டைய உலகில் பெண்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள் அல்லது பாலியல் இச்சை பிடித்தவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
நல்ல வேளையாக பெண்களின் காமம் குறித்த மிக ஆழமான பார்வையை வழங்கும் சில பெண்களின் கருத்துகளை அறியும் வாய்ப்பு இருக்கிறது.
பெண் அனுபவித்த தீவிரமான உடல் உணர்வுகள்
மேலே மேற்கோள் காட்டப்பட்ட கவிஞரின் அதே காலகட்டமான கி.மு. 7ஆம் நூற்றாண்டில் கிரேக்க தீவான லெஸ்போஸில் வசித்த, ‘சப்போ’ என்ற கவிஞரின் பதிவைப் பார்க்கலாம்.
ஆண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்த கவிஞர் சாப்போ, அந்தப் பெண் அனுபவித்த தீவிரமான உடல் உணர்வுகளை ஆவணப்படுத்தினார். படபடக்கும் இதயம், தடுமாறும் பேச்சு, சூடேறிய நரம்புகள், கண்களில் மயக்கம், காதுகளில் ஒருவிதமான ஓசை கேட்பது, ஏதும் செய்யாமலேயே வியர்ப்பது, உடல் நடுக்கம் என பெண்ணின் உடல்ரீதியான உணர்வுகளை அவர் நுணுக்கமாக பதிவு செய்துள்ளார்.
மற்றொரு கவிதையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெண் ஒருவர், மென்மையான படுக்கையில், எப்படி “தன்னுடைய ஆசையை” தணிப்பது என்று ஏங்குவதை பற்றி எழுதியுள்ளார்
சப்போவின் கவிதைகள் தற்போது முழுமையாக கிடைக்காமல், துண்டு துண்டாக இருப்பதால் அவற்றைத் துல்லியமாகப் படிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் அறிஞர்கள் “டில்டோஸ்” பற்றிய குறிப்பு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர், இது கிரேக்கத்தில் ஒலிஸ்பாய் என்று அழைக்கப்படுகிறது.
இவை கிரேக்கத்தில் கருவுறுதல் சடங்குகளிலும், மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல குவளை ஓவியங்களிலும் இவை இடம்பெற்றன.
பட மூலாதாரம், Getty Images
காம உணர்ச்சிகளைக் கண்டு பழங்காலப் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர், சிலர் அந்த உணர்வுகளை தங்களுடனே புதைத்துக் கொண்டனர், வாழ்க்கையில் இறுதிவரை அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
ரோம் முக்கியத்துவம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில், இத்தாலிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய மிகவும் திறமையான எட்ருஸ்கன்கள் காதல் காட்சிகளை சித்தரித்தனர்.
ஏராளமான கலைப் படைப்புகள் மற்றும் கல்லறை சிலைகள், ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதை சித்தரிக்கின்றன. கி.மு 8ஆம் நூற்றாண்டில் எட்ருஸ்கன் பெண் ஒருவரை அடக்கம் செய்யும்போது, அவருடன் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பிறப்புறுப்புகளைத் தொடும் ஒரு தூபவர்த்தி ஒன்றும் வைக்கப்பட்டது.
பாலியல் தொழில் எவ்வாறு பார்க்கப்பட்டது?
பாம்பீயில் உள்ளது போன்ற பழங்கால பாலியல் தொழில் நடத்தப்படும் விடுதிக்குச் சென்றால், அங்கு வெளிப்படையாக பாலுணர்வு தொடர்பான காட்சிகளைக் காண முடியும்.
பாலியல் தொழிலாளர்கள், தங்கள் தொழிலைச் செய்த அறைகளின் சுவர்களில் பாலியல் சித்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். அவற்றில் பெரும்பாலானவை, சில பெண்களின் பாலியல் செயல்பாடுகளைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பிய ஆண் வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய பாலியல் தொழிலாளர்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிய விளக்கங்களுடன் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளும் எழுத்துக்களும் உள்ளன.
நீராவுக்கு எதிராக, கி.மு நான்காம் நூற்றாண்டில் ஏதெனிய அரசியல்வாதி அப்பல்லோடோரஸ் ஆற்றிய ஒரு வழக்கு உரையில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் பற்றிய திடுக்கிடும் நுணுக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில், இத்தாலியில் வாழ்ந்த நோசிஸ் என்ற பெண் கவிஞர் ஒரு கலைப்படைப்பைப் பாராட்டி எழுதினார். அந்த கலைப்படைப்புக்கு நிதியளித்தது பாலியல் தொழிலாளி ஒருவர் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். காதல், அழகு, இன்பம், காமம், இனப்பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்டைய கிரேக்க தெய்வம் அப்ரோடைட்டின் புகழ்பெற்ற சிலையான அந்தக் கலைப்படைப்பு ஒரு கோவிலில் அமைக்கப்பட்டது.
டோரிச்சா என்று அழைக்கப்படும் உயர் அந்தஸ்துள்ள பாலியல் தொழிலாளி தான் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்காக ஏதாவது ஒன்றை வாங்கினார்.
இந்தப் பெண்கள் ஏற்றுக் கொண்டது காமத்தை மட்டும் அல்ல, மாறாக அவர்கள் இறந்த பிறகு நினைவுகூரப்படுவதற்கான அரிய வாய்ப்பு.
ஆண் எழுத்தாளர்களின் கருத்துக்கள்
ஆண் எழுத்தாளர்களுக்கு பெண்களின் மீதிருந்த தவறான எண்ணங்கள் அனைத்தையும் மீறி, பெண்கள் மற்றும் பாலியல் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான நுணுக்கமான செய்திகளை வழங்க முடியும். கி.மு 411இல், லிசிஸ்ட்ராட்டா என்ற நாடகத்தை நடத்திய நகைச்சுவை நடிகர் அரிஸ்டோபேன்ஸ், அதில் ஏதென்ஸின் பெண்கள் பெலோபொன்னேசியப் போரின் போது சமாதான விதிமுறைகளை ஒப்புக்கொள்ள தங்கள் கணவர்களை வற்புறுத்துவதற்காக மேற்கொண்ட பாலியல் வேலைநிறுத்தத்தைப் பற்றி சித்தரிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
இது ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு இடையே மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்ட உண்மையான ஒரு மோதலாகும்.
நாடகத்தில் வரும் பல பெண்கள், தங்கள் இன்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. நகைச்சுவைக்காக அதிக காம இச்சைக் கொண்ட கழுதை-பெண்களாக அவர்கள் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும், நாடகம் ஒரு தீவிரமான திசையில் திரும்பும் ஒரு தருணத்தில் அரிஸ்டோபேன்ஸ் மிகவும் உறுதியான பெண்ணின் பார்வையை வழங்குகிறார்.
கணவர்களுடன் உடலுறவு கொள்ளாமல் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்யும் பிரதான கதாபாத்திரமான கதாநாயகி லிசிஸ்ட்ராட்டா, உண்மையில் போர்க்காலத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார்.
போர் பற்றி விவாதிக்கப்படும் இடங்களில் பெண்கள் இருக்கத் தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பெண்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தப்பட்டனர். மேலும், நீடித்த போர் என்பது திருமணமான பெண்களுக்கு நரகமாக இருந்தாலும், திருமணமாகாத பெண்களின் நிலை மேலும் மோசமானது, திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பையே அவர்கள் இழக்கலாம்.
பட மூலாதாரம், British Museum
பிரபலமான ஓடிபஸ் ரெக்ஸ் நாடகத்தை எழுதிய சோஃபோக்கிள்ஸ் மிகவும் பிரபலமான நாடக ஆசிரியர். அவருடைய டெரியஸ் என்ற நாடகத்தில் கன்னியாக இருந்து மனைவியாக மாறுவது எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரித்திருந்தார்.
“மேலும் இது, ஒரு இரவு நம்மை பிணைத்தது,” என்று கிரேக்க புராணத்தில் குறிப்பிடப்படும் ராணி புரோக்னே கூறுகிறார். “மிகவும் அழகாக இருக்க நாம் இதை ஆராதிக்க வேண்டும்” என்றும் அவர் சொல்கிறார்.
உயர் வகுப்பினரிடையே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வழக்கமாக இருந்தன. ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம் புரோக்னே விவரித்தது போல திசைதிருப்பக்கூடியதாக இருக்கலாம்.
பாலியல் குறிப்புகள்
பெண்கள் சில சமயங்களில் பாலியல் தொடர்பான எண்ணங்களை பதிவு செய்வார்கள். பித்தகோரஸின் வட்டத்தில் இருந்த கிரேக்க பெண் தத்துவஞானி தியானோ (சிலர் அவரை அவரது மனைவி என்று கூறுகிறார்கள்), தனது தோழி யூரிடைஸுக்கு அறிவுரைகளை வழங்குவதாகக் கூறப்படும் கடிதம் காலத்தால் அழியாதது என்று கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ‘ஒரு பெண், தனது கணவருடன் படுக்கைக்குச் செல்லும்போது தனது ஆடைகளுடன் சேர்ந்து தனது நாணத்தையும் களைந்துவிட வேண்டும். மீண்டும் ஆடை உடுத்தும்போது நாணத்தையும் அணிந்துக் கொள்ளலாம்’ என்று அவர் எழுதுகிறார்.
தியானோவின் கடிதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, அது உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், நவீன காலங்களில் பல பெண்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதை எதிரொலிப்பதாகவே இது இருக்கிறது, மேலும் இந்த அறிவுரையை அந்த கால பெண்கள் பின்பற்றியதாகத் தெரிகிறது.
பிரபல கிரேக்க கவிஞர் எலிஃபண்டிஸ், பெண்களுக்கு பாலியல் உதவிக்குறிப்புகளை வழங்குவதில் மிகவும் ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது, அதனால் அவர் இந்த தலைப்பில் புத்தகங்களை எழுதினார்.
இன்று அவரது படைப்புகள் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், ரோமானிய கவிஞர் மார்ஷல் மற்றும் ரோமானிய வாழ்க்கை வரலாற்றாசிரியர் சூட்டோனியஸ் இருவரும் இதைப் பற்றி குறிப்பிடுகின்றனர். பாலியல் ஆசைகளுக்குப் பெயர் பெற்றவரான பேரரசர் டைபீரியஸ், எலிஃபண்டிஸ் எழுதிய சில கதைகளின் பிரதிகளை வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.
பிற ஆண்களின் எழுத்துக்களில், பெண்கள் மேற்கோள் காட்டப்படும் இடங்களில், அவர்கள் தங்கள் காமத்தை வெளிப்படையாகக் காட்டாமல் அன்பின் அடிப்படையில் அதனை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இது, மார்ஷியல் மற்றும் கேட்டல்லஸ் உள்ளிட்ட அவர்களின் சமகால ஆண்கள் சிலரிடமிருந்து அவர்களை வேறுபடுத்துகிறது.
“ஒரு பெண், தன் காதலனிடம் அந்தரங்கமான கணத்தில் என்ன சொல்கிறாள் என்பதை காற்றிலும் ஓடும் நீரிலும் எழுதலாம்” என்று கேட்டலஸின் புனைப்பெயர் கொண்ட காதலி லெஸ்பியா அவரிடம் கூறுகிறார். படுக்கையறையில் “தலையணைப் பேச்சு” என்ற சொற்றொடர் நினைவுக்கு வருகிறது.
ரோமானிய பெண் கவிஞர்களின் படைப்புகளில் சிலருடையதே எஞ்சியிருக்கிறது. அவற்றில் சல்பிசியா என்ற கவிஞருடையதும் ஒன்று. தனது பிறந்தநாளன்று, தான் தனது காதலர் செரிந்தஸிடமிருந்து பிரிந்து கிராமப்புறங்களில் இருந்த துயரத்தையும், பின்னர் தான் ரோமில் இருக்க முடியும் என்ற நிம்மதி ஏற்பட்டதையும் ஒரு கவிதையில் விவரிக்கிறார்.
இந்தப் பெண்கள் தங்கள் காதலருடன் உடலுறவு கொள்வதைப் பற்றி உண்மையில் என்ன நினைத்தார்கள் என்பதை வெளிப்படுத்த, அதை விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்கள் மூலங்களில் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால் அப்ரோடைட் நன்கு அறிந்திருந்தபடி, மூடிய கதவுகளுக்குப் பின் பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு