29 டி20 போட்டிகள், 37.48 என்ற சராசரியுடன் 1012 ரன்கள் மற்றும் 189.51 என்ற வியப்பூட்டும் வகையிலான ஸ்டிரைக் ரேட்.
பாகிஸ்தானில் இந்தாண்டு (2025) கூகுளில் அதிகம் தேடப்பட்ட பேட்ஸ்மேன் சாதனைகள் குறித்த எண்கள் சில.
தன்னுடைய அதிரடியான பேட்டிங் மூலம் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே சர்வதேச கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா தனக்கென தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளார். அபிஷேக் ஷர்மா குறித்து அறிந்துகொள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான பாபர் ஆஸம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரீஸ் ரௌஃப் ஆகியோர் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை.
அபிஷேக் ஷர்மாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டவர்களுள் கிரிக்கெட் வீரர் ஹசன் நவாஸ், இர்ஃபான் கான் நியாஸி, சாஹிப்ஸாடா ஃபர்ஹான் மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் ஷர்மா இந்தாண்டு சில அதிரடியான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். இந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில், அவர் 40.75 என்ற சராசரியுடன் 163 ரன்கள் அடித்தார், ஸ்டிரைக் ரேட் 161 ஆக இருந்தது. அந்த தொடரை 2-1 என்ற அளவில் இந்தியா கைப்பற்றியது.
அதே ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 39 பந்துகளில் அதிரடியாக 74 ரன்கள் அடித்து, இந்தியா வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தார். இதையடுத்து, டி20 போட்டிகளில் மிளிரும் நட்சத்திரங்களுள் ஒருவராக அபிஷேக் ஷர்மா கருதப்பட்டார்.
அப்போது இந்தியா பேட்டிங் செய்ய இறங்கியபோது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரீஸ் ரௌஃப் இந்திய அணியின் தொடக்க வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரௌஃப் மற்றும் அபிஷேக் ஷர்மா இடையே சூடான விவாதம் நடைபெற்ற நிலையில், போட்டி நடுவர் தலையிட வேண்டியிருந்தது.
தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, சிக்ஸ் அடித்து இன்னிங்ஸை தொடங்கினார், தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் 39 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் ஆறு ஃபோர் மற்றும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
போட்டிக்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா கூறுகையில், “எந்தவொரு காரணமும் இன்றி அவர்கள் (பாகிஸ்தான் வீரர்கள்) எங்களை நோக்கி வந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நான் அப்படி பேட்டிங் செய்தேன்” என்றார்.
உணர்ச்சிவயப்பட்ட தந்தை
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பையில் அபிஷேக் ஷர்மாவின் திறமையான ஆட்டத்திற்கு பிறகு பிபிசி செய்தியாளர் பரத் ஷர்மா அபிஷேக்கின் தந்தை ராஜ்குமார் ஷர்மாவிடம் பேசினார்.
அப்போது ராஜ்குமார் பேசுகையில், “நான் முதல் தர கிரிக்கெட் விளையாடியுள்ளேன். என்னுடைய அணியில் உள்ள அனைவரும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர், ஆனால் நான் அதை விளையாடியதில்லை என என் அம்மாவிடம் கூறுவேன். என்னால் ஏன் விளையாட முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை, அது கடவுளின் விருப்பமாக இருக்கலாம். என் அம்மா அதற்கும் ‘மகனே பரவாயில்லை, நீ இந்தியாவுக்காக விளையாடவில்லை, ஆனால் உன் மகன் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவான்’ என கூறுவார்” என்றார்.
அந்த நாட்கள் குறித்துப் பேசியபோது ராஜ் குமார் ஷர்மா உணர்ச்சிவயப்பட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “இது மிக அற்புதமான நேரம், எனக்கு மிகவும் பெருமைமிகு தருணம். எல்லா பெற்றோர்களும் தங்கள் மகனோ அல்லது மகளோ சொந்த கால்களில் நிற்க வேண்டும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.” என்றார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மகன் கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்தார், போராடினார், கடுமையாக உழைத்தார். இன்றைக்கு, இந்தியாவுக்கு விளையாடுவது மட்டுமல்லாமல், வெற்றி பெறவும் செய்கிறார். அதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.”
பட மூலாதாரம், Matt Roberts – CA/Cricket Australia via Getty Images
யுவராஜ் மற்றும் ஷேவாக்கின் பாணி
அபிஷேக்கிடம் வீரேந்திர ஷேவாக்கின் ஆக்ரோஷம் மற்றும் யுவராஜ் சிங்கின் நேர்த்தியும் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அபிஷேக் ஷர்மா குறிப்பாக யுவராஜ் சிங்கால் ஊக்கம் பெற்றவர். ராஞ்சி கோப்பை போட்டியின் போது இருவரும் சந்தித்துள்ளனர்.
பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அபிஷேக் ஷர்மா மறும் ஷுப்மன் இருவருக்கும் ராஞ்சி கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என விரும்பியது. அப்போது உடல்நல பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த யுவராஜ் சிங், இந்திய அணியில் மீண்டும் இடம்பெற முயற்சித்துக்கொண்டிருந்த காலகட்டம். அப்போது, யுவராஜ் சிங் பிசிசிஐ அறிவுறுத்தலுக்கு ஏற்ப ராஞ்சி கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
யுவராஜ் சிங்கிடம் 19 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து இரண்டு பேர் வருவதாகச் சொல்லப்பட்டது. ஒருவர் தொடக்க வீரர் என்றும், மற்றொருவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்லப்பட்டது.
அதுகுறித்து ராஜ்குமார் ஷர்மா கூறுகையில், “தன்னிடம் ஏற்கெனவே பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பேட்ஸ்மேன் வேண்டும் என யுவராஜ் சிங் கேட்டார். ஆனால், தேர்வு செய்பவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர், இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
ஒரு போட்டியில் மூன்று அல்லது 4 வீரர்கள் முன்பாகவே ஆட்டமிழந்தனர். யுவராஜ் அப்போது பேட்டிங் செய்தார். அபிஷேக் களம் இறங்கினார். அபிஷேக் ஆடியதை யுவராஜ் சிங் பார்த்தார். அவர் 40 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அபிஷேக் களமிறங்கி 100 ரன்கள் எடுத்தார்.” என்றார்.
பட மூலாதாரம், CA/Cricket Australia via Getty Images
தன்னுடன் இணைந்து பயிற்சியெடுக்க முடியுமா என மைதானத்தில் அபிஷேக்கிடம் யுவராஜ் சிங் கேட்டதாக ராஜ்குமார் தெரிவித்தார். தான் அவரை கடவுளாக மதிப்பதாக யுவராஜ் சிங்கிடம் கூறிய அபிஷேக் ஷர்மா, அவரை பார்த்தே விளையாட கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். அப்போதிலிருந்து யுவராஜ் சிங் அபிஷேக்குக்கு பயிற்சி அளித்தார்.
யுவராஜ் சிங் – அபிஷேக் ஷர்மா இருவரும் இணைந்திருக்கும் வீடியோக்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாகின. அதில் ஒரு வீடியோவில் அபிஷேக் ஷர்மாவிடம் யுவராஜ் சிங், “நீங்கள் இன்னும் மேம்படவில்லை, சிக்ஸர்களை அடிக்கிறீர்கள், ஆனால் அதேசமயம் கிரவுண்ட்ஸ்ட்ரோக்குகளையும் விளையாட வேண்டும்.” என ஹிந்தியில் கூறுகிறார்.
அபிஷேக்கின் தந்தை கூறுகையில், “அபிஷேக்குக்கு யுவராஜ் தான் பயிற்சி அளித்தார். என் மகனை முழுமையாக கவனித்துக்கொண்டார். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுவாக்கினார். அபிஷேக் ஒரு நாளை கூட தவறவிடாமல் பார்த்துக்கொண்டார். உலக தரத்திலான ஆல்-ரவுண்டர் ஒருவர் பயிற்சியளித்தால் அவர் எந்தளவுக்கு செல்ல முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இது வெறும் தொடக்கம்தான்!” என்றார்.